குரல்தொகை

ஒவ்வொரு தேர்ந்த இலக்கிய வாசகனுக்கும், தல்ஸ்தோயா? தஸ்தயேவ்ஸ்கியா? என்ற கேள்வி எப்போதும் உள்ளாடிக் கொண்டிருக்கும். ஆம்! இந்த கேள்வியில், ஒரு துல்லியமான பதிலை எட்டிவிட்டதாக முடிவு கொண்டிருக்கும் எவரையும், அவரது இலக்கிய படிநிலையின் சறுக்கலில் உள்ளதாகவே கருத இயலும். இதை, ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலின் நடுவே வாசிக்க நேர்ந்தது. எத்தனை மகத்துவமான, எளிமையான உண்மை. ஆனால், அந்த மன உரையாடலின் முடிவிலேயே இப்போதைக்கு தல்ஸ்தோய்தான், என்ற ஒரு முடிவையும் அக்கதாபாத்திரம் எட்டும்.

இந்த நாவலில் தல்ஸ்தோயின் பெயரே அதிகம் சுட்டப்பட்டும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களின் சித்திரங்களே அதிகம் இடம்சுட்டப்பட்டும் வருகிறது. ஆயினும், எனக்கு, கிடைத்த இந்நாவலின் தரிசனத்தின் அடிப்படையில், இது தஸ்தயேவ்ஸ்கியின் மொழியில், அவரது அக இருள்பற்றிய கேள்விகளை எழுப்பும் நடையில் அமைந்ததாகவே இருக்கிறது.

நாவலில், முக்கிய பாத்திரங்கள் யாவும் அடையும் சஞ்சலங்கள் வழியாகவும், எளிய பெண் தன் குறை அறிவினாலேயே உணர்வுகளின் உச்சத்தை அடைந்து தேவதைகளாக ஆங்காங்கே மிளிரும் தருனங்கள் வழியாகவும், பதற்றமுற்று அசைந்து கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் வழியே உருவாக்கப்படும் பித்து நிலையும், அதன் நீட்சியாக பிரவாகமெடுக்கும் சத்தியத்தின் ஒளியையும் உணரும் வழியாகவும், அக நெருக்கடியின் வழியே, கனவுகளின் வழியே, தனிமையின் வழியே, தன்னை வருத்திக் கொள்ளும் பண்பின் வழியே மீட்பினை ஒவ்வொரு மாந்தரும் தேடி நகர்வதாக இருப்பதன் வழியாகவும், இது தஸ்தயேவ்ஸ்கியின் மனசாட்சியை அணிந்து கொண்டு எழுதப்பட்டதாகவே உணர முடிந்தது.

இது மேலும் தனித்தன்மையுடன் பரிணமித்திருப்பதன் அடிநாதமாக, ஒவ்வொரு மனதின் மெளனங்களும், காயங்களும், விம்மல்களும் காலத்தை ஓட்டை போட்டு தன்னைப் போலிருக்கும் மனங்களுடன் கலந்து ஒற்றை பேரிருளாகிறது. அவ்விருளின் வெம்மையும், விடிந்த பின் வரும் வெயிலின் தண்மையும் அகத்தின் சஞ்சலங்களாக தீட்டப்பட்டுள்ளது.

அருணாச்சலம் என்ற கதாபாத்திரம் முதல் வர்ணணையிலேயே, தான் வாசலைத் தாண்டி இடது காலை வைத்துவிட்டதில் ஏற்படும் துணுக்குறல் (அல்லது சஞ்சலம்) காரணமாக, எழும் கேள்விகளை தானே எதிர்கொள்வதில், தனிமனித போராட்டத்தில், அதனால் விளையும் ஊசலாட்டத்தில் துவங்குவதுதான் எத்துனை பொருத்தம் செங்கொடித் தோழர்களின் மனவியலுக்கு!

பைத்தியங்களின் வழியே இறைவனைக் காணும் விழிகள் நமக்கு மெல்ல உருக்கொண்டு வளர்கிறது. ஒரு பைத்தியத்தைச் சுட்டும் போதும், பிச்சைக்காரனைச் சுட்டும் போதும், ஒரு குழந்தையைப் பார்க்க முடிகிறது. குழந்தையின் மட்டற்ற, களங்கமற்ற விளையாட்டை மட்டுமின்றி, புறக்கணிப்பினால் விளைந்த பரிதவிப்பும், பயமும் கொண்டு செய்யும் விம்மல்களையும் பார்க்க முடிகிறது.

