காணாமல் போனவைகளிலிருந்து - 2

காணாமல் போனவைகளிலிருந்து - 2
==================================

நமக்குள் ஒரு அன்யோன்யம் இருந்தது,
நம்மால் நாம்
நம் இரவுபகல்களை மறந்திருந்தோம்,
நம்மால் தான் நமக்கு அவர்களைத் தெரியும்,
நாம் பேசியதால்தான்
அவர்கள்
நம்முடன் அன்யோன்யம் ஆனார்கள்,
நாம் பேசிக்கொண்டிருப்போம்
அவர்களும்
அங்கு பேசிக்கொண்டிருப்பார்கள்,
இங்கும் அங்குமென
சில குரல்கள் நம்முடன் கலந்துகொண்டிருக்கும்,
நம் நலனுடன்
அவர்கள் நலமிருப்பார்கள்,
நம் மூலம் தான்
நம் வீடுகளின் அறைகளும்
அவர்களின் வீட்டு அறைகளும் நமக்கு தெரியும்
நம் இருவரின் மூலம் தான்
அவர்களின் இருப்பிடங்களுக்கு நாம்
அடிக்கடி சென்று வருவோம்,
நம்முடைய சண்டைக்குள்
அவர்களும் இன்னலுற்றிருந்தார்கள்,
நாம் நடந்த சாலைகளும்
சமிக்கை சப்தங்களும் கூட அப்படித்தான்,
நம் அலைப்பேசி அதிர்வுகளுமே
அதைத்தான் சொல்லின
நாம் ஒரே நேரத்தில் நம்மை நினைக்கிறோம் என,

நட்சத்திரங்களைப்போல்
நம் உதடுகள்
எண்ணிடலங்காத
முத்தங்கள் பகிர்ந்தன,,

நம் மனவீடுகளில் நாம் நிறைந்திருந்தோம்
அங்கே
சில பரிசுகளை
நம் நினைவாக நிறைத்திருந்தோம்,
இப்படியாகத்தான் அங்கே நாம் வாழ்ந்திருந்தோம்,

நாட்போக்கில்,
நம் அலைப்பேசிகள் அதிர்விழக்கும்
நாம், நம் அன்யோன்யத்தின் நினைவுகளாவோம்
அவர்களும்
நம் அன்யோன்யத்தின் நினைவுகளாவார்கள்
பின்பொருநாள்
நாம் நம் நினைவுகளோடு பேசிக்கொண்டிருக்கும்போது
நம் குரல்களும்
அவர்களின் குரல்களும்
ஒரு விசாலமான இருட்டறையின் எதிரொலிகளாகும்
இதற்கெல்லாம் முன்பாக
உன் பார்வையிலிருந்து தூரமாகி
கருத்த புள்ளியாகி
என் முகம் மறையும்
ஆசைப்பட்டுக் கொடுத்த பரிசுப்பொருட்கள்
அதன் குணம் இழக்கும்
உன் நினைவுகள்

அவற்றை
பாத்திரப்படுத்திய மேக்கப் டப்பாவை
நீ திறந்து பார்த்து
நாட்கள் ஆகியிருக்கும்
உன் பீரோவில் அடர்ந்திருக்கும்
எத்தனையோ
நீலங்களுக்கிடையில்
அந்த நீலப்பட்டு
கரையொழுகிப் போயிருக்கும்
இப்படித்தான்
நாம் நம்மை எங்கோ தொலைத்திருப்போம்

ஒரு சங்கராந்தியிலோ
இன்னொரு வீடு மாறுகையிலோ
தூசுத்தட்டும்போது
அவை
தட்டுப்படலாம்
அப்போது
அவை
சிலந்தி வலைக்கட்டிக்கிடக்கலாம்
திறன் குறைந்த
ஒரு மின் குமிழியின் மஞ்சள் வெளிச்சத்தில்
அவை நிர்மலமாகியிருக்கலாம்,
உணர்ந்துவிடு,
எப்போதோ இரைச்சல்களுக்கப்பால்
நீ பிரியமாய் கேட்டு
எங்கோ தொகைந்துவிட்ட
கணீர் குரலொன்றின் தோய்வொலியை
உணர்ந்துவிடு,
எனாமல் அகற்றப்பட்ட சுருள் காட்சியாய்
உனக்குள்
அணைந்தணைந்து எரியும்
ஒரு முகப்பொலிவை

உறங்கும்
உன் பின்னாலிருந்து
கதவுகள் தட்டலாம்
மிச்சமிருக்கும், ஒரு பூட்ஸ் சத்தத்தின் கனவுகள்
உணர்ந்துவிடு,

மீண்டும் நாம்
எப்போது நம்மை நினைக்கப்போகிறோம்

இதயவரம்பன்

எழுதியவர் : அனுசரன் (29-Nov-17, 12:55 am)
பார்வை : 110

மேலே