மீண்டும் வருவேன்

மீண்டும் வருவேன்

என்னை சுற்றிலும் கூட்டமாக உட்கார்ந்திருப்பது எனக்கு தெரிகிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. என் மூச்சு மட்டும் மேலும் கீழும் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறது. பக்கத்தில் இடதுபுறம் என் மனைவி உட்கார்ந்திருப்பதை உணர முடிகிறது. அருகே நிறைய பெண்கள் உட்கார்ந்திருப்பதும் தெரிகிறது. அவர்கள் ஒரு நிமிடம் அழுவதும் பின் தனக்குள் இரகசியமாய் பெசிக்கொள்வதும், பின் வந்து அமர்வதும் என்னால் உணர முடிகிறது. இவர்கள் அனைவரும் என் முடிவுக்காக காத்திருப்பதும் எனக்கு தெரிகிறது. எனக்கு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் மறு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனக்காக இத்தனை பேர் அழுகிறார்கள் அல்லவா? ஆனால் உண்மையான அன்பில் அழுகிறார்களா?
ஆயிற்று எழுபத்தைந்து வருடங்கள் ஓடி விட்டது.என் வாழ்க்கையில் இப்பொழுதெல்லாம் என் மகன்களுக்கு நான் “பெரிசுதான்” ஆண்ணன் தம்பி பேசிக்கொள்ளும்போது கூட “பெரிசினால் பெரிய தொல்லை” என்றுதான் பேசிக்கொள்கிறார்கள்.சலித்துக்கொள்ளவும் செய்கிறார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை, பாசத்தை காட்டாமல் பணத்தை காட்டி வளர்த்து விட்டேன். பணம்..பணம் இது ஒன்றுதான் என் வாழ்க்கையில் நான் கண்ட இலட்சியம்.எனக்கு வியாபாரம் மட்டுமே முதல் சொந்தம். மனைவி மக்களை பற்றி கவலைப்பட்ட்தே இல்லை. பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவன் நான்..எதை போட்டால் எது வரும் எனக்கு நன்றாக தெரியும். பையன்களை படிக்க வைப்பதற்கு கூட நிறைய பணம் கொட்டியிருக்கிறேன்.ஆனால் படிப்பு சுட்டு போட்டும் வரவில்லை. இருவரும் ஒருவர் பின் ஒருவராக படிப்பதை விட்டு விட்டனர். நானும் இவர்களை படிக்க வைக்கும் செலவையும் நிறுத்தி விட்டேன்.இருவரையும் வியாபாரத்தில் இழுத்து விட்டேன். பெரியவன் ஓரளவு பிழைத்துக்கொண்டான். சின்னவன் பாடுதான் திண்டாட்டம். ஏதோ சமூக சேவை என்று சுற்றிக்கொண்டிருக்கிறான். கூப்பிட்டு கேட்டால் “காசு என்னப்பா காசு” என்று பேசுகிறான். பெரிய வேதாந்தம் எல்லாம் பேசுகிறான்.எனக்கு கோபமாக வருகிறது. இவன் அம்மா வேறு இவனுக்கு ஒத்து ஊதுகிறாள். அவளுக்காக இவனை என் கடையிலே சேர்த்துக்கொண்டேன். இருந்தாலும் இவனை நான் நம்புவதில்லை. சமூக சேவை அப்படி, இப்படி என்று காசை கரியாக்கி விட்டால் என்ன செய்வது? பொறுப்பில்லாத பையன் எப்பொழுது திருந்துவானோ?
இவர்களை சொல்லி என்ன பயன்? என்னைப்போல் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருந்தால் தெரியும். பிறக்கும்போதே வசதியானவர்களாக பிறந்து விட்டார்கள், பணத்தின் அருமை இவர்களுக்கு எங்கே தெரியும்? இதோ பக்கத்தில் இருக்கிறாளே என் மனைவி இவளை கல்யாணம் பண்ணும்போது நான் ஜவுளிக்கடையில் ஒரு சேல்ஸ் மேன், ஆனால் என் கூட எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள். உண்மையில் இவள் மட்டும் இல்லை என்றால் நான் இந்த அளவு வந்திருக்க மாட்டேன் இருந்தாளூம் இவளுக்காக நான் எதனையும் செய்ததில்லை. எத்தனை பேர் வயிறெறிந்திருப்ப்பார்கள், நான் ஏதோ கள்ள நோட்டு அடிக்கறதாகவும், கடத்தல் தொழில் செய்யறதாகவும் பேசியிருப்பானுங்க. நான் நிறைய் பேரை ஏமாற்றியிருக்கேன் பல பேர் வயித்துல அடிச்சிருக்கேன். இல்லேங்கலையே. இதெல்லாம் வியாபாரத்துல சகஜம் இதெல்லாம் செய்ய முடியிலையின்னா இந்த அளவுக்கு வரமுடியுமா. யார் யாரை ஏமாத்தலை. அப்படி ஏமாத்தி வாழறதுதான் இந்த உலகம். இந்த உலகத்துல வாழணும்னா இதையத்தான செய்ய முடியும்.

