தமிழ் உலகம் அறிந்திருந்த மருத்துவக்கலை

தமிழ் உலகம் அறிந்திருந்த மருத்துவக்கலை
“முனைவர் அ.தட்சிணாமூர்த்தி” அவர்கள் எழுதிய “தமிழர் நாகரிகமும்
பண்பாடும்” என்ற நூலில் நாற்பதெட்டு வகையான பண்பாடுகள்,மற்றும் கலைகள் விளக்கப்பட்டுள்ளதில் நான் எடுத்துக்கொண்ட தலைப்பு “ மருத்துவ கலையில் “தமிழகம் எங்கனம் இருந்தது என்பது..
அறிமுகம்:
சமூக இயல்புகளையோ,அல்லது அரசியல்,அல்லது மற்றவைகளுக்கான கட்டுரை எழுதும் போது எழுதுபவர் தன்னுடைய எண்ணங்களுக்கு தக்கவாறு வாக்கியங்களை வளைத்துக்கொள்ளலாம். இதனால் முடிவில் அவர் சொல்ல வந்த பொருளை சுட்டி காட்டியும் விடமுடியும் அவரால் சில உதாரணங்களையும் தோராயமாக காட்டி வார்த்தைகளை கோர்த்து விட முடியும்.
ஆனால் இலக்கியம் சம்பந்த பட்ட கட்டுரைகள் என்பது, இலக்கிய வாசகர்களுக்கு
அதன் உதாரணங்களை தெளிவுற எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில தமிழ் அறிஞர்களின் துணையில்லாமல் இதனை சாதிக்க இயலாது. அவர்களால் படைக்கப்பட்ட நூல்களை அவர்கள் பார்வையிலேயே, இலக்கிய வாசகர்களுக்கு சொல்லி விடுதல் நலம் என்று நினைக்கிறேன். இது கூட ஒரு வித தப்பித்தல் என்றாலும், இலக்கிய வாசகர்களுக்கு உண்மையான தொண்டும், அவர்களை அந்த தமிழறிஞர் எழுதிய நூலை வாசித்து பார்க்க ஆவலையும் தூண்டுமல்லவா !
இன்னொன்று கூட உண்டு. இந்த கட்டுரை எழுதும் எழுத்தாளனுக்கும், இந்த நூல்களை படித்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.அதனால் அவனுக்கும், இதை பற்றிய அறிவு கூடுமல்லவா?

