நிம்மதி கிடைத்த கதை

என்ன வேணும்..? - கடைக்காரன் கேட்டான்

2 மூட்டை நிம்மதி வேணும்...

அதுலாம் இங்க கிடைக்காது...

வேற எங்க கிடைக்கும்...

'நேரா போய் வலது பக்கம் திரும்பி முதகடைல போய் கேளு'- கிடைக்கும்னு சொன்னான்.

நானும்.. நேராபோய் வலதுபக்கம் திரும்பினா,
அங்க ஒரே ஒரு கடைதான் இருந்துச்சி..

ஆனா அது கடை இல்ல...

குமரன் மனநல மருத்துவமனை.

'பயபுள்ள நம்மள கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டானே'னு மனசுல நினச்சிட்டு, திரும்ப நடந்து அவங்கிட்டயேபோய்...

"தம்பி நிம்மதி வாங்கிட்டேன்..,
அட்ரஸ் சொன்னதுக்கு ரொம்ப நன்றிப்பா" னு சொல்லிட்டு, வேற யார்கிட்டையாவது கேக்கலாம்னு கிளம்புனேன்..

நடந்து போய்க்கிட்டே இருக்கேன்...
வழியில ஒரு அக்கா நடந்து வந்தாங்க..

"அக்கா... இங்க நிம்மதி எங்க கிடைக்கும்னு தெரியுமா.."

உடனே அவங்களும்.. கைய வலது பக்கமா காட்டி...

"அங்க... ஒரு செட்டியார்கட இருக்கும்பா.. அங்க போய் கேட்டா... எல்லா மளிகைஜாமானும் இருக்கும்' னு சொன்னாங்க...

என்னது மாளிகைசாமானா.... சரி..னு
நானும் செட்டியார் கடைய கண்டுபிடிச்சி,
"ரெண்டு மூட்ட நிம்மதி வேணும்" னு கேட்டேன்..

"இங்க மூட்டை வியாபாரம்லாம் பன்றத்தில்ல.."

"அப்போ ஒரு 2கிலோவாவது கொடுங்க... ரொம்ப அவசரம்.."

"இல்லப்பா.. இங்கல்லாம் அது கிடைக்காது.." னு சொல்லிட்டு என்னைய வெளிய கிளப்புறதில்லையே குறியா இருந்தான்.

"சரி.. இங்க வேற எங்கயாவது கிடைக்குமா?"னு கேட்டேன்

'தெரியாது...' னு சொல்லிட்டு, வியாபாரத்த கவனிக்குற சாக்கில நான் போறேனானே பாத்துட்டு இருந்தான்..

உடனே எதிர்ல ஒரு கார் பக்கத்துல இருந்த புன்னியவான்...
"தம்பி.. நேரா தெக்கானிக்கு போங்க... ஒரு போர்டு இருக்கும்.. அது உள்ள போனீங்கன்னா, ஒருத்தர் கையில கம்பு வச்சிட்டு இருப்பாரு... அவர்கிட்ட கேளு கிடைக்கும்"

"ரொம்ப நன்றி" னு சொல்லிட்டு... அவன் பக்கத்தில நின்ன கார் கண்ணாடி மேல பாக்குறேன்..
"நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்" னு எழுதிருக்கு.

அப்போ இவர் சொன்னது சரியாத்தான் இருக்கும்னு மனசுல நினைச்சுட்டு... தெக்கானிக்கு நடக்க ஆரம்பிச்சேன்..

ஒரு10 நிமிஷம் நடந்ததும்.. ஒரு போர்டு தெரிஞ்சது...

உள்ள போனேன்...

அந்தஆள் சென்னமாதிரியே.. ஒரு பெரியவர் திண்ணை மேல படுத்திருந்தாரு.. பக்கத்திலையே ஒரு கைத்தடியும் இருந்துச்சி...

பக்கத்துல போய்... "ஐயா.. ஐயா.." னு கூப்பிட்டேன்..

சத்தமே இல்ல..

சரி தூங்கட்டும்.. தொந்தரவு பண்ணவேண்டாம்ன்னு... பக்கத்துல இருந்த இன்னொரு திண்டுமேல கொஞ்சநேரம் உக்காந்து காத்திருந்தேன்.

