கண்ட நாள் முதலாய்-பகுதி-33
....கண்ட நாள் முதலாய்....
பகுதி : 33
புதிய வீட்டில் இருவருமாக பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்...அதிகாலையிலே வந்து ஒவ்வொரு பகுதிகளாய் பிரித்துப் பிரித்து ஒழுங்குபடுத்த தொடங்கியிருந்ததால் அவர்களின் வேலையும் சுலபமாகவே முடிந்து கொண்டிருந்தது...
எங்கெங்கே எதை வைப்பதென்பதை துளசியின் விருப்பத்திற்கே விட்டவன்,பொருட்களை தூக்கி வைப்பதில் மட்டும் அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான்...
ஹோலையும்,அதோடு இணைந்திருந்த சுவாமியறையையும் ஒழுங்கு பண்ணி முடித்தவர்கள்,மறுபுறமாய் இருந்த சமையலறையை இறுதியாகப் பண்ணிக் கொள்வோம் என்று முடிவெடுத்து மேலே சென்றார்கள்...சுவாமியறைப் பக்கமாய் இருந்த மற்றைய அறையை அரவிந்தன் தன் வேலைக்கான அறையாக ஒதுக்கிக் கொண்டதால்,அதை அவனே தனித்துச் செய்வதாகவும் கூறிவிட...கீழே அனைத்து வேலைகளுமே வெற்றிகரமாகவே முடிந்திருந்தது...
மேலே இருந்த மூன்று அறைகளில்,ஒன்றை அவர்களின் படுக்கையறையாகவும்...மறு அறையை விருந்தினர் அறையாகவும் ஒதுக்கிக் கொண்டார்கள்...மூன்றாவது அறை தனக்கு வேண்டுமென்று அரவிந்தன் கூறிவிட்டதால்,மற்றைய இரு அறைகளையும் ஒழுங்குபடுத்திவிட்டு,மீதமிருந்த சமையலறை வேலைகளையும் முடித்துக் கொண்டார்கள்...
அனைத்து வேலைகளையும் முடித்து அவர்கள் அப்பாடா என்று கதிரையில் சாய்ந்த போது நேரம் இரவு பத்து மணியைத் தொட்டிருந்தது...இடைக்கிடையே சாட்டுக்கு வாயில் ஏதோ தள்ளியவர்களுக்கு பசி வயித்தைக் கிள்ளத் தொடங்கியது...
மதியத்திற்கு கொண்டு வந்த உணவில் சிறிது மிச்சம் இருக்கவும்,அதையே இருவருமாக பகிர்ந்துண்டவர்கள்...அங்கிருந்து கிளம்பி வீட்டை வந்தடைந்தார்கள்...
அன்று முழுவதுமான களைப்பில் உடை மாற்றிவிட்டு கட்டில் வந்து படுத்துக் கொண்டவர்களுக்கு,இருவருமே ஒருவருக்கொருவர் நெருக்கமாய் படுத்தது கூட தெரிந்திருக்கவில்லை..
நடு இரவில் தண்ணீர்த் தாகம் எடுக்கவே,விழித்துக் கொண்ட அரவிந்தன்...அருகே தெரிந்த அவள் முகத்தின் வதனத்தில் அவனை மறந்து அவளையே பார்க்கத் தொடங்கினான்...அவளையே பார்த்துக் கொண்டிருந்ததில் அவனது தண்ணீர்த் தாகம் கூட காணாமற் போனது...
அவளது முகத்தினை மறைத்து விழுந்திருந்த முடிகளை அவளது காதோரமாய் ஒதுக்கிவிட்டவன்,வழமை போலவே அவளது கரத்தோடு அவனது விரல்களைப் பிணைத்தவாறு விலகிப் படுத்துக் கொண்டான்....
அடுத்த நாள் காலையும் அவர்களுக்கு அழகாகவே விடிந்தது....காலையிலேயே யோகேஸ்வரன் அவர்களிருவரையும் மறுவீட்டு விருந்திற்காய் அழைத்து விட்டுச் சென்றிருந்ததால் துளசியின் முகத்தில் வழமையை விடவும் இரட்டிப்பான மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருந்தது...