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது தமிழரின் பட்டறிவின் காரணமாய் எழுந்த பழமொழியாகும். நோய்களை பற்றியும், அதனை தீர்க்கும் முறைகளை பற்றியும், பன்னெடுங்காலத்திற்கு முன்னரே தமிழகத்தில் நன்கு உணர்ந்திருந்தனர்.
சங்க காலத்தில் எங்கனம் இருந்தது ?
மருத்துவ அறிவோடு, பலர் நல்ல இலக்கிய அறிஞர்களாகவும் திகழ்ந்துள்ளனர் என்பதற்கு “மருத்துவன் தாமோதரனார்”” என்னும் புலவரே சான்றாவார். புலவராக திகழ்ந்தமையால் இன்று அவர் பெயர் மட்டும் அறியப்படுகிறது. அன்று தமிழகத்தில் எண்ணற்ற மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள்.
கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அசோகரால் தென்னகத்தில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தனித்தனியாக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருந்தன.இதை அவருடைய கல்வெட்டுக்களே சான்றாக்குகின்றன.
“நீர் வேட்கையையும்” “உணவு பசியையும்” கூட பிணி என்கின்றனர். அன்றைய மருத்துவ சான்றோர்கள். கோவூர்கிழார் நீரையும், உணவிணையும் “இரு மருந்து” என குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் மருத்துவனை பற்றி குறிப்பிடுகையில் அவன் வணிகனல்லன், அவன் மனித குலத்தொண்டன் எனவே அவன் தன்பாலுள்ள கலையை மறைத்தல் ஆகாது, அது கொடிய பாவம் என்கிறார்.
“வருந்திய செல்லல் தீர்த்த திறனறி யொருவன்
மருத்தறை கோடலின் கொடிதே”
எனும் கலிதொகையடிகள் இதற்கு சான்றாகும்
நோயாளி கேட்டதை கொடாது, அவனுக்கு எது நல்லது என்பதை ஆய்ந்து மருந்தளிக்க வேண்டும். சங்க காலத்தில் அடிக்கடி போர் நடந்ததால் அக்காலத்து மருத்துவர்கள் மருந்துகள் பலவற்றை பயன் படுத்தி இருக்க வேண்டும்.புண்களை ஊசி கொண்டு தைத்தல் வழக்கில் இருந்திருக்கிறது. என்பதையும் குறிப்பிடுகிறார்.
“சிரல் பெயர்ந்தாற் போல நெடுவள்ளூசி கொண்டு மார்பிலேற்பட்ட புண்ணைத் தைத்தமை பற்றிப் பதிற்றுப்பத்து பாடலொன்று குறிப்பதால் அறுவை மருத்துவமும் ஓரளவு வளர்ச்சியுற்றிருந்தமை அறியப்படும்.
மருத்துவனுக்கு என்ன நோய் என்று கண்டு அதற்கேற்றவாறு மருத்துவ சிகிச்சை தரவேண்டும் “மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் ‘’ சங்க இலக்கியத்தில் பேசப்படுகின்றன.
பண்டைத் தமிழ் நூலகளில் திருக்குறளே அக்காலத்து மருத்துவ கலையை பற்றிய அடிப்படை கருத்துக்களைத்தொகுத்து தருகின்றது.
முறையாக மலங் கழிக்கவில்லையெனில் அது நோய்க்கு காரணமாகும், எனவே உணவு செரித்த பின் உண்ண வேண்டும் என தமிழ் மருத்துவம் கூறுகிறது.இதை வள்ளுவர்
முன்னுண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவையே ஏற்படாது என்கிறார். நன்கு பசித்த பின் உண்ண வேண்டும் என்பதை “பசியின் அளவறிந்து உண்ண வேண்டும் என்கிறார் அது ஆயுள் நீட்டிப்புக்கு உதவும் என்கிறார்.
மருத்துவ துறையில் நோய் இன்னது என்று கண்டுகொண்டு அது என்ன காரணத்தால் வந்தது எனவும் கண்டு பிடிக்க வேண்டும், அதன் பிறகே அதனை தீர்க்க முயல வேண்டும் என்பதனை

“நோய்நாடி நோய்முதல் நாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்கிறார் வள்ளுவர்.

சமணகாலமும் பெளத்தர் காலமும்:
கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே இவ்விரு சமயத்தவரும் தமிழகத்துக்கு வந்தனர்.அவர்களுடைய மருத்துவ முறைகள் தமிழகத்தில் பரவி இருந்தன.
பதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி, சிறு பஞ்ச மூலம், திரிகடுகம் என்பவை மருத்துவ மூலிகைகளின் அடிப்படையில் பெயர் பெற்ற விளங்கல் காணலாம்.
1. சுக்கு,மிளகு,திப்பிலி, இவை மூன்றும் திரிகடுக சூரணமாகும்.
2. கண்டங்கத்திரி வேர்,சிறு மல்லி வேர், சிறுவழுதுணைவேர், முதலிய மருந்துகலவை சிறு பஞ்ச மூலம்.
3. ஏலம், இலவங்கம்,சிறு நாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு, எனும் ஆறு பொருட்களால் செய்யப்பட்டது ஏலாதியாகும்.
எனவே இப்பொருட்களால் செய்யப்பட்ட மருந்துகள் அக்காலத்தில் பெரு வழக்காக இருந்திருக்கின்றன என்பதை உணரலாம்.
பல்லவர் காலம்
பல்லவர் கல்வெட்டுகளில் மருந்து செடிகளை பயிரிடுவதற்கு விதிக்கப்பட்ட சில “வரிகளை” காண்கிறோம்.
“செங்க்கொடிக்காணம்” என்பது அவற்றில் ஒன்று.செங்கொடிக்கு சித்திர மூலம்,செங்கொடி வேலி என்னும் பெயர்களுண்டு. இவ்வாறே கண்ணிட்டுக்காணம்” என்னும் வரிகர்சராங்கண்ணியை பயிரிட வாங்கியதாகும்.
மருத்துவர்களுக்கு “மருத்துப்பேரறு” என்னும் மானிய நிலம் விடப்பட்டதையும் காணலாம். சைவ நாயன்மார்கள் செய்த சீர் திருத்தத்தில் நோய் தீர்த்தலும் முக்கிய தொண்டாகும். பல்லவர் காலம் முதல் வடவர் மருத்து முறையும் வழக்கிற்கு வந்து விட்டதாக கூறுவர்.
சோழர் காலம்”
மருத்துவ கல்விக்கு சிறப்பளித்த காலமாகும் மன்னர்கள் சில இடங்களில் மருத்துவ கூடங்களை அமைத்திருந்தனர். இராசேந்திர சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டொன்று பண்டார வடையில் உள்ளது. இலவச மருத்துவ கூடம் ஒன்றிருந்ததை இதன் மூலம் அறிகிறோம். தஞ்சையில் “சுந்தர சோழ விண்ணகர் ஆதுர சாலை என்னும் மருத்து மனை இருந்ததாக இவ்வூரிலிலுள்ள இன்னொரு கல்வெட்டு தெரிவிக்கிறது. வீர ராசேந்திரன் பதினெட்டு படுக்கைகள் கொண்ட மருத்துவ கூடத்தினை நிறுவி அதற்கு நிலமளித்துள்ளான். அறுவை மருத்தும் செய்யும் “சல்லியக்கிரியை” பண்ணுவான் ஒருவன் இருந்துள்ளான். மூலிகையை கொணர, இருவரும்,நோயாளியை கவனிக்க செவிலியர் இருவரும் இருந்துள்ளனர்.