நல்ல அசதி... கண்ணு கேக்காமலே மூட ஆரமிச்சிட்டு..

கண்ண திறந்து பாத்தா... அந்த பெரியவரு.. தூங்கி எழுந்து திண்டுமேல உக்காந்திருக்காரு...

எழுந்திட்டார் போல.... சரி நம்ம வந்த வேலைய பாப்போம் னு...

"ஐயா... இங்க நிம்மதி கிடைக்கும்னு சொன்னாங்க... அவசரமா ஒரு ரெண்டுமூட வேணும்... கிடைக்குமா" னு கேட்டேன்.

"ம்... கிடைக்குமே" னு சொல்லிட்டு.,
"உன்கிட்ட இருந்த நிம்மதி எப்போ காலியாச்சி" னு கேட்டாரு..

" அடிமுட்டாளா இருக்கும்போதுலாம் நிம்மதியாதான் இருந்தேன்... அடுத்து அடிமுட்டாள்ல உள்ள அடிய அழிச்சி முட்டாளானேன்.. எப்போ அடிமுட்டாள்ல இருந்து முட்டாளா ஆனேனோ அப்பவே என் நிம்மதி எல்லாம் போயிடுச்சி"
அதான்.. கொஞ்சம் வாங்கி பில்லப் பன்னலாம்னு வந்தேன்.. "

"ம்... சரியான இடத்துக்குத்தான் வந்துருக்கிங்க"
"அப்புறம்...." அப்டின்னு கேட்டாரு...

அவ்ளோதான்... நிம்மதி மட்டும் போதும்... வேற ஒன்னும் வேண்டாம்...

"அப்புறம்"-னா, அடிமுட்டாள்ல இருந்து முட்டாளாகி இருந்த நிம்மதிய தொலச்சிங்களே...அதுக்கு அப்புறம் சொல்லுங்க" னு சொன்னாரு

நானும் A to Z வரைக்கும் சொல்லிட்டு... தமிழ் சினிமால வர்றதுபோல..." இதுதாங்க நடந்துச்சி" னு சொன்னேன்..

உடனே... "தம்பி இதுக்குபோய் நிம்மதிய இழக்கலாமா..
கவலைய விடு..." னு சொன்னதும்,
"உண்மையிலேயே போன நிம்மதி கிடைச்சமாதிரி ஒரு உணர்வு"

உடனே அவரபாத்து...
"ஐயா.. நீங்க இறந்து எத்தன வருஷம் ஆகுது"-னு கேட்டேன்

"நான் செத்துப்போனவன்னு எப்படிப்பா கண்டுபிடிச்சிச.."

"உயிருள்ள மனுஷன் எவன் இப்படி ஆறுதல் சொல்லுவான்.."
உயிருள்ளவனுக்கு சுடுகாட்டுக்கும்., மனநல மருத்துவமனைக்குந்தான் வழி சொல்ல தெரியும்., இப்படி ஆறுதல்லாம் சொல்ல தெரியாது...
ஆனா நீங்க கொஞ்சம் வித்தியாசமா ஆறுதல்லாம் சொல்றிங்க.. அதான் கண்டுபிடிச்சேன்."

சொன்னதும்... அமைதியா சிரிசிச்சாரு...

"நிம்மதி தந்ததுக்கு ரொம்ப நன்றிய்யா" -னு சொன்னேன்

"ம்... சரி... இனி நிம்மதியுடன் மகிழ்ச்சியாய் இரு"னு சொல்ல...

அங்கிருந்து வெளியே வந்து, மீண்டும் திரும்பி பார்த்தேன்.

சிறிதாய் புன்னகைத்துவிட்டு பின் மறைந்துவிட்டார்.

மேலே பார்கிறேன்...
சுடுகாட்டின் போர்டும்... அதில்...
"கடுக்கானுர் சுடுகாடு"
இறந்த பிணம் எரிக்க 3500 /-
உயிருடன் எரிக்க 150000/- & 4 குவாட்டர். என எழுதியிருந்தது.

இப்படிப்பட்ட இந்த உலகத்துல எப்படி நிம்மதிய தொலைக்காம வாழ்றது.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (9-Nov-17, 11:25 am)
பார்வை : 319

மேலே