எனது கல்லறை வாசகம்
முதலில் எனக்கு கல்லறை வேண்டாம்
கல் மட்டும் போதும்
இறந்த பின்னும் எனது உடல் எல்லோருக்கும் பயன்படட்டும்
மருத்துவர்களுக்கு உடல் உறுப்புகளாக
இல்லை இல்லை
பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ உணவாக
இல்லை இல்லை
மண்ணுக்குள் துணி போர்த்திய உடலாக
புழுக்கள் உண்ணும் உணவாக, நல் உரமாக
இல்லை இல்லை
அதற்கு முன்னதாக எதாவது சாதிக்க வேண்டுமே
எனது எண்ணங்களை எல்லாம் வார்த்தைகளாக கொட்டிவிடவா
போதும் ஏற்கனவே உள்ள நல் எண்ணங்கள் எல்லாம்
குப்பை கிடங்கில்.
கேட்பாரற்று...வாசிப்பாரற்று...(நூலகங்களில்)
கூளங்களாய்...
கலை படைப்புகளாய் மாற்றிவிட்டால்...
மலினப் படைப்புகளுக்கே இங்கு மவுசு அதிகம்
மஞ்சள் ... நீலம்... என எல்லா நிறங்களிலும் ஊடகம்
மலினத்தால் விரசத்தால் தழைக்கிறது
புரட்சி பேச்சாளனாய் மாறி பட்டி தொட்டிகளெல்லாம் அனல் பிரச்சாரம்...
சமூக மாற்றத்தை நோக்கி...
சமமற்ற... சாதி பேதம் பாராட்டும்...வர்க்க பேதத்தால் வீங்கிய..
பசி கொடுமையை தீர்க்க இயலாத...(இன்னும்... இன்னும்...)
மேற்சொன்ன யாதும்
நம் மண்டைக்குள் மின்னல் வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் நரம்பு பிண்டமாய் விளங்கும்
மூளைக்குள் தோன்றியதே...
மென் உணர்வுகளின் ஆசனமாய் விளங்கும்
நேயம் பொதிந்த இன்னொரு மூளை இதயம் சொல்கிறது:
"கொடுத்து கொண்டேயிரு... வாழ்ந்து கொண்டே இருப்பாய் "
இறந்த பின் நீ முடிவு செய்வது எதுவும் இல்லை.
இருக்கும் போதும் 'உன்' புகழ் பரப்பும் செயல்களிலே உன் எண்ணங்கள் நிறைகின்றன.
ஆக,
தான்மை அழிய தாராளமாய் கொடு.
உண்மை பொழிய உயிரையும் கொடு.
கொடு... உவந்து கொடு...உயிருள்ளவரை கொடு...
(இந்த மூன்று வரிகளை கல்லறை வாசகம் ஆக்கினால் என்ன?
வேண்டாம் வேண்டாம் இறந்த பின்னாவது தான்மை அழிந்தொழியட்டும்)