“சகாயம்” னு ஒருத்தன் இருந்தான் இப்படித்தான் சாபம் விட்டான்.”கர்த்தர் உன்னைய மன்னிக்கவே மாட்டார்” அப்படீன்னு. நான் நல்லத்தானே இருக்கேன். அவன்தான் நொடிச்சுட்டான். கூட்டு வியாபாரம்னா அப்படித்தான் ஒருத்தனை ஒருத்தன் அழிக்கணும் அப்பத்தான் பிழைக்க முடியும். என் கூட்டாளிங்க எல்லோரும் பொறாமை புடிச்சவனுங்க. நான் நல்லா இருக்கறது எவனுக்கும் பொறுக்கல, .அதுக்காக இவனுங்களுக்கு பயந்து கிட்டு நேர்மையா நடந்திருந்தா இநநேரம் தலையில துண்டைத்தான் போட்டுக்கணும்.

எத்தனை பேரு என் கிட்டே நன் கொடை கேட்டு வருவானுங்க. நான் கொடுக்கலையே? அனாதை ஆஸ்ரம்ம், குழந்தைகள், வயசானவங்க, அப்படீன்னு வந்தானுங்க. ஒருத்தனுக்கும் கொடுக்கலையே, ஏன் கொடுக்கணும்? எதுக்கு கொடுக்கணும்? கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைச்சாங்கலாம். இந்த கதை தான் நம்ம கிட்ட நடக்காது. நம்ம பணத்துல இவனுக என்ன சமூக சேவை செய்யறது. அதெல்லாம் நம்ம கிட்டே ஆகாது அப்படீன்னுட்டேன். எல்லாரும் திட்டினாங்க.திட்டிட்டு போறாங்க,ஆனா கட்சி நிதின்னு வந்தா கரெக்டா கொடுத்திடுவேன். ஏன்னா கட்சிக்காரங்களாலதான் இரண்டு மூணு முறை போலீஸ் கேசுல இருந்து தப்பிச்சிருக்கேன்.

