கொண்டாடப்படாத காதல்

(நான் காதலிக்கவில்லை என்ற சொல்பவர்கள் உண்டு ஆனால் காதலின் ஸ்பரிசம் அறியாதவர்கள் மனிதர்களாய் இருக்க முடியாது.இது மறைந்து போன ஒரு காதலின் காலடி சுவடுகளை தேடும் ஒரு கதையாக இருக்கக்கூடும்)


"கௌஷிக்.,கௌஷிக் கொஞ்சம் நில்லுடா..." என்று கத்திக்கொண்டே அவன் பின்னல் ஓடினான் பிரகாஷ்.நண்பன் ஓடிவருவதை கண்ட கௌஷிக்கின் கால்கள் ஒரு நிமிடம் தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது.


"என்னடா,என்ன ஆச்சு?" முகத்தில் அவசர தீ சுடர்விட்டெரிய அவன் உதடுகள் வினவியது.


"ரயில் ஏற  அவசரத்துல சாப்பாட்டை மறந்துட்டேயே.இடைவெளியில் மறக்காம சாப்பிட்டு விடு" என்று ஒரு பொட்டலத்தை நீட்டினான் பிரகாஷ்.


புன்முறுவல் பூத்தபடியே,அதை  வாங்கிக்கொண்டு. தன் நடையை தொடர்ந்தான்.


"சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வரை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் தளம் எண் இரண்டில் இன்னும் 5 நிமிடத்தில் புறப்பட தயாராக இருக்கிறது" என்ற குரலை கேட்டதும் கடிகாரத்தை பார்த்தான் கௌஷிக் மணி 10.15.விறு விறு சென்று ரயிலை பிடித்து பெயர்ப்பலகை சரிபார்த்து உள்ளே சென்றான்.


"எண் 11"-இது தான் என்ற மகிழ்ச்சியில் தனக்கே உரிய ஆசனத்தில் அமர்கிறான்.அவன் மகிழ்ச்சிக்கு காரணம் அது அவனின் ராசியான எண்ணும் கூட.


 கௌஷிக்,சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான்.28 வயதில் நல்ல வேலை.நல்ல சம்பளம்.அலுவலகத்திலும் நல்ல பேர்.6 ஆண்டுகள் கஷ்டப்பட்டு இப்பொது அந்த நிறுவனத்தின் மேலாளராக இன்னும் 3 மாதத்தில் உயரப்போகிறவன்.கடுமையான உழைப்பாளி.அதைவிட சிறந்த சிந்தனையாளன்.தொழிநுட்பத் துறையில் வேலை செய்தாலும் இலக்கியத்திலும்,காலையிலும் ஆர்வம் உள்ளவன்.இரண்டு வாரங்களுக்கு முன் "உன் தங்கைக்கு திருமணம் நிச்சியமாகி இருக்கிறது" என்று அம்மா தொலைபேசியில் சொன்ன பொது அனந்தமாகத்தான் இருந்தது அவனுக்கு.வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு இன்று தான் ஊருக்கு புறப்படுகிறான்.


பலத்த சத்தத்தோடு ரயில் முன்னேறியது.தன்னை தவிர மற்ற 5 சீட்டுகளும் காலியாக இருப்பதை கண்டவன் சட்டென்று தன் கொண்டு வந்த பையில் இருந்து ஜெயமோகனின் அறம் சிறுகதைகள் புத்தகத்தை எடுத்தான்.தன்னை மறந்து ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பி கொண்டிருந்தான்.வாசிப்பது என்றால் அவனுக்கு அலாதி பிரியம்.


1 மணிநேரத்திற்கு பிறகு ரயில் காட்பாடியில் நின்றது.தன் கடந்த கால மகிழ்ச்சிகளின் எச்சம் அவன் கண் முன்னாள் தோன்றப்போகிறது என்ற ஆனந்தம் புத்தகம் வாசித்து கொண்டிருந்த அவனை ஆட்க்கொள்ள வாய்ப்பில்லை.அழகிய கண்கள் உடையவளும்,நீல நிறமுடையவளும்,பார்த்தாலே சாமர்த்தியவாதி என்று யூகிக்க கூடிய ஒரு பெண்.கௌஷிக்கின் எதிர் இருக்கையில் வந்தமர்ந்தாள்.தான் கொண்டுவந்த பைகளை சரிசெய்வதில் கவனமாக இருந்தால்.அதுவரையில் புத்தகத்தால்  முகத்தை  மூடிய கௌஷிக் புத்தகத்தை இறக்கினான்.அப்போது தான்  பாழடைந்து போன தனது சந்தோசங்கள் எல்லாம் வண்ணம் தீட்டப்பட்டதாய் உணர்ந்தான்.இறுகிப் போன அவனது உள்ளம் அவளை கண்டதும் உருகியது.


"ஹே கௌஷிக்.............பிரித்திகா..."


இருவரும் ஆச்சரியப்பட்டு பெயர்களை பரிமாறிக்கொண்டார்கள்.கௌஷிக்,பிரித்திகா இருவரும் கல்லூரி நண்பர்கள்.கோவையில் 4 ஆண்டுகள் ஒன்றாக படித்தவர்கள்.நல்ல நண்பர்கள்.6 ஆண்டுகளுக்கு பிறகு இரு துருவங்கள் பார்த்துக் கொண்டன.


