என்னிதயத்தை கண்டுகொண்டேன் - கதை பகுதி-2

அவள் அவளில் அடக்க முடியாத பெருமூச்சுகளையும் அவள் நினைவுகளையும் காகிதத்தில் கொட்டி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள தன் பேனாவை தேடிக் கொண்டிருந்தபோது ஜன்னலோர காற்றில் அவளின் டையிரியின் பக்கங்கள் புரண்டு கொண்டிருந்தது

பகுதி -2

எல்லா நாளையும் போல தான் அந்த நாள் இருந்தது என்று நினைத்துக் கொண்டே ஆரம்பித்தாள் . வழக்கம் போல சூரியனுக்கு குட்மோர்னிங் சொல்ல ஜன்னல் ஓரம் அமர்ந்தபடி ஒரு குவளை நீரை உரிந்து குடித்து அப்படியே சூரியனையும் உள்வாங்கி அழகாகவே ஆரம்பித்தது அந்த விடியற்காலை பொழுது.

அன்று மாலை வழக்கம்போல அந்த வாராந்திர இதழை வாசித்துக் கொண்டிருந்தாள் . அதன் பதிவுகள் அனைத்தையும் ரசித்து ருசித்து படித்து விடுவதில் அவள்க்கு அலாதி பிரியம். கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா , கொஞ்சம் ஆரோக்கியம் , அழகு குறிப்பு , அறிவுரை என எல்லாவற்றையும் சுமந்து வரும் அந்த பெண் இதழுக்கு இந்த பெண் ரசிகை .

அந்த புத்தகத்தை எடுத்தால் முழுதும் படிக்காமல் அவள் கீழே வைப்பதில்லை. சாய்ந்து உட்கார்ந்து நீண்டு நீளும் பக்கங்களோடு அவள் கண்களும் சேர்ந்து புரண்டு முடிந்தால் மட்டுமே மூச்சு வரும் அவளுக்கு. அன்றும் அப்படி ஒரு பெருமூச்சோடு முடிக்கும்போது அவள் கண்களில் துணுக்காக எதோ தென்பட்டது.

ஆம் கடைசி பக்கத்தின் கடைசி மூலையில் நீங்களும் எழுதுங்கள் என்று தலைப்பிட்டு ஒரு சதுரம் ஒரு தகவல் சொன்னது. கவிதை , கதை , காமெடி துணுக்கு ஏன் அது மட்டுமா உங்க ஊர் திருவிழா , உங்க பசுமாடு கண்ணு குட்டி போட்ட அழகு , உங்க ஊர் பொருட்காட்சி என்று உங்கள் கண்களில் காணும் சுவாரஸ்யமான விஷயங்களை நீங்கள் எழுதுங்கள் முடிந்தால் புகைப்படங்களோடு அனுப்பி வையுங்க, உங்கள் பெண் இதழில் வெளியிட்டு உங்களை பெருமை படுத்துகிறோம். எழுத்துக்களில் இணைவோம் என்று சொல்லி முடிந்தது சதுரங்க செய்தி.

எழுத்துக்களில் இணைவோம் என்ற இந்த வார்த்தை அவளை என்னவோ செய்ய போகிறது என்று அறியாத பேதையாக எதோ ஒரு கப் பூஸ்ட் குடித்த உற்சாகத்தோடு குதித்து எழுந்து தன் அலமாரி பக்கம் ஓட தொடங்கினாள்.

தன் அலமாரி துணிகளுக்கு அடியில் இருந்த பெரிய நோட்டை எடுத்துக் பார்த்தாள். எல்லாம் அவ்வப்போது அவள் எழுதி வைத்த கவிதைகள். பூவை பற்றி முதல் கவிதை இருந்தது .. ம்ம்ம் என்று எதோ யோசித்தாள்.

எந்த கவிதையை அனுப்பலாம் என்று ஒரே போராட்டம் அவள் மனதுக்குள் . முதல் கவிதை அழகாக அனுப்ப வேண்டுமே என்று அவளது கவிதைகளை ஒவ்வொன்றாக வாசித்து ஆசை போட தொடங்கினாள் . எப்போதும் அவளுக்கு அழகாவே தோன்றும் அவள் கவிதைகள் இன்று சல்லரித்து தேடும் போது சில அவளுக்கே பிடிக்கவில்லை என்பது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

என்ன அனுப்பலாம் என்ன அனுப்பலாம் என்று அடித்துக் கொண்டது மனது. காதல் கவிதையின் ரசம் அவள் ரசித்து வாசித்து முடித்த பொழுதில் முதல் முதலாக ஒரு பத்திரிகைக்கு இப்படி காதல் சொட்டும் கவிதையை அனுப்ப மனம் என்னவோ தடுக்க அடுத்த பக்கத்தை புரட்ட ஆரம்பித்தாள் .

கொஞ்சம் பொதுவாக இயற்கை மழை என்ற மாதிரி கவிதைகளை தேடிய அவள் கண்ணில் பட்ட கவிதையைக் கண்டதும் முகத்தில் பல்பு எரிந்தது . அது மழலையின் சிரிப்பு என்று தலைப்பிடப்பட்டு இருந்தது .

எதிலும் தொலையாத
என் மனசு
இந்த முத்து
பற்களின் இடையில்
அந்த கள்ளமில்லா
குட்டி சிரிப்பில்
தொலைகிறதே

என்று ஆரம்பித்திருந்தது. இது சரியாக இருக்கும் என்று தோன்றிற்று . ஒரு சின்ன மடக்கு மடக்கி அந்த நோட்டை மூடி மறுபடியும் துணியின் அடியில் வைத்து மூடினாள் .

தன் பெயரோடு இந்த இதழில் ஒரு கவிதை வந்தால் எப்படி இருக்கும் நெனைத்துக் கொண்டே கண்ணை மூடி சிரித்தாள் . அப்படியே தூங்கிப் போனாள். இப்படியான நிம்மதியான தூக்கங்களை இனி அவள் தொலைக்க போகிறாள் எனப் பாவம் அப்போது அவள் அறிந்திருக்கவில்லை .

எழுதியவர் : யாழினி வளன் (28-Nov-17, 11:43 pm)
பார்வை : 222

மேலே