சத்தமிட்டதில் கத்தும் குயிலோசை அது - ஒரு பக்க கதை - கவிஜி

சத்தமிட்டதில் கத்தும் குயிலோசை அது - ஒரு பக்க கதை - கவிஜி
*****************************************************************************************

உங்களுக்கு எப்படியோ எனக்கு தெரியவில்லை. எனக்கு இப்படித்தான் எனக்கு தெரிந்து விட்டது. எவ்வளவு உயரம் என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை. ஆனால் எட்டிப் பார்க்கவே கால் கூசுகிறது. கண்கள் தடுமாறுகிறது.

நான் எட்டிக் குதித்து விட்டேன்.

சட்டென்று நீங்கள் எட்டி பார்க்கத் தேவை இல்லை. நீங்கள் பூமியில்தான் இருக்கிறீர்கள். நான் தான் பாதி ஆகாயத்தில் இருந்து கீழே வந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் கழுத்து வலிக்க.. அலைபேசியை வேக வேகமாய் சூம் செய்து கஷ்டப்பட தேவை இல்லை. நான் மெல்ல மெல்ல ஸ்லோ மோஷனில் தான் வந்து கொண்டிருக்கிறேன் . இடையிடையே காற்றில் அந்தரத்தில் என்னை நிறுத்தி விட்டு உங்களிடம் பேசவும் செய்வேன். நிதானமாக காணுங்கள். நிலையில்லா அசைதலின் வெளியை ஓர் இறகின் சுமையோடு அசைக்கிறேன்.

இனி ... காற்றில் அகல விரிந்த கைகளை பறவையாக்கி கொண்டு அலை மோதும் வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டே கீழே வரும் நான் நானா என்றே தெரியவில்லை. இருந்தாலும் இப்போதைக்கு நானென்றே இருக்கட்டும். அது தானே சுவாரஷ்யம்.

நிற்க....

நான் நேற்று காலையில் ஆற்றுக்குள் குதித்த கதை உங்களுக்கு தெரியாது இல்லையா... சொல்கிறேன்.

எதன் பொருட்டு இக்கதை என்றால் என் பொருட்டும் இருக்கலாம். ஆற்றில் விழுந்து சாவது எப்படித்தான் இருக்கும் என்று ஒரு யோசனை. எட்டிக் குதித்து விட்டேன். எல்லாருக்கும் ஆச்சரியம். எனக்கும் தான். என்னை பிசாசு என்று நம்பி விட்டார்கள். பின்ன... ஆற்று நீரில் நடந்தால்... கடவுள் என்றா சொல்வார்கள். நான் ஜடா முடி வளர்க்காதது ஒரு குறையாக இருக்கலாம். நீரில் படுத்தபடியே மிதக்கிறேன். நடக்கிறேன். எத்தனை என்னை அமிழ்த்தினாலும் ம்ஹும்... நீருக்குள் நான் நிற்கும் அந்த காட்சியே மேலும் கீழும் தேவதையை கடத்தி வருகையில் கை விட்ட படகைப் போல அசைகிறதே தவிர.... மூழ்கவில்லை. என்னடா கொடுமை இது என்று அங்கிருந்து வெளியேறி விட்டேன்...நீரற்ற மீனின் கோபம் போல.

கோமாளியை படம் பிடிப்பது போல கூட்டம் படம் பிடித்துக் கொண்டிருக்க...

நான் நேராக சென்று பாம்பு புற்றில் கையை விட்டு விட்டேன்.

நின்ற அந்தரம் அசைய நான் கீழே வந்து கொண்டிருக்கிறேன். கீழே வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் மயான அமைதி. கண்கள் வெளியே வந்து விழும் அளவுக்கு பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தினுள் பட்டென்று கீழே வந்து விழும் என்னை ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

நிற்க நிற்க...

பாம்பு முத்தமிடும். கேள்விப்பட்டதுண்டா... இல்லையெனில் சொல்கிறேன். கேளுங்கள். முத்தமிட்டது. முத்தமிட்டதில் சத்தமிட்டது. சத்தமிட்டதில் கத்தும் குயிலோசை அது. நீண்ட நேரம் கையை புற்றுக்குள் வைத்திருந்ததில் ஊறிய இரு கொத்து எறும்புகள் குறுகுறுப்பு செய்து விளையாடின. அட போங்கடா என்று எடுத்துக் கொண்டேன். கோபமாய் வந்தது. என்ன செய்ய... ரயில் தண்டவாளத்தில் தலை வைத்தால்... எல்லா ரயிலையும் கவிஜி கதை திசை திருப்பிக் கொண்டிருக்க அங்கிருந்தும் நகர்ந்து கொண்டேன்.

காற்றும் காற்றும் கட்டிக் கொள்ளும் இடைவெளியில் நானொரு கால் நீண்ட துணிப்பையாய் கீழே வந்து கொண்டிருக்கிறேன். முகத்தில் பட்டு வெடிக்கும் காற்றில் சுவாசம் தாறுமாறாய் எகிறுகிறது. பேச வரும் சொற்கள் எல்லாம் உள் குவிந்து வெளியேறும் உயிரின் சிறு சிறு துணுக்களாய் இருப்பது போல உணர்கிறேன்.

நிற்க.... நிற்க...நிற்க....

தூக்கிட்டு சாக முடிவெடுத்த போது கயிறு அறுந்து மானம் போனது. கை கொண்டே பலம் கொண்டு நெருக்கினேன். கவனம் அற்று மயக்கம் தான் மிச்சம்.

இதோ இன்னும் சில நொடியில் நான் கீழே விழப் போகிறேன். பிறகென்ன என்று கேட்கிறீர்களா... இனி சொல்ல ஒன்றுமில்லை. நான் கீழே விழுகையில் எங்கிருந்தோ வந்து தரையில் என்னை விழாமல் பாதுகாத்துக் கொண்டு உள் வாங்கி கொண்டது ஒரு சவப்பெட்டி.

இறந்தவனின் சாகா கனவுகளை, அவனை சாக விடா கனவுகளை இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அது மறதியின் பயம். நம்மை விட்டு சுழலும் பிரபஞ்சத்தின் திரி. அது மானுட பேராசை. ஆழ்மன துளிர்த்தல். மரணம் கண்ட அச்சம். பிதற்று நிலையின் பேரன்பு. கெஞ்சி கேட்கும் உயிர் பிச்சை. ஆசையின் நீண்ட தவம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் சொல்லிக் கொண்டா வருகிறது மரணம். அது கனவு தாண்டிய இருள். அது நகரும் மெல்லிசை. அதன் பிடிக்குள் அகப்பட்டே ஆக வேண்டும் விசை.

இங்கே கதையை முடித்து விடலாம் என்று நினைக்கிறேன்

சரி நான் எப்படி செத்தேன் என்று நான் சொல்லவில்லையே... சொல்லவா வேண்டாமா....... சொல்லாமல் இருப்பதில்தானே இந்தக்கதை உங்களுக்கு சுவாரஷ்யமாக இருக்கும்....ஆக,

நிற்க ஒன்றுமில்லை.... எல்லாம் கடக்கும்...என்பது தத்துவம் அல்ல. கடைசி மறதி.

கவிஜி

எழுதியவர் : கவிஜி (19-Nov-17, 10:49 pm)
பார்வை : 153

மேலே