பிரித்திகா...எப்படி இருக்க?நீ எப்படி இங்கே?ஆச்சர்யத்தில் இருந்து மீள முடியாதவனாய் கேட்டான் கௌஷிக்.


"கௌஷிக்.கல்லூரியில் நான் சொன்னது போலவே சிறந்த அழகுக்கலை நிபுணரா இருக்கேன்.சம்பளம் அதிகம் இல்லைனாலும் மன மகிழ்ச்சியோட இருக்கேன்.என் இலட்சியத்தை நோக்கி போய்கிட்டு இருக்கேன்.இப்போ ரெண்டு நாள் விடுமுறைக்கு வீட்டுக்கு போறேன்" இடைவெளியில்லாமல் பேசி முடித்தால் அவள்.


நீயும் பிசினஸ்ல பெரிய ஆள வரணும் னு நினச்சேயே..?


அவள் முடிப்பதற்குள் தானாகவே தொடங்கினான் அவன்.


"நானும் என் இலட்சியத்தை நோக்கி தான் போய்கிட்டு இருக்கேன் பிரித்திகா.இப்போ நான் வேலை பாக்குற கம்பெனியோட மேனேஜர் ஆகப்போறேன்." என்றான்.


"ஓ ....அருமை " என்றால் அவள்.


இருவரும் லட்சியவாதிகள்.பயணங்கள் வெவேறானாலும் அதை அடைவதற்காக இருவர் தேர்ந்தெடுத்த பாதை ஒன்று தான்.


இப்போ ஊருக்கு விடுமுறைக்கா ? கேட்டால் அவள்.



"இல்லை.திருமணத்திற்கு.."அவன் சட்டென சொன்னான்.ஒரு நொடியில் உள்ளாரா உடைந்து போனால் பிரித்திகா.ஒரு நொடி இடைவெளி விட்டு "தங்கைக்கு" என்ற அவன் சொன்ன பிறகு தான் வாடிய அவள் முகத்தில் கொஞ்சம் புன்னகை பூக்க தொடங்கியது.கொஞ்ச நேரம் அங்கே ரயில் சத்தம் மட்டும் தான் கேட்டுக்கொண்டிருந்தது.மௌனம் இடைக்கால அரசு நடத்தியது அங்கு.


பிரித்திகா கல்லூரி நாட்களை அசை போடா தொடங்கினாள்.அன்று தேர்வுக்கு கட்ட வேண்டிய பணத்தை தொலைத்து விட்டு ஒடிந்து போய் உக்கார்ந்திருந்த போது அங்கும் இங்கும் அலைந்து கௌஷிக் தனக்காக பணம் கட்டிய போது முதன் முதலாய் அவன் மீது வந்த மரியாதையை நினைத்துப்பார்த்தாள்.வைரஸ் காய்ச்சல் வந்து படுத்திருந்த போது அவன் காட்டிய அக்கறையை நினைத்து இப்போது உள்ளுக்குள் ஆனந்த கண்ணீர் வடிக்கிறாள்.தான் அழகுக்கலை நிபுணராக வேண்டும் என்றும் சொன்னபோது எல்லோரும் ஏளனம் செய்த போது அவன் மட்டுமே அதை ஊக்கப்படுத்தியதை நினைத்து உறைந்து போகிறாள்.இந்த 8 ஆண்டு கால வாழ்க்கையில் அவன் உடன்  இருந்திருந்தால் தைரியமாக இருக்கும் என்று அவள் பலசமயம் நினைத்திருப்பாள்.ஆனால் அப்போதும் இப்போதும் அந்த வார்த்தைகளை அவனிடத்தில் சொல்வதில் அவள் மனம் உதடுகளுக்கு ஆணையிடவில்லை.நட்பு,குடும்பம்,லட்சியம்,நம்பிக்கை இவற்றுள் ஒன்றோ அதற்கு மேற்பட்டதோ காரணமாக இருக்கலாம்.


அவள் மரங்களை வேடிக்கை பார்த்து வருவதை ரசித்து கொண்டிருந்த கௌஷிக்ன் மனதில் பழைய புயல் காத்து கொஞ்ச நேரம் வீசியது.இந்த உலகமே தன்னை வெறுப்பதை போல் உணர்ந்த அவனுக்கு அவளது சொற்களே அன்று  அமுதம் ஆனது.தனக்குள் உறங்கி கிடந்த நம்பிக்கைகளை தனக்கே அறிமுகப்படுத்தியதில் அவளுக்கு அதிகம் பங்கிருக்கிறது என்பதை அவன் மனசு அவனுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.அவளோடு இருந்த நேரங்களெல்லாம் அவன் அன்போடு இருப்பதாய் உணர்ந்தான்.இந்த நேசம் தொடரதா என்ற கேள்விகள் பலமுறை அவனது உள்ளத்தை கிழித்திருக்கின்றன.அந்த கேள்வியை அவளிடம் கேட்பதில் இப்போதும் அவனுக்கு தயக்கம் தான்.அவள் மட்டுமே அதற்கு காரணம்.


