குறுங்கதைகள் - கவிஜி

1.ஒருவன்

கிராமத்து சாலையில் ஆடி அசைந்து சென்று கொண்டிருந்த பேருந்தில் இடது பக்கம் அமர்ந்திருந்த சிறுவனுக்கு காணும் காட்சியெல்லாம் பசுமையாய் இருக்கிறது. வலது பக்கம் அமர்ந்திருந்த வாலிபனுக்கு வறண்ட காட்சியாய் தெரிகிறது. பேருந்தின் பின்புறத்தில் இடது புறம் 1990 என்றும் வலது புறம் 2017 என்றும் டைட்டில் போடப்படுகிறது.

2.காட்சி பிழை

கண்காட்சி முடிந்தது. எல்லாரும் களைந்து சென்றார்கள். சித்திரமும் சுவற்றில் இருந்து எட்டிக் குதித்து உள் அறைக்குள் சென்றது .

3.மனித குரங்குகள் அல்ல

பின்னொரு கால அகழ்வாராச்சியில் செல்பிக்கள் கிடைக்கலாம். அப்போது இவர்கள் 2000- களில் வாழ்ந்த மனித மிருகங்கள் என்று பேசப்படலாம்.

4.செத்தாலும் நிஜம்

மரண வீட்டில்1 மணி நேரத்துக்கு பின் என்ன செய்வதென்று தெரிவதில்லை உறவினர்களுக்கு.

5.இடைவெளி

இந்த பிறந்த நாளுக்கு அநாதை ஆசிரம செல்ல வேண்டும் என்றான் நண்பன். அப்பா அம்மாவை பார்க்க வேண்டும் என்று தோன்றியது கேட்டுக் கொண்டிருந்த வெகு நாட்களாக ஊர் பக்கமே செல்லாத நண்பனுக்கு.

6.ரணம்

செல்போன், வாட்ச், ஸ்பெக்ஸ், பைக், ஷூஸ், ஜீன்ஸ், டி சர்ட்ஸ், வால் பேப்பர், நிலைக்காண்ணாடி, அறை, வீடு, வாசல், வீதி என்று ஆங்காங்கே இன்னும் ஒட்டிக் கிடக்கிறது அவனின் பெரு மரணம்.

7.கவிதையின் வலி

சிறப்புரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் மூத்த எழுத்தாளர். அரங்கு நிறைந்திருந்தது. "எப்படியும் 100 புத்தகம் வித்து விடும். வாங்கிய கடனை அடைத்து விடலாம்" கூட்டி கழித்து கணக்கு போட்டுக் கொண்டிருந்தான் முதல் கவிதை தொகுப்பு வெளியிடுபவன்.

8.காலக்கறை

முன்பொரு காலத்தில் நீச்சல் அடித்த சிறுவர்கள் இப்போது கிரிக்கட் ஆடுகிறார்கள். ஆறிருந்த இடத்தில் இன்று பிட்ச் இருக்கிறது. கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்த நாம் இப்போது கறையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கிறோம்.

9. 10 செகண்டு கதை

மீதமுள்ள செகண்டுகளை என்ன செய்வதென்று தெரியாமல் பத்து செகண்டு வரை நிறுத்தி நிதானமாக படித்தான் 8 செகண்டிலேயே முடிந்து விட்ட 10 செகண்டு கதையை.

10. சட்டென கேட்க தோன்றியது

புகைப்படக் கருவியை கண்டு பிடித்தவன் செல்பி எடுக்காமலா போயிருப்பான்...?

கவிஜி
8807215457

எழுதியவர் : கவிஜி (19-Nov-17, 10:23 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 227

மேலே