“உடலிடைத் தோன்றிற் றொன்றை அறுத்த்தன் உதிரம் போக்கிச்
சுடலுறச் சுட்டு வேறோர் மருந்தினர் றுயரம் தீர்வர்”
என்னும் இலக்கிய பகுதியும் இக்காலத்திற்குரியதாகும். பல்லவர் காலந்தொட்டே அறுவை முறை வழக்கில் இருந்த்து என்பதற்கு
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத அன்பு கொள்வது நோயாளனின் இயல்பு என்று குலசேகரார் கூறுவது கொண்டு உணரலாம்.
சோழர் காலத்தில் உத்தரமேரூரில் விட நோய் தீர்க்கும் மருத்துவன் ஒருவனுக்கு “விடிஹரபோகம்”அளிக்கப்பட்டதை கல்வெட்டால் அறிகின்றோம்.
கி.ப்.1121 சோழர்கால ஆட்சியில் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டில் ஒரு மருத்துமனையில் மாணாக்கர்கள் வாக்குப் பாதரின் “அட்டாங்க” இருதயத்தையும்,சர்க்க்கசமிதை என்னும் இன்னொரு நூலையும் கற்றதாக அறிகின்றோம்.
விசய நகர வேந்தர்கள் காலத்திலும் இந்த மருத்துவ முறைகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தன.
மருத்துவம் சார்ந்து அழைத்த மூலிகைகள்:
வாதாமடக்கி, வண்டு கொல்லி,கிரந்தி நாயகன், பொன்னாங்கண்ணி.
மஞ்சட்காமாலைக்கு கீழா நெல்லியே முக்கிய சான்றாகும்.
சித்த மருத்துவம் என்பது தமிழரின் அருட்பெருஞ் செல்வமாகும்.
கழாய்ம்,குளிகை,சூரணம், லேகியம்,செந்தூரம், பழமையானவை.தமிழ் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவை.இவற்றின் நோக்கம் தடுப்பு, தீர்வு,ஆற்றல் மீட்பு,ஆயுள் நீட்சி ஆகிய நான்கு ஆகும்.
மருத்துவ துறையின் தலைவராக சிவ பெருமானே விளங்குகிறார்.
அவரே ஏழு லட்சம் பாடல் கொண்ட நூலை இயற்றியதாக சொல்வர்.
நந்தி, சனகர், சனாதர், சனானந்தர் ,சனற்குமார்ர்,திரு மூலர், பதஞ்சலி, அகத்தியர், புலத்தியர், புசுண்டர், கருவூரார்,தன் வந்திரி சட்டை, முனி,தேரையர், யூகிமுனி, ஆகியோர் பல மருத்துவ நூல்களை எழுதி உள்ளனர்.
மருத்துவ நூல்கள்
இரசமணி, மந்திரம், மருந்து என்னும் மூன்றினை கூறுகின்றன.
உப்பு,தீநீர், பட்டினி, உடற் பொருள்,பாசாணம்,உலோகம்,சத்து,இரசக்குளிகை, யோகம், என்னும் பத்து முறைகள் சொல்லப்படுகின்றன.
மந்திரம்-யோகம் மணி குளிகைகளிலும் அடங்கும்.
மூலிகை சூரணம் இலேகியம், மெழுகு என்னும் இவற்றை குறிக்கும்.இவற்றுக்கு “மக்களுறை” என்றும் பெயருண்டு.
கட்டிகட்கு தைலங்களும், சாராயத்தில் ஊறிய பிற மருந்துகளுண்டு.
செந்தூரம்,சுண்ணம், செய்நீர், தீநீர், சத்து, மணி,முதலியன பஸ்பம் எனப்படும்
உப்புக்கள் 25,பாடாணம் 64,உலோகம் 9,உலோக சத்துக்கள் 120, மூலிகை 1008, என்ற நூல்கள் கூறுகின்றன.
நாடியை பார்த்து நோயை அறிவது சித்தர் முறையாகும்.
இடகலை,பிங்கலை,கழுமுனை,என நாடிகள் மூவகையாம்.
வாதம்,பித்தம்,கோழை, மூன்றும் நாடியை பார்த்து கண்டறியப்படும்.
உறுதியான உடம்பில்தான் ஆன்மா செவ்வன உறையும் என்பது நம் பெரியவர்கள் கொள்கைகளாகும்.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
என்றும்
தேக மிருந்தல்லோ சித்தெல்லா மாடலாம்
தேக மிருந்தக்கால் சேரலாம் பூரணம்
தேக மிருந்தக்கால் செயலெல்லாம் பார்க்கலாம்
தேக மிருந்தக்கால் சேரலாம் முத்தியே
என்று திருமூலம் கூறுகிறது.
தன்வந்திரி கி.பி ஐந்தாம் நூற்றாண்டினர், சுகருதரும் இவர் காலத்தவரே. இவருடைய நூலில் 125 அறுவை கருவிகள் கூறப்பட்டுள்ளன.

