கல்லும் கடவுளே

(வெண்பா)
பதினெண்சித் தில்மூலர் பௌத்ரன்சி வாக்யர்
மதிநிறைப்பா ஆயிரம்பு னைந்தார் --- சதியாய்ப்
பகுத்தறிவா ளர்திரிக்க மக்கள் நகுத்து
மகுடிநாக மாகமானார் ஏன்

கல்மீதுப் பூவைத்து மெல்ல முணுமுணுத்து
நல்லதெனச் சுற்றி வருகிறார் --- கல்சட்டி
அட்டில் கறிசுவைச் சட்டுவம் சொல்லாது
உட்கிடை நாதனுள்ளி ருப்பு
--- ராஜ பழம் நீ (24-Oct-2017)


சிவவாக்கியர் 1௦௦௦ என்ற பாடல்களில் 638 வது பாடல் கருத்து மேலே சொல்லியது போல அமைந்துள்ளது. இதைக் கண்ட அரைவேக்காடுகள் இந்தக் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அக்கால மேடைகளில் இந்துக்களை மனம் நோக பேசிவந்தார்கள்... ஆனால் சிவவாக்கியர் 651 வது பாடலில் கல்லும் தெய்வமாகும் என்று கூறியக் கருத்தைச் சொல்லாமல் மறைத்துப் பேசித்தான் கைத்தட்டல் வாங்கினர்.

சிவவாக்கியர் எழுதிய 651 வது பாடல்
:(சந்தக்கலிவிருத்தம்)

ஐந்துஎட்டு மென்றபோது நட்டகல்லும் தெய்வமே
சந்தையை யொழித்தபோது சிந்தையொன்ற தாகுமே
பந்தமுள்ள மானிடர் பகுத்தறியா தழிவதால்
எந்தைநாத னென்செய்வா னீரறிவீர் பித்தரே!

கருத்து:
அகர உகர மகர என்ற மூன்றும் நமசிவாய என்ற ஐந்துடன் சேர நட்டக்கல்லும், மனம் ஒரு நிலையாக்க சந்தேகமொழிந்து சிந்தைஒன்றாகி வணங்கக் கல்லும் தெய்வமாகும்.. ஐந்தையும் எட்டையும் மானிடர் பகுத்தறியாது அழிகின்றார். நாதனாகிய எம் கடவுள் எங்கும் வியாபித் திருக்க அவர் என்ன செய்வார் பித்தரே அறிந்துகொள்ளுங்கள் என்பதாகும்.

எழுதியவர் : ராஜன் பழனி (24-Oct-17, 5:16 pm)
பார்வை : 301

மேலே