வைரமுத்துவின் மரபுக் கவிதை
வைகறை மேகங்கள்
ஒளிப்புக்கள்....
பூந்துகில் உடுத்த புதுமதி யழகி
நீந்தியே திரியும் நீலப் பட்டில்
வைத்துப் பின்னி வண்ணங் கூட்டித்
தைத்துத் தொடுத்த தங்க சிமிழ்கள்...
சற்றேதெறித்த சரச்சிரிப்பாக
உற்று பார்க்கும் ஒளியின் பூக்கள்
திரும்பிச் சிரித்துத் தேன்விழி அசைத்து
விரும்பி அழைக்கும் வேசியர் கூட்டம்...
சித்திரப் பூக்கள் செம்பலா ஈக்கள்
நித்தில வீதியில் நிலவுக் கன்னி
அறுத்துப் போட்ட ஆரச் சிதறல்
வறுமை வானம் வடித்த கண்ணீர்...
உறைந்து தங்கிய ஒளியின் துளிகள்
விரந்து முறிந்த மின்னல் துண்டுகள்
இன்ப இரவில் இருட்டின் விழிகள்
விண்ணில் காணும் வெளிச்சக் கனவுகள்...
கட்டில் மீதில் காதலி மார்பை
தொட்டு தொட்டு சுகபோ தையினில்
கைதொடும் அழகை காதலி விரும்பி
மெய்தோடும் அழகை மேலே இருந்து
பார்த்துத் தவித்துப் பலமுறை ஏங்கி
வேர்த்து கிடக்குதா வெண்ணிலா வானம்...???
வட்ட நிலவின் வயிற்று பிள்ளைகள்
கொட்டி கிடக்கும் கொடியிலா முல்லைகள்
இயற்கைக் கன்னி என்னை கொஞ்சம்
மயக்க எண்ணி மையிருள் வானில்
அள்ளித் தெளித்த ஆடகப் பூக்கள்
வெள்ளிப் பொறிகள் வெண்ணிலாத் தூள்கள்...
எந்த கண்ணகி எதை உடைத்தாளோ..?
இந்தப் பரல்கள் எப்படி வந்தன..?
மின்மினிப் பறவைகள் மேகக் கிளைகளில்
பொன் மணிக் கூடுகள் புதுப்பித்தனவா..?
வெள்ளி சிமிழ்கள் விசும்பு வயலில்
நள்ளிருள் நடத்தும் நாற்று நடவுகள்
சுந்தர மங்கையர் சொர்க்க நாட்டிலே
செந்தளிர்க் குழந்தையைச் செவியோ டணைத்துத்
தாய்ப்பால் கொடுக்கையில் தவறிய துளிகள்
காய்த்து சிதறிய கற்பக விதைகள்..
தேங்கிய கடலின் சிப்பியை வானம்
வாங்கிய நிலையால் வந்த பேரெழில்
என்றே வியந்தேன் இதயம் சிலிர்த்தேன்
கண்டேன் கண்டதைக் கண்களில் ஏந்தினேன்
எண்ணி பார்க்க எண்ணி பார்த்தேன்
எண்ணுவ தெப்படி என்னைப் பார்த்தேன்.....!!!