சென்னை மக்களே விழித்திடுங்ஙள்

மாறா அன்பில் மீண்டும் மீண்டும்
மாறி மாறிப் பொழிகின்றாள் மாரி
தேறா அரசின் அலட்சியப் போக்கால்
தூர்வாராமல் தூர்ந்து போனது ஏரி

அத்துமீறிய ஆக்கிரமிப்பு குடிகளால்
திடீர் திடீரென தோன்றினப் பலச்சேரி
ஆதாயமாய் அப்புறப்படுத்தத் தவறியதால்
ஆறுகள் போக்கின்றி நகர் ஆனது ஏரி

கடந்து சென்ற நிகழ்வுகளை புரட்டிடுங்கள்
முடங்கி எட்டிநின்று வேடிக்கைப் பார்த்து
நிரம்பிவிட்ட ஏரிகளை முறையான அறிவிப்பின்றி
திறந்துவிட்ட மெத்தன அரசை நினைவுகூருங்கள்

கட்டியத் துணியோடு பட்டினியாய் மாடியில் ஒதுங்கி
குழிவெட்ட வழியின்றி பிணங்களுக்கு தொட்டில் கட்டி
உறவுகளை இழந்து உடமைகளை துறந்து
உயிர்கள் பரிதவித்த நிலையை நினைவுகூருங்கள்

ஒருநாள் மழையில் இருண்டு மிரண்டது நகரம்
மறுநாள் பொழிவில் திரண்டு திகைத்தது போக்குவரத்து
தொடரும் மழையென வானிலை அறிவிப்பு
துரிதமாய் செயல்பட நமக்குவிடும் எச்சரிப்பு

முக்கால் மூழ்கியப்பின் முடிவெடுக்கும் அரசை நம்பி
கையேந்திக் காத்திராமல் உயிர்பிழைக்க உறவுகள் காக்க
போர்க்கால நடவடைக்கையாய் கைகோர்த்து களமிறங்குங்கள்
உரிய பாதுகாப்பும் உணவு உறையுளும் உறுதி செய்திடுங்கள்

தாழ்வுநிலக் குடிகளுக்கு உறவுகளாய் தஞ்சம் கொடுங்கள்
பழுதுபட்டு மின்கசிவு இருப்பின் மின்னிணைப்பைத் துண்டியுங்கள்
சுற்றிச் சூழ்ந்த கழிவுநீரால் தொற்றுதோய் வராது தடுங்கள்
சுற்றங்களே விழித்தெழுந்து உங்களை பேரிழப்பின்றி காத்திடுங்கள்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (11-Nov-17, 2:14 pm)
பார்வை : 57

மேலே