முதுமை தெய்வமே

கருவறை சுகம் தந்து
கரும்பலகை அறிவு தந்து
கருணை தந்த - என் பீடமே
வீதியில் விட்டிட்ட பாவியானேன்
என் புன்னகை அனைத்தும்
கண்ணீராய் உன் முன்
காயங்கள் உண்டெனில்
மன்னித்துவிடு!!
மறந்துவிடாதே!!

இளமையில் வளமை தந்து
இதயத்தில் குடில் தந்து
இன்றளவும் நேசம் தந்து
இன்பம் தந்த - என் இறையே
உன்னை தாங்க தவறினேன்
நேசம் தாங்கிய இதயம்
நெருடலாய் உன் முன்
பாசம் உண்டெனில்
நேசித்துவிடு!!
வெறுத்துவிடாதே!!

புன்னகை கண்டிப்பு தந்து
புத்துயிர் தந்து
புதுமை தந்து
புகழ் தந்த - என் புத்தகமே
உன் முதுமை முக வரிகள் மறந்தேன்
நீ தந்த தேக குருதிகள்
பன்னீர் துளிகளாய் உன் பாதத்தில்
இரக்கம் உண்டெனில்
குணப்படுத்திவிடு!!
வதைத்துவிடாதே!!

என் வசந்தங்கள்
உன் வசந்தமாய்
உன் முதுமை மட்டும் மறந்த
என் முட்டாள் தனத்தை
என் கடவுளே நீ மன்னிப்பாயா??
பாதியில் மாறிய என் பாவி மனதை
கை பிடித்து கரை சேர்ப்பாயா??
உனக்கும் இந்நிலைமை வரும் சபித்திடாதே
உன்னுள் உள்ள என்னை மன்னித்துவிடு
என் இதய தெய்வமே!!

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (13-Oct-17, 7:14 pm)
Tanglish : muthumai theivame
பார்வை : 109

மேலே