என் கடையில கணக்கு புள்ளை ஒருத்தன் இருந்தான். அவன் ரொம்ப நாணயமானவன், ஒரு நாள் பத்தாயிரம் ரூபாய் கணக்குல காணாம போச்சு. அவனை கூப்பீட்டு நாளைக்கு சாயங்காலத்துக்குள்ளே இந்த பத்தாயிரம் ரூபாய் வந்தாகணும், இல்லே உன்னை போலீசுல புடிச்சு கொடுத்திடுவேன் அப்படீன்னு மிரட்டினேன். ஆனா பத்தாயிரம் அன்னைக்கே கிடைச்சிருச்சு. அதை எடுத்து யாரோ பாங்க் அக்கவுண்ட் மாத்தி போட்டுருக்காங்க, இதை அவன்கிட்டே சொல்லாம விட்டுட்டேன்.அவன் அன்னைக்கு இராத்திரியே கிணத்துல விழுந்து இறந்துட்டான். எனக்கு வருத்தாமாத்தான் இருந்துச்சு. அவன்கிட்டே சொல்லியிருந்தா பிழைச்சிருப்பான். ஆனா அவன் சம்சாரம் என் மேலே கேஸ் போட்டுட்டா, நாந்தான் கொலை பண்ணிட்டேன்னு. எனக்கு கோபம் வந்திடுச்சு, காசை தண்ணீயா செலவு பண்ணி இந்த கட்சிக்காரங்களை புடிச்சுத்தான் வெளியே வந்தேன். இந்த மாதிரி சகாயம் என் மேலே கேசு போட்டப்ப கூட பணத்தாலே சரி கட்டினேன். அவன்தான் “கர்த்தர் உன்னை மன்னிக்க மாட்டார்னு சாபம் விட்டான்.நான் அதையெல்லாம் பொருட்டாகவே நினைக்கலை. எனக்கு பணம்தான் முக்கியம் அதுக்கப்புறம்தான் பொண்டாட்டி புள்ளைங்க”
இப்ப மூச்சு எனக்கு அதிகமா வாங்குது. ஞாபகம் வேற தவறிகிட்டே இருக்கு. நான் எங்கிருக்கேன்னு தெரியலை!ஆகாசத்துல மிதக்கற மாதிரி இருக்குது. யாரோ என் கையை பிடிக்கற மாதிரி தெரியுது. டாக்டரா இருக்கணும். இப்ப இருக்கற கூட்டமே டாக்டரைத்தான் பார்ப்பாங்க. அவர் என்ன சொல்லப்போறார்னு. பெரியவன் பேச்சு குரல் கேட்குது என்னாச்சு டாக்டர்? சீக்கிரம் சொன்னீங்கன்னா மேற்கொண்டு ஆகற வேலைய பாக்கலாம் என்ன சார் நீங்க உங்க அப்பா இந்த நிலையிலை இருக்கறாரு. நீங்க உங்க வேலையிலயே குறியா இருக்கறீங்க. என்று என் பையனிடம் சத்தம் போடுவது எனக்கு கேட்கிறது.
டாக்டர் என்னை மன்னிச்சுங்குங்க.இவர் எப்பவும் எங்களுக்கு அப்பாவா இருந்ததில்லே. ஒரு முதலாளியாகத்தான் வீட்டிலேயும் வெளியிலேயும் இருந்திருக்காரு.
எங்களுக்காக எப்பவும் கவலைப்பட்டதே கிடையாது. இப்படிபட்டவங்க கிட்டே நாங்க எப்படி பாசத்தை காட்டமுடியும். இப்ப வந்திருக்கறவங்க முக்கால்வாசி பேர் மனசுக்குள்ளே இவர் மறுபடியும் பொழச்சுக்ககூடாது அப்படீன்னு வேண்டிக்கறவங்களாகத்தான் இருப்பாங்க. நீங்க என்னை தப்பா நினைச்சலும் பரவாயில்லை. இந்த ஊர் உலகத்துக்கு அவ்வளவு பாவம் பண்ணியிருக்காரு.
அனைத்தும் என் காதில் விழுந்தன. என் மனைவி இவனை எதிர்த்து ஏதாவது சொல்வாள் என எதிர்பார்த்தேன்.என்னுடன் நாற்பது வருடங்களுக்கு மேல் குடும்பம் நடத்தியவள். ஆனால் அவள் ஒன்றுமே பேசாமல் சின்னவனை கூப்பிட்டு “டேய் கடைசி நேரத்துல” எங்கேயும் போயிடாதே. காரியம் எல்லாம் செய்யணும். இதை கேட்ட எனக்கு நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்துச்சு. அவ்வளவுதானா? இவ்வளவு வசதிகளை செய்து கொடுத்தவனுக்கு மரணத்தை விரைவில் வரவேண்டும் என்று என் குடும்பம் விரும்புகிறதா? என் வாழ்க்கை முடிந்ததா? கடவுளே, நான் மரணம் அடைய வேண்டும் என்று என் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் ஆசைப்படும் அளவுக்கு நான் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறேன். கூடாது ! என் ஆத்மா இத்தனை பேர் சாபத்தில் அலைய வேண்டுமா? நிச்சயம் நான் பிழைக்க வேண்டும். இவர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் சரி நான் பிழைத்து எழுந்தவுடன் என்னால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவர்களின் வாரிசுகளுக்காகவாவது என்னால் முடிந்ததை செய்ய வேண்டும். ‘சகாயமும்’ சரி என் கடையில் வேலை பார்த்த ‘கணக்கு பிள்ளையும்’ சரி, என் மனைவி குழந்தைகளுக்கும் சரி இதோ உங்களுக்கு விருப்பமில்லாமலே உயிரோடு வருகிறேன். இந்த முறை உங்களுக்கு உதவுவதற்காகவே !


டாக்டரின் முடிவுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Nov-17, 11:45 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 242

மேலே