பாதங்களால் நிறையும் வீடு

மணமுடித்து நாலிரண்டு வருடங்கள் ஆனபின்னும்
மணக்கவில்லை இல்வாழ்வு மழலைவாசம் நுகராமல் !
பிணக்குகளே தொடருமென்றால் பிடித்தமெனக் கிருந்திடுமோ ?
வணங்கிநின்றேன் கண்ணன்முன் வரமெனக்குத் தாவென்றே !!

கூச்சமின்றி வார்த்தைகளால் கொட்டிடுவார் தேள்போலே
ஏச்சுகளால் உள்ளுக்குள் ஏளனத்தால் உறைந்துவிட்டேன்
மூச்சுமுட்டி சாகுமுன்னே முத்தாக முகிழ்த்துவிட்டாய்
பேச்சிழந்த என்றனுக்குப் பெரும்பேறாய்க் கிடைத்தாயே !!

பார்க்குமிடம் எங்கிலுமுன் பாதங்கள் பதிந்திருக்கச்
சீர்பெற்று விளங்குதடா! சிந்தையதும் மகிழுதடா !
தேர்போலும் அசைந்துவரும் தேவமகன் உனைக்கண்டால்
நீர்வழிந்த விழிகளுக்குள் நிம்மதியும் தோன்றுதடா !!

பாதங்கள் பட்டவிடம் பால்வீதி யாயொளிரும்
சீதளமா யுன்குரலில் தேவகானம் கலந்தினிக்கும்
மூதறிவு மிக்கோனாய் முத்தமிழின் முகவரியாய்
சோதனைகள் எதிர்கொள்வாய் சுட்டுவிரல் திறத்தாலே !!

குலம்விளங்க வந்தவனே குளிர்வித்தாய் என்னகத்தை
பலமென்னுள் கூடுதடா பட்டதுவும் மறந்ததடா !
மலர்போன்ற மென்பாதம் வளையவரும் போதினிலே
நிலமகளும் பதந்தாங்க நிறைந்திருக்கும் வீட்டினிலே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Nov-17, 11:06 am)
பார்வை : 78

மேலே