மறுநாளே அவர்கள் துளசியின் வீட்டிற்குச் செல்வதாக இருந்ததால்,அன்றே அவர்களின் புதிய வீட்டில் மீதமிருந்த வெளி வேலைகளையும் முடித்துவிட்டு வந்தனர்....அதன் பின் அவர்களின் உடைகளையும்,ஏனைய பொருட்களையும் பைகளில் நிரப்பியவர்கள்,அடுத்த நாள் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்...
பெட்டியில் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தவளின் முகத்தில் கொட்டிக் கிடந்த புன்னகையைக் கண்டு ரசித்தவன்,அவளை வம்பிழுக்கத் தொடங்கினான்...
"என்ன மேடம் பிறந்த வீட்டுக்குப் போறென்டதும் முகம் முழுக்க ஒரே பிரகாசமா இருக்கு....அங்க போனதும் எங்களை கொஞ்சமாச்சும் கவனிப்பீங்களா...இல்லையா...??..."
வீட்டிற்குப் போகும் நினைவிலேயே துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவளுக்கு அவனது கேள்வி காதில் விழவேயில்லை...அவள்பாட்டிற்கு அலுமாரியில் இருந்து அவளது ஆடைகளை எடுத்து பெட்டியில் மடித்து வைத்துக் கொண்டிருந்தாளே தவிர....அவனை அவள் திரும்பியும் பார்க்கவில்லை...
அவளிடமிருந்து பதில் வரும் என காத்திருந்து ஏமாற்றமடைந்தவன்,தனக்குத்தானே வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்...
"சரியாப் போச்சு....டேய் அரவிந்தா உன் நிலைமை இங்கேயே படு மோசமாய் இருக்கே...அங்க உன் நிலைமையைப் பத்தி சொல்லவே தேவையில்லை...."
அவனது முணுமுணுப்புச் சத்தத்தைக் கேட்டு லேசாக அவனைத் திரும்பிப் பார்த்தவள்,
"என்ன சேர் உங்களுக்குள்ளேயே பேசிட்டு இருக்கீங்க...??.."
"ம்க்கும்....இது மட்டும் உன் காதில தெளிவாக் கேட்டிடுமே..."என்று மனதில் நினைத்துக் கொண்டவன்,வெளியில்...
"வேற வழி....பேசுறதுக்கு ஆள் இல்லைன்னா...இப்படி தனியாத்தான் பேசிட்டிருக்க முடியும்...??..."
"ஓஓ...ஹோ...அப்போ எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு ஆளாத் தெரியலையா...??என்று புருவத்தைத் தூக்கிக் கேட்டவள்,அவன் அவளை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்க்கவும்..
"என்ன சேர் பார்வை எல்லாம் பலமாயிருக்கு....??.."
"இல்லை...இவ்வளவு நேரமா இங்க ஒருத்தன் குத்துக்கல்லு மாதிரி உட்கார்ந்திருந்தானே...அவனை கொஞ்சமாச்சும் நீங்க கவனிச்சீங்களா மேடம்...??.."அவன் என்னமோ அதை போலியான கோபத்தோடுதான் கேட்டான்...ஆனாலும் அவள் கவனிக்கவில்லையே என்ற ஆதங்கமும் அதில் லேசாக வெளிப்பட்டது....
அப்போதுதான் துளசிக்கும்,வீட்டின் நினைவில் முழ்கியிருந்ததில் அவன் அருகிலிருந்ததைக் கூட மறந்துவிட்டோமே என்ற விபரம் உறைத்தது...
"இல்லை....ரொம்ப சொரி அரவிந்தன்...நான் வீட்டுக்குப் போற சந்தோசத்தில..."என்று சொல்லிக் கொண்டு வந்தவளுக்கு ஏனோ தெரியவில்லை பாதியிலேயே கண்களிரண்டும் கலங்கி வார்த்தைகள் தடைபