விலங்கு - கலி விருத்தம்
வீபொரு ளானை அகன்று பிறனுமோர்
மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு
மாவும் புரைப மலரன்ன கண்ணார். 60 வளையாபதி
பொருளுரை:
தாமரை மலர்போன்ற அழகிய கண்ணையுடைய கணிகை மகளிர் தம்மை நயந்து தமக்கு வழங்கி அழிந்துபோன பொருளையுடைய ஆடவனைக் கைவிட்டு, மற்றோர் ஏதிலனாகிய பெரிய செல்வனிடம் சென்று மாட்சிமை யுண்டாக விரும்புதலால்,
தாம் தொன்று தொட்டு மேய்கின்ற நிலம் புல் அற்று வறிதாய விடத்தே வேறோர் புல் நிரம்பிய நிலத்தைத் தேடிச் செல்லும் விலங்குகளையும் ஒப்பர் எனப்பட்டது.
விளக்கம்:
வீ பொருளான் - அழிந்த பொருளையுடையோன், வறுமையுற்றவன்.
கணிகை மகளிர் பொருள் அழிந்தவனைக் கைவிட்டுப் புதுவதாக வேறொரு பொருளுடையானிடம் புகுதலாலே, தாம் மேய்கின்ற நிலம் புல்லற்று வறிதாயவுடன் மற்றுமொரு புல் நிரம்பிய நிலத்திற் புகுகின்ற விலங்குகளையும் ஒப்பர் எனப்பட்டது.