கடலுக்கு அடியில் கலியாணம்

(இது அழைப்பிதழ் இல்லாத கடலுக்கு அடியில்
கற்பனயில் நடக்கும் திருமணம்)


கயல்மீனார் கண்டிப்புடன் கலியாணம் பேசிடவே
முரல் மீனார் முன்னின்று முழுவதையும் முற்றாக்க
சுறாமீனார் சுறுசுறுப்புடன் சுற்றத்தாரை வரவேற்க
ஓராவும் ஒதுங்கி நின்று மாவிடிக்க
சூடை சூடாய் பணியாரம் பண்ணிவைக்க
பாரையும் பலமாய் பந்தல் கட்ட
சள்ளை சடுதியாய் சந்தனம் கொடுத்துதவ
வெற்றிலையும் தட்டமும் விலைமீனார் கொண்டுவர
மணலை மகிழ்ச்சியாய் மாப்பிள்ளையை அழைத்துவர
எறியால் எறிவெடியுடன் எழுந்து நின்றிடவே
திரளி திடுக்கிட்டு திரம்பி ஓடிடவே
நெத்தலி நெருங்கி நின்று நன்றாய் இடம்கொடுக்க
ஐயிரை ஐயராய் அருகில் நின்றிடவே
அம்பட்டண் கத்தி – குடிமகனாய் தன் கடமையை செய்ய
ஒட்டி பெண்ணுக்கு ஒட்டியாணம் கட்ட
கலவாய் ஆ வென்ற வாயோடு நிற்க
கீச்சான் கீச்சிட்ட குரலில் வந்தோரோடு பேசிட
குதிப்பு குதித்த படி வேலை செய்ய .
கும்புளா – வாசலில் கும்பம் வைக்க
கூந்தா பெண்னின் கூந்தலைப் பிண்ணி விட
கொண்டை – பெண்ணின் கொண்டைக்கு மலர் சூட
கடற்கன்னிகள் பெண்னோடுய புடை சூல வர
முத்துச்சிப்பி – பெண் கழுத்தில் முத்துமாலை அணிய
கூனிப்பாரை – கூனிய படி வேலை செய்ய
கோழி மீன் – அடுப்படியில் கோழிக் கறி சமைத்திட
சாம்பல் – அடுப்புச் சாம்பல் அள்ளிட
சூரை கூரையை தட்டில் கொண்டு வர
சிலேபி – வந்தோருக்கு ஜிலேபி பரிமாற
திருக்கை –திரு திரு வென்று விழிக்க
பாலை பெண்னனுக்கு பால் கொண்டு வர
மணலை மீன் வாசலில் மண் தூவ
மத்தி மத்தளம் வாசிக்க
வழுக்குச்சுறா வாசலில் வழுக்கி விழ
வஞ்சிரம் –பெண்ணுக்கு காஞ்சிபுரம் கொடுக்க
வவ்வால் – தொங்கிய படி தோரணம் கட்ட
வீச்சு வந்திருந்த கன்னிகளுக்கு கண் வீச
சேரி பெண்ணை சேடியாய் அழைத்துவர
மன்னா மகிழ்வுடன் மந்திரம் ஓதிடவே
சீலா சிரிப்புடன் காளா கழுத்திலெ
மாலையிட்டான் மனம் மகிழ்ந்தபடி
(யாவும் கற்பனை)

பி.கு: எனது மனைவி 60 வருடங்களுக்கு யாழ்ப்பாணம் வேம்படியில் படித்த கவிதை மேலும் பல மீன்களையும் சேர்த்து நான் எழுதிய புதுக் கவிதை. )

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (18-Oct-17, 6:32 am)
பார்வை : 85

மேலே