நீலக்குருதி

நீல நிறமெனில் வானமே இங்கு
ஆழக் கடலுமே நீலமே இங்கு
நீலக் குருதியை எதுவெனச் சொல்ல‌
நீரைச் சொல்வதால் தவறேதும் உளோ..

உப்பு நீருக்கு அழிவேதும் இல்லை
தப்பு செய்திடும் மனிதனே தொல்லை
நல்ல நீரினை முழுவதும் கொள்ளை
அவனும் அடித்திட‌ அழிந்திடும் முல்லை

அளவுக் கதிகமாய் வீட்டினுள் இரைப்பான்
பஞ்சம் வந்திட தெருவினில் குரைப்பான்
உதவி செய்திடும் பொழுதினில் குறைப்பான்
ஊழல் பணத்தையோ மறைவினில் நிறைப்பான்

நன்னீரும் தீர்ந்திடும் நாளும் ஒன்றுண்டு
எங்கும் இருந்திடும் ஏதும் பயனின்றி
ஓடும் உலகமும் இயக்கம் நிறுத்திடும்
மனிதன் சிந்தனை அவனை வருத்திடும்

உலகின் குருதியாய் நீரன்றோ உண்டு
இருக்கும் மட்டுமே மனிதன் தப்புவான்
நீலக் குருதியை நிந்தித்தால் அவன்
செருக்கை அடக்கிட காலம் பதில்சொல்லும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 4:11 pm)
பார்வை : 92

மேலே