பத்துப்பாட்டில் பாடப்பட்ட மன்னர்-------------செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன்
நன்னன் சேய் நன்னனை மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளது. இம்மன்னன் பல்குன்றக் கோட்டம் என்ற நாட்டை ஆண்டான். இப்பல்குன்றக் கோட்டத்தை மலைபடுகடாம், ‘‘குன்று சூழ் இருக்கை நாடு’’ எனக் குறிப்பிடுகிறது. தொண்டை நாட்டின் இருபத்து நான்கு கோட்டங்களுள் பல்குன்றக் கோட்டம் என்பது ஒன்று. குன்றுகள் பல சூழ்ந்து இருப்பதால் அப்பெயர் பெற்றது. தமிழக எல்லையான வேங்கடமலையும் இப்பகுதியுள் அடங்கும்.
நன்னன் சேய் நன்னனின் தலைநகரம் ‘செங்கண்மா’ என்பதாகும். இவன் வேளிர் குடியில் தோன்றியவன். ஆதலால் வேண்மான் எனப்படுகின்றான். இந்த நூலில் இயவன் வேள் என்றே குறிக்கப்படுகின்றான். செங்கண் மா என்ற நகரம் தற்போது திருவண்ணாமலைக்கு மேற்கில் உள்ளது. இக்காலத்து செங்கண்மா எனவும் செங்கம் எனவும் வழங்கப் பெறுகின்றது. இவனுடைய தந்தை பெயரும் நன்னன் ஆதலால் நன்னன் சேய் நன்னன் என இம்மன்னன் அழைக்கப்படுகின்றான். மேலும் இவனுக்கு நன்னன் வேண்மான், வேள் நன்னன், சேய்நன்னன், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன், சேய்நன்னன் என்ற பல பெயர்களாலும் இவன் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது.
நன்னன் சேய் நன்னனின் மலைநாட்டின் சிறப்பு
இம்மன்னனது மலைநாடான சவ்வாது மலைத்தொடரைச் சேர்ந்த அடிவாரப் பகுதியில் புன்செய் நிலங்கள் மிகுதியாக உள்ளன. இதனை நவிர மலை என்றும் திரசூல மலை, பர்வத மலை என்றும் குறிப்பிடுவர். அங்கு முசுண்டைக் கொடியில் கார்த்திகை விண்மீன்களைப் போன்று வெண்மையாக மலர்கள் மலரும். அதிகமாக எண்ணெய் மிகும் வண்ணம் எள்ளுச் செடியானது காய்களுடன் வளரும். யானைக் கன்றுகள் தமக்குள் துதிக்கைகளைப் பிணைத்து விளையாடுவதைப் போல் தினைக் கதிர்கள் பிணைந்து முற்றும். அவரைகள் முற்றிய தயிரினது பிதிர்ச்சி போல் பூக்களை உதிர்த்து அரிவாளைப் போன்று வளைந்த காய்களைக் கொள்ளும். வரகுகள் தர்க்கம் செய்பவன் கையில் இணைந்த விரல்களைப் போன்று இரட்டித்த கதிர்கள் முற்றும். மூங்கில் நெல் அவல் இடிக்கும் பருவத்தை அடையும். நிலத்தை உழாமல் களைக் கொட்டால் பண்படுத்தப்பட்ட நிலத்தில் வெண்சிறு கடுகு நெருங்கி விளையும். இஞ்சிகள் நன்கு முதிர்ந்து வளரும். உறைப்பை நன்கு கொள்ளும் கவலைக் கொடி பெண்யானையின் மடித்த முழந்தாளைப் போன்றுள்ள குழிகளில் செம்மையாய் வளரும் என நன்னன் சேய் நன்னனின் மலை நாட்டின் வளப்பம் மலைபடுகடாமில் சிறப்பிக்கப்பட்டுள்ளது (170-182).
நன்னன் சேய் நன்னனின் கொடைச் சிறப்பு
நன்னன் எப்போதும் கொடுத்துச் சிவந்த கையினை உடையவன். இவனது கொடைச்சிறப்பினை,
‘‘உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலமென மலர்ந்த கையராகித்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை இழிதரு நீத்தம்சால் அருவிக்
கடுவரல் கலுழிக் கட்கின் சேயாற்று
வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
அதனால் புகழொடும் கழிகநம் வரைந்த நாளெனப்
பரந்திடம் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு’’ (550-558)
- என்ற வரிகளில் புலவர் பெருங்கௌசிகனார் எடுத்துரைக்கின்றார்.
மலைபடுகடாமில் நன்னன், ‘‘மான விறல் வேள், செருசெய் முன்பின் குரிசில் திருந்து வேல் அண்ணல், செருமிக்குப் புகலும் திருவார் மார்பன், தேம்பாய் கண்ணித் திண்டேர் நன்னன், வெம்போர்ச் சேய்ப் பெருவிறல், குன்ற நல்லிசைச் சென்றோர் உம்பல்’’ என்று பலவாறாகப் பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
நன்னனின் வீரம்
நன்னன் மிகச் சிறந்த வீரன் ஆவான். புலவர்களுக்குப் பொருள் கொடுத்துத் தமிழை வளர்த்தான். தன்னை இகழ்வோரைப் போரிலே வென்று அடிமையாக்குவான். புகழ்வோருக்குத் தன் அரசு முழுவதையும் கொடுத்து விடுவான். அவனுடைய அவைக்களத்திலே சிறந்த கல்வியும் அறிவுமுடைய பலர் குழுமியிருந்தனர். இவ்வாறு நன்னனுடைய நற்பண்புகளை மலைபடுகடாம் எடுத்துரைக்கின்றது. இவனது வீரச்சிறப்பையும், ஒழுக்கச் சிறப்பையும்,
‘‘தொலையா நல்லிசை உலகமொடு நிற்பப்
பலர் புறங்கண்டவர் அருங்கலந்தரீஇப்
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகைமாரியும்,
இகழுநர்ப்பிணிக்கும் ஆற்றலும்புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினும் அமராநோக்கமொழு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாதுசுரக்கும் அவன்நாள் மகிழ் இருக்கையும்
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
வல்லாராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
சொல்லிக்காட்டிச் சோர்வின்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் (70-80)
என கௌசிகனார், நன்னனுடைய சிறப்பை விளக்குகின்றார். இவ்வரிகள் பழங்காலத்து நிலத்தலைவர்கள் பொதுமக்களிடம் எத்தகைய மதிப்புப் பெற்று வாழ்ந்தனர் என்பதை தெளிவுறுத்துகின்றன.
பத்துப்பாட்டில் இடம்பெறும் நூல்கள் அக்காலத்திய மக்களின் வாழ்க்கையை மட்டும் கூறாது அக்கால மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், வீரம், அவர்களின் பண்பு நலன்கள், விருந்தோம்பும் திறம் ஆகியவற்றையும் எடுத்துரைத்து பழந்தமிழக வரலாற்றினைக் கூறும் வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றது.
முனைவர். சி. சேதுராமன்