நமக்கெதற்கு நாடு
===================
கோடிபல நாட்டுக்குள் கொள்ளை அடித்தவர்
மாடிமனை கொண்டிருக்கும் மாமனிதர். – வாடி
வதங்கி பசிக்கும் வயிற்றுக் கெடுத்தால்
சுதந்திர நாட்டில்கள் வன்.
சின்னத் திருட்டை சிறைக்குள்ளே தள்ளுதற்கு
பென்னம் பெருஞ்சடடம் போட்டுவைத்த – மன்னர்கள்,
ஆள்கிற வர்க்கம் அடிக்கின்றக் கொள்ளைக்கு
கேள்விகள் கேட்பதில்லைக் காண்.
திருட்டைப் பிடிக்க தினக்காவல் தன்னை
கருத்துடன் வைத்தவர், கைக்குள் - திருட்டுக்கு
காவலரை வைத்தேதம் காரியத்தை செய்கின்றக்
கேவலங்கள் நாட்டுக்கே கேடு.
அரிதாரம் பூசா அரசியளார் இங்கே
சரியாய் நடிக்கும் சதிக்கு – புரியாமல்
வாக்களித்துப் போராடும் வாக்காளர் நாமெலாம்
நாக்கறுந்து வாழ்வதற்கோ நாடு?
*மெய்யன் நடராஜ்

