நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-02
![](https://eluthu.com/images/loading.gif)
.....நெஞ்சோடு கலந்திடு.....
அத்தியாயம் : 02
"ஹேய் நித்தி...நில்லுடி...என்றவாறே என் பின்னே துரத்திக் கொண்டு வந்தவன்,எனக்கு இணையாக வந்து சேர்ந்தான்..."
"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்டி..."
"ஏன்டா...இந்த பதினெட்டு வருசமா என்னை நீ பேசியே கொல்றது பத்தாதா...??இதில இப்போ என்னத்த புதுசா பேசிடப் போறாய்...??.."
"இந்தப் பதினெட்டு வருசமா உன்கிட்ட பேசாத ஒன்னை...சொல்ல முடியாம எனக்குள்ளேயே பொத்திப் பொத்தி வைச்சிட்டிருந்ததை இன்னைக்கு உன்கிட்ட நான் சொல்லியே ஆகனும் நித்தியா...."
"என்னடா??வரும் போது ஏதும் படம் பார்த்திட்டு வந்தியா...ஒரே டயலோக்கா அடிச்சு விடுற..."
"ப்ச்....விளையாடாத நித்தியா....நான் உன்கிட்ட சீரியஸாப் பேசிட்டு இருக்கேன்...."
"இதோ பார்றா..."என்று அவனை மறுபடியும் கேலி செய்யத்தான் தோன்றியது எனக்கு...ஆனாலும் அவனது முகத்தில் தெரிந்த எதுவோ ஒன்றில் அந்த வார்த்தைகளை எனக்குள்ளேயே முழுங்கிக் கொண்ட நான்...
"சரி...நானும் சீரியஸாவே கேட்கிறேன்....என்ன விசயம்....சொல்லு...??..."
"அதை இப்படி சைக்கிள் ஓடிக்கிட்டே எல்லாம் சொல்ல முடியாது....அந்த மணலோரமாய் நிப்பாட்டு சொல்லுறன்...."
அப்போதுதான் நாங்கள் கதைத்துக் கொண்டே வீட்டிற்கு சற்று அருகாமையில் இருந்த கடற்கரைப் பகுதிக்கு வந்துவிட்டிருந்ததை நான் கவனித்தேன்...
"ஏன்டா....உனக்கு அறிவே இல்லையா....இந்தக் கொட்டுற மழையில இப்போ நின்னு பேசுறது ரொம்ப முக்கியமாக்கும்....??..."
"ஆமா....இப்போ மட்டும் நீ அடிக்கிற வெயிலில தானே சைக்கிள் ஓடிட்டு இருக்க பாரு....உனக்குத்தான் அலைகளோட விளையாடிக்கிட்டே மழையிலையும் நனையுறன்னா ரொம்பப் பிடிக்குமே..."
"ஏன்டா...அதுக்காக இப்போ இந்த அடை மழைக்குள்ள நின்னுதான் கட்டாயம் பேசியாகனுமா...??வீட்டிலேயே போய் பேசிக்கலாம்...வா..."
"வீட்டை எல்லாம் போய் பேச முடியாது...அஞ்சே அஞ்சு நிமிசம்தான்....அதுக்குள்ள எல்லாத்தையும் சொல்லி முடிச்சுடுறேன்..."
அன்று எனக்கு அவனது பேச்சுக்கள் அனைத்தும் வித்தியாசமாகவே தோன்றியது...ஆனாலும் அவன் காதலைத்தான் சொல்லப் போகிறான் என்று என் மனம் எதிர்பார்த்திருக்கவில்லை...
"என்னவோ பண்ணித் தொலை..."என்று அவன் மேல் செல்லமாய் கோபத்தைக் காட்டிய நான்,மரத்தினோரமாய் சைக்கிளை நிறுத்திவிட்டு,கடல் அலைகளில் கால் நனைக்க ஓடோடிச் சென்றேன்...
கடலுக்குள் காலை வைத்ததுமே அவனை நான் மறந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்...அலைகளைத் துரத்திக் கொண்டு ஓடுவதும்,அலைகள் நெருங்கி வருகையில் விலகி ஓடுவதுமாய் என் விளையாட்டைக் காட்டிக் கொண்டிருந்தேன்....
அவனும் தள்ளி நின்று என் விளையாட்டுக்களைத்தான் சிறிது நேரம் ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்ததாக பின்நாட்களில் அவன் சொன்னதுண்டு...அப்போது அவனது ரசனையான பார்வைகளை உணர்ந்து கொள்ளும் நிலையிலும் நான் இருக்கவில்லை...
மழையினையும்,அலைகளையும் ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்த எனக்கு,அவனைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் கூட எழவில்லை....அவன் எதுவோ முக்கியமாகப் பேச வேண்டுமென்று அழைத்ததைக் கூட மறந்து போனேன்...
என் அருகே நெருங்கி வந்த அவன்,
"ஹலோ,மிஸ்.நித்தியா என்னை யாரென்டு தெரியுதா உங்களுக்கு...??..."
அவன் அப்படிக் கேட்டதும்தான்....அவனோடு வந்ததே எனக்கு உறைக்க..
"சொரிடா....எனக்கு பிடிச்ச இரண்டும் இன்னைக்கு ஒன்னாவே கிடைச்சிருக்கா...அதான் உன்னை மறந்தே போனேன்..."
அப்படி நான் கூறியதும் அவனது முகம் ஒரு மாதிரியாக மாறியதை என் விழிகள் குறிப்பெடுத்துக் கொண்டாலும்,அதற்கான காரணத்தைத்தான் என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை...அவனது முக மாற்றம் அடுத்தடுத்து வந்த அவனது பேச்சுக்களிலும் வெளிப்பட்டது...
"ஓஓ....அப்போ உனக்கு என்னைப் பிடிக்காது....??...அப்படித்தானே...?.."
அவன் கேட்ட கேள்வியில் அவனுக்குத் தலையில் ஏதும் அடிப்பட்டுவிட்டதோ என்றுதான் தோன்றியது எனக்கு...
"லூசாடா நீ...நான் என்னவோ சொன்னா....நீ என்னவோ சொல்லிட்டு இருக்காய்...??.."
"உனக்குப் பிடிச்சதெல்லாம் உன் பக்கத்தில இருக்கும் போது என்னை நீ மறந்திட்டாய்னா....உனக்கு என்னைப் பிடிக்கலைன்னுதானே அர்த்தமா இருக்க முடியும்...."
"மண்ணாங்கட்டி..."
அவன் கொடுத்த விளக்கத்தில்,எனக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை...அவனை எவ்வளவு முறைக்க முடியுமோ அவ்வளவு முறைத்துக் கொண்ட நான்,அங்கிருந்து நகர முற்பட்டேன்....
ஆனால் அவனது இரும்புப்பிடி,என் கையினை மட்டுமில்லாமல் என்னையும் அங்கிருந்து அசைய முடியாமல் தடுத்து நிறுத்தியிருந்தது....
நினைவலைகள் தொடரும்.....