சாரகர் அவ்விருவருக்கும் முன்னிருந்தவர், அவர் முக்கிய எட்டு நோய்களை பற்றியும், அதற்கான தீர்வு முறைகளை பற்றியும் தனது நூலில் பேசியுள்ளார்.

வாக்கு பாதர் என்பவர் ஒன்பதாம் நூற்றாண்டினர்.இவர் எழுதியது அட்டாங்க இருதயமாகும். இவர் அறுவை முறைகள் பற்றி விரிவாக பேசுகின்றார்.

கி.பி 450 காலத்தைச் சேர்ந்த, ஏட்டு சுவடியொன்று “போபர்” என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அது பூண்டின் மருத்துவ பண்புகளை ஆய்ந்து கூறுகிறது.
இப்பொழுது ஆயுர் வேதம், வைத்திய வல்லாதி, பூரண சூத்திரம், நாடி நூல், இரத்தினச் சுருக்கம், இரண வைத்தியம் நயன் விதி, சரபேந்திர வைத்தியம் என்னும் நூல்கள் வழக்கிலுள்ளன..

தமிழக அரசு பழைய சித்த வைத்திய முறையை தழைக்க செய்ய அரும்பாடு பட்டு வருகிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி “திருவாளர் பலராமையா” என்பவர் சிறந்த சித்த மருத்துவ அறிஞராக மதிக்கப்படுகின்றார்.

காலஞ்சென்ற ஜி.டி. நாயுடு அவர்கள் இத்துறையில் சிறந்த ஆய்வுகள் நடத்தி உள்ளார்.

டி.என்.சனக குமாரி என்பவர் நாட்டு மருந்துகள், விஷக்கடிக்கு அனுபவ மருந்துகள், பாப்பாவுக்கு பாட்டி வைத்தியம் என்னும் நூல்களை எழுதி உள்ளார்.

டாக்டர் கதிரேசன் என்பவர் “ஷயநோயும் தடுப்பு முறைகளும் என்னும் நூலை எழுதியுள்ளார்.

இன்னும் பல அறிஞர்கள் மருத்துவ சம்பந்தமான தத்தம் நூல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நூலாசிரியரின் சிறப்புக்கள்:
1ஆய்வுக்கட்டுரைகள் பல
2.Poems of Bharathidasan-A Translation
3.“அகநானூறு” முழுவதற்குமான ஆங்கில மொழி பெயர்ப்பு
4.(செந்தமிழ்-மதுரை தமிழ்ச்சங்கம்)
5.“நற்றிணை” ஆங்கில மொழி பெயர்ப்பு

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Nov-17, 11:49 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 442

மேலே