கழிவறைக் கண்ணீர்

நாங்கள் தினந்தோறும்
அழுதுகொண்டே இருக்கிறோம்
காலை எழுந்தவுடன்
கண்ணீர் சிந்துகிறோம்
கழிவு கலந்த உணவை
உண்ணுகிற போது அழுகிறோம்
உங்கள் பிச்சைக்காக நாங்கள்
அழுது கொண்டே தான் இருக்கிறோம்
இச்சமூகத்தில் நாங்கள் பிறந்தபோது
சுவாசித்த முதல் காற்று
உங்கள் வீட்டு கழிவறை நாற்றம்
எங்கள் நாட்கள் இருட்டாக தான் இருக்கும்
ஏனென்றால் எங்கள் வாழ்வின் சூரியன்
உதயமானதே இல்லை
எங்களது மரணம் உங்களது
திட்டமிடப் பட்ட கொலை
எங்கள் கண்களில் ஈரமும் இல்லை
கதறுவதற்கு நேரமும் இல்லை
நாங்கள் கழுவ வேண்டிய கழிவறைகள்
இங்கே நிறைய உள்ளன
எங்களிடம் காயங்களும் கண்ணீரும்
நிறையவே உள்ளன
நிராகரிப்பின் நிழல் நாங்கள்
பிச்சை எடுப்பவருக்கு உணவு
கிடைக்கும் வரை தான் கண்ணீர்
ஆனால் கழிவு கலந்த உணவைப்
பார்க்கும் போது தான்
எங்கள் கண்ணீர் தொடங்கும்
நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான்
ஆனால் தாழ்வானவர்கள் இல்லை
எங்களின் வீழ்ச்சிக்கு காரணம்
எங்கள் குலம் அல்ல
மனித மலம் அள்ளச் சொல்லும்
உங்கள் மனம் தான்
வாழ்தலைக் காட்டிலும் செத்தொழிதலே
எங்கள் வரம்...
விடியலை நோக்கிய
கழிவறைக் கண்ணீர் இது

எழுதியவர் : சந்தியா (19-Oct-17, 6:35 pm)
பார்வை : 92

மேலே