கவலைச் சட்டை
உடல் பாரத்தைப்
பூமியில்
போட்டேன்...
மனபாரத்தை
வானத்தில்
மாட்டினேன்...
நிம்மதி நிழலில்
கண்களை மூடினேன்.
நிழலில்
தெரியும்
வெய்யிலின் கொடுமை.
நிம்மதியில் தான்
புரியும்
கவலையின் கொடுமை..!
கட்டாந் தரையில்
படுத்திருந்தேன்
கவலையெல்லாம்
மறந்திருந்தேன்
மாட்டிய கவலை
(என்) மேலே
விழுந்தது
நிம்மதி நிழலும்
விலகிச் சென்றது.
கவலை என்பது
சட்டையைப் போன்றது
மாட்டிக் கொள்வது
நம் மனதைப் பொறுத்தது...!
- பா. மாறன்