பல்லவன், வைகை ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைப்பு ரயில்வே நிர்வாக முடிவுகளில் தலையிட உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

ரயில்வே நிர்வாகம் எடுக்கும் முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பி.கார்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில், வைகை, பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறைக்கப்பட்ட பொதுப்பெட்டியை மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்குவந்தபோது ரயில்வே நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், வைகை மற்றும் பல்லவன் அதிவிரைவு ரயில்களில் 5 பொதுப்பெட்டிகளில் ஒரு பொதுப்பெட்டி முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் முன்பதிவு இருக்கைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் தினமும் 140 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் எனக் கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்து நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல் குத்தூஸ் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:

ரயில்வே நிர்வாகத்தின் முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் 2011-ல் ஜெ.டி.சூர்யவான்சி வழக்கில் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் முடிவெடுப்பதற்கான காரணங்கள் மற்றும் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது மட்டுமே நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது.

பொதுநலன் சார்ந்த விஷயங்கள் அல்லது பொதுமக்கள் ஆர்வம் காட்டும் விஷயங்கள் மட்டுமே பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்வதற்கான அடிப்படை காரணங்கள் ஆகாது. அரசியலமைப்பு சட்டம் அல்லது பிற சட்டப்படி செய்ய வேண்டிய கடமைகளில் அரசுகள் தவறும்போதோ, சட்ட மீறலில் ஈடுபடும்போதோ நீதிமன்றம் தலையிடும். ஆனால் இந்த வழக்கில் அதுபோன்ற நிலை எழவில்லை. எனவே ரயில்வே நிர்வாகம் எடுத்த முடிவில் தலையிட வேண்டும் என மனுதாரர் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
விமர்சனக் கருத்துக்கள் --
நீதிபதிகள் மக்கள் நலனுக்காகவே தீர்ப்பு அளிக்கவேண்டும்
நீதி கிடைக்க மக்கள் போராடுவோம்
அரசு தனியார் நிறுவனங்களுக்காக நீதிமன்றங்கள் அமைக்கப் படவில்லை
நீதி அரசர்கள் மக்கள் போராட்டத்தை தூண்டும் இன்றைய சட்டத்தை கையில் எடுக்கும்போது பொது ஜனங்கள் நலனை மனதில் கொள்ளவேண்டும்

எழுதியவர் : (14-Oct-17, 7:01 pm)
பார்வை : 27

மேலே