நேற்று இரவு ஒரு கனவு

அமைதி ஒழுகும் அடர்ந்த காடு

நிசப்த அலைவரிசையில்
ரீங்காரம் பாடும் வண்டுக்கூட்டம்

தூங்கும் மரங்கள்
தூங்காத அதன் இலைகள்
ஒன்றைஒன்று உரசி
முத்தமிடும் சத்தம்

தூரத்து விண்மீன்கள்

துரத்தும் நிலவு...

வளர்ந்து செழித்த காட்டிற்கு
வகிடு எடுத்தாற்போல்
ஒரு ஒத்தையடி பாதை

நீளும் பாதையில்
நீயும் நானும்...

இருவரும் கைபிடித்து
என் தோழில் உன் முகம் புதைத்து
காட்டின் நடுவே
கால்நடை பயணம்...

காற்றுடன் கலவிகொண்ட
மேகக்கூட்டங்கள் தன் சிறுசிறு
குழந்தைகளை தூவுகின்றன
தூரல்களாக...

சிந்திய தூரலில்
சிதறிய துளியொன்று
உன் நெற்றி தழுவி
கண்ணம் கழுவி
நாடி நழுவி நடைபோடும் போது சட்டென்று அதைப் பிடித்து என்
சட்டைபைக்குள் ஒளித்துவைத்தேன்

ஏன் ?என்று நீ வினவ

சிப்பியில் ஒளிந்த முத்தைப்போல்
இது
சிற்பத்தில் வழிந்த முத்தென்றேன்

நீ புன்சிரிப்புடன் கண் மூடிகொண்டாய்

சட்டென்று கண்திறந்து
எங்குதான் போகிறோம்
என்னிடம் சொல் என்றாய்

இப்போதே சொல்கிறேன்
இதழ்முத்தம் தா என்றேன்

வெட்கம் வந்து முட்ட
விலகி ஓடிய உன்னை

இழுத்து இடைஅணைத்து
முத்தமிடும் வேளையிலே

கனவில் கல்லெறிந்தானடி
காலை கதிரவனும்

ஏங்கி தவிக்கிறேனடி
எப்போது வரும் இரவென்று

அந்த அழகிய கனவும்
அப்போதுதான் வருமென்று....

எழுதியவர் : பெ.வீரா (28-Nov-17, 5:53 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 474

மேலே