பாகுலத்தின் நினைவுகளிலிருந்து

பாகுலத்தின் இரவுகளிலேயே
பரிதவித்துக்கொண்டிருக்கிறது மனம்!

புதைந்துபோன சில
கலாச்சார புடவைகள்
கையில் தீபமேற்றிவர,
வாண்டுகளின் மஞ்சள்கைகள்,
வாயிற்கதவினிலே அச்சுவார்த்துக்கொண்டிருக்கும்.

வாலிபப் பெண்டீர்களெல்லாம்,
தாவணி அழகுடன்,
முழுமுற்றமும் தீபக்கோலமிட,
அதை
வாலிபக்கூட்டம் மறுபுறம்,
திண்ணையிலமர்ந்தே ரசித்துக்கொண்டிருக்கும்.

இவை அத்தனைக்கும் நடுவிலே,
கம்பிநீக்கிய மிதிவண்டியின்
கருஞ்சக்கரத்தை கையிலேந்தி
கருவேலமரம் கொழுத்த ஓடிய
என் நினைவுகளுக்கு
இன்று
இருபத்திமூன்று வயதாகிறது.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (13-Nov-17, 4:43 pm)
பார்வை : 410

மேலே