நாவலின் நோக்கமாக மையக்கருவிலிருந்து விலகி விளிம்புகளை நோக்கி விரிதல் என்ற அடிப்படைத் தமிழில் உச்சத்தில் உருவாகியிருக்கும் நாவல் இது. ஆயிரம் விளிம்புகள், ஆயிரம் கேள்விகளிலிருந்து உருவாக்கப் பட்டிருக்கின்றன. கம்யூனிசம் ஒரு மதம் என்று நிறுவ முற்படும் ஒரு அறிவுஜீவியிடம், தன் தருக்கத்தின் ஊன்றுகோல்களை இழந்த கம்யூனிச உணர்வாளன் கொள்ளும் மெளனமும், அதிலிருந்து வரும் ஏக்கமும், மீட்பின் வாசலைப் பொருத்தி பார்த்து அக்கற்பனை தரும் வெறுமையும் நம்மைப் பீறிடலிலிருந்து கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவை ஆக்கிவிடுகின்றன.

தற்போது, இரண்டாண்டுகளாக உலக அளவில் பெரிதும் முக்கியமான நூலாகப் பரிந்துரைக்கப்பட்டு வரும், ‘சேப்பியன்ஸ்’ நூலில் இந்த ‘மதம்’ பற்றிய வரையறைகள் உண்டு. அதில், இவ்வாறு கம்யூனிசத்தை மதமாக உருவகித்துச் சொல்லப்பட்டிருக்கும். இருப்பினும், இப்புனைவில், இருக்கும் நீட்சியை அது தொடவில்லை, அல்லது, பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் தொடவே முயற்சி செய்திருக்கிறது. ஆனால், இம்மனநிலை, இடது வலது கால்களில் தொடங்கி சித்தாந்தங்கள் வரை கேள்விகளால் ஊசலாடிக் கொண்டிருந்த சத்திய மனங்களுக்கு எப்போதும் இருந்திருக்கிறது, என்பதை தரிசனத்தின் ஒரு புள்ளியாகக் கொள்ள இயலும்.

வியப்பாக, ‘ஒரு மனிதனின் மூளையை வடிவமைப்பதன் மூலம் ஒரு சமூகத்தையே வடிவமைக்கும் நிலை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று ஒரு கதாபாத்திரம் சொல்கையில், இதுவும் ‘ஹோமோ டியஸ்’ நூலில் முக்கிய பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. அறிவு நிழல் என தொடர்ந்து வரும் மனசாட்சியிலிருந்து பல காலமாக மெல்ல அடைந்ததுதான் அத்தனைக் கோடி நூல்களும்.

இந்நாவலைப் பற்றி, பலரும் எழுதி இருக்கிறார்கள். ஜெயமோகன் அவர்கள் தளத்திலேயே இவை தொகுக்கப்பட்டுள்ளன. இங்கு நான் என் அகத்தின் வெளிப்பாடுகளைத் தெரிவிக்கக் காரணம். இது தனித்துவமானதுதான் எனப்பட்டதே. இந்நாவல், வெகுவாகவும் கவித்தனமானது – மொழியினடிப்படையில் அன்றி சித்தாந்த அடிப்படையில் – எளிமையாக அகவயமானது என்று குறிப்பிடலாம். ஒவ்வொரு வரியிலும் இலக்கிய கோட்பாடுகளின் அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும் பகுப்பாய்வும் செய்யதக்க நூலாகவே இது உள்ளது. ஆயினும், அதை நான் செய்ய முடியாது. இது உயிர்சதையாக என்னை காட்டுகிறது. வெறும் காடாவர் ஆய்வு பணியாக இதை மேற்கொள்ள முடியாது.

உயிர்தெழுதல் என்னும் அத்தியாயத்தில் வரும் மீட்பர் புண்களுடன் உள்ளார். அது மக்களின் புண்களின் பிரதிபலிப்பு. தங்கள் புண்களை ஒன்றோடொன்று காட்டி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீட்பரின் புண்களைப் பார்த்ததும் துயருற்று, அப்புண்களைத் தங்களுக்குத் தந்துவிடுமாறு வேண்டுகின்றன. அங்கு மீட்பர் கொள்ளும் உக்கிரநிலையே சிவப்பின் நிறம்! உண்மைதான் ‘வன்முறை தூங்கும் பூதம்’ அதை எழுப்பிவிடும் தூண்டற்காரணிகள் மட்டும் ஒவ்வொரு நிழலுக்கும், ஒவ்வொரு ஜடத்திற்கும் வேறுபடுகின்றன.



நன்றி.
அன்புடன் கமலக்கண்ணன்.

எழுதியவர் : (21-Nov-17, 12:06 pm)
பார்வை : 87

மேலே