என் காதல் ராணியே
நீ
சிந்தும் புன்னகைகளை பிடித்து
சிறையில் அடைப்பேன்
ஆயுள்கைதியாக்கி என்னுடன் வைத்துக்கொள்ள
உன்
காலடி சுவடுகளை கவர்வேன்
கவிதையாய் உன்னை வரைய
உன் மீது மோதும்
வறண்ட காற்றுக்கும் பரிசளிப்பேன்
தென்றல் என்ற பெயரை
நீ தீண்டிய இடங்களெல்லாம் மலரும்
பூக்களாக
கார்மேகம் விட்டுச்சென்ற உனது கூந்தல்,
உதிர்ந்த பூக்களுக்கும் உயிர் கொடுக்கும்
புள்ளிமானின் புள்ளியைத் திருடி
பொட்டென வைத்துக்கொண்டாய்
ரோஜாவின் இதழை மேனியில்
வர்ணம் பூசிக்கொண்டாய்
நிலவொளியில் நடக்கும் நேரம் உன்
நிழலும் கூட அழகுதான்
வெயில்பட்டு கண்சுழிக்கும் நேரம் உன்னை
இமையாய் பாதுகாக்கும் வாய்ப்புகொடு.,
வேலையாக அல்ல கடமையாய்
மொட்டுகளும் எண்ணிக்கொண்டேதான் இருக்கின்றன
பூவாய் மாறி நீ பறிக்கும் நாட்களை
உன்னோடு இருக்கும் காலம்
நகர மறுக்கிறது
உனக்காய் காத்திருக்கும் காலம்
நகர துடிக்கிறது
சிறு பூக்கள் என் மேல் மோத
புயலென நீயும் வந்தாய்
புன்னகை கொஞ்சம் வீசி
புதுப்புது பார்வை பார்த்தாய்
சிந்தும் மணிமுத்தாய்
சிதறி நானும் விழுந்தேன்,
சிக்கிக்கொண்டேன் பின்
உன் சிறையில்தானே எழுந்தேன்.