இளைஞரின் வானம்

என்று விடியும் எங்கள் இளைஞரின் வானம் ??
என்று கலையும் இந்தத் தூக்க நிதானம் ??
என்றெம திருவிழியும் விடியலைக் காணும் ?
என்றந்த அழகினை யாம்பெறக் கூடும் ?
கொன்றிடும் கும்மிருள் இரவினில் எல்லாம்
கொட்டடித் தாடிக் கூத்தடித் திங்கே
நன்றெனக் கூறும் காலையில் எல்லாம்
நற்றுயில் கொள்வ தெங்ஙணம் போகும் ??

தூக்கமும் சோம்பலும் எம்மிளை யார்க்கோ ?
சுடர்விடும் விடியலும் வேறினி யார்க்கோ ?
ஆக்கமொன் றருளுதல் நம்கடன் என்றே
அறிந்தபின் துயிலினில் ஆழ்ந்திட லாமோ ?
போக்குவம் காலையில் துயிலினை நாமும் !
பொழுதினை இன்பமாய் மாற்றுவம் நாளும் !
சீக்குடை யார்கொலொ ? இளைஞரின் கூட்டம் ?
சிங்கமோ காலையில் துயில்கொளப் பார்க்கும் ??

நேரத்தில் உறங்குதல் அறிவியல் ஆகும்
நெஞ்சிலிதைக் கொண்டு வாழுவம் நாமும் !
சாரத்தையே யிந்த இயற்கை வழங்கும் !
சக்தியும் உடல்கொளும் சீரில் விளங்கும் !
காரணம் காரியம் சொல்வதை விட்டுக்
காலச் சுழற்சியில் ஓடுவம் கற்று !
வீரமெலாம் உடல் நலத்தினில் சேரும்
வியன்சித் திரமிடச் சுவருறல் வேண்டும் !!

-விவேக்பாரதி
17.10.2017

எழுதியவர் : விவேக்பாரதி (17-Oct-17, 2:54 am)
பார்வை : 86

மேலே