இருவரும் உண்மையாக இருக்கும் போது காலம் அவர்களை ஏமாற்றி விடுகிறது.கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு தொலைபேசியோடு அவர்கள் நட்புறவும் துண்டிக்கப்படுகிறது.அவனும் அவளும் தங்கள் கனவுகளின் கரம் பிடித்து செல்கிறார்கள்.சில வழிகளை மனதின் ஆழத்தில் புதைத்துக் கொண்டு.இன்று தான் அந்த காயங்கள் கொஞ்சம் எட்டி பார்க்கின்றன.


திடிரென்று அலைபேசி சத்தம்..திடுக்கிட்டேன் எடுத்தான் கௌஷிக்.


அது பிரகாஷ் தான்.கௌஷிகின் உற்ற நண்பன்.தன் காதலியை கரம்பிடிப்பதில் கௌஷிக் தனக்கு உறுதுணையாய் இருந்தான் என்ற ஒற்றை காரணத்திற்காக அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணுகிறன் பிரகாஷ்.


"ஹலோ..பிரகாஷ்.இப்போ திருப்பூர் தாண்டி போய்கிட்டுஇருக்கேன்.இன்னும் அரைமணிநேரத்தில் கோவைக்கு போயிடுவேன்" என்றான் கௌஷிக்.


"ஒரு புது வரன் வந்திருக்கு டா.நீ ஒருமுறை பாரு.." என்று பிரகாஷ் சொன்னதும் கௌஷிக்கு திடிரென்று கோவம் வந்தது."உனக்கு எத்தனை தடவ சொல்ல கல்யாண பேச்சை எடுக்காதான்னு ...." என்ற சொன்னவன் போனை துண்டித்தான்.


ஒருவித பரிதாபப் பார்வையை அவன் மீது படர்திக் கொண்டு அவள் கேட்டால் "ஏன் நீ இன்னும் திருமணம் பண்ணிக்கல ..?"


சலித்த வார்த்தைகளை "பிடிக்கல .." என்று சொல்லிவிட்டு ஜன்னலோரம் திரும்பினான் அவன்.


"ஏன் கௌஷிக் நல்ல சம்பளம்,உன் லட்சியம் வேற நிறைவேறப்  போது நீ  நிறைவாய் உணர்கிறாயா ? என்றால் ஆர்வமாக.


ஒரு அங்குலம் முன்னாளல்  வந்து வெளிப்படையாய் அவன் சொன்னான் "எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாததை போல ஒரு உணர்வு.அப்பறம் எப்படி நிறைவாய் உணர?"


அவன் முடித்த பிறகு தனக்கும் அப்படிப்பட்ட உணர்வு தான் இருப்பதாக அவனிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்தாள்.


இன்னும் 15 நிமிடம் தான்.கோவை ரயில் நிலையத்தில் இருவரும் பிரிந்துவிடும் நேரம்.அந்த பிரிவு அவனுக்கு பதற்றத்தையும்,பயத்தையும் தந்தது.இருவரும் மௌன மொழியால் பிரிவு உபசார விழா நடத்தினார்கள்.தொலைபேசி தொடர்பென்பது அப்போது இருவருக்கும் நினைவுக்கு வரவில்லை.அவர்கள் உணர்வுகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள்.


"பிரித்திகா...." அவன் குரலில் அன்பும்,ஏக்கமும்,சோகமும் ஒரு சேர படிந்திருந்தது.பாம்பாட்டியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட பாம்பைப் போல அவன் என்ன சொல்ல போகிறான் என்பதை கேட்பதற்கு ஆர்வமாய் இருந்தான்.முதன் முறையாக அப்போது தான் அவன் உதடுகள் கதகளி நடனம் ஆடின.மூளைக்கும் ,மனசுக்கும் நடக்கின்ற போராட்டத்தில் அவன் உதடுகள் பகடைக்காயாகி சிரமப்பட்டது. 

அந்த போராட்டத்தை முடித்து அவனது மூளை உதடுகளுக்கு கட்டளை இட்டது  "பத்திரமா போ " என்ற கடைசி வார்த்தை உதித்தான் .


ரயில் கோவையை அடைந்தது.இருவரும் நடந்து போனார்கள்.வெவேறு திசைகளில் நினைவுகளை சுமந்து கொண்டு.பூமிக்கு வராமலேயே ஒரு காதல் பிரசவத்திலேயே இறந்து போயிருக்கிறது.கொண்டாடப்படாத காதல்களுள் அவர்களுடையதையும் ஒன்றென வானத்து தேவதை கணக்கெடுத்துக்  கொண்டது.நம்பிக்கை,உழைப்பு,விவேகம்,திறமை,அறம் ,ஒழுக்கம் இவற்றைப் போல நிறைவான வாழ்விற்கு காதலும் அவசியமாகிறதோ ?




கோவை.சரவண பிரகாஷ்.

எழுதியவர் : சரவண பிரகாஷ் (7-Nov-17, 3:29 pm)
சேர்த்தது : சரவண பிரகாஷ்
பார்வை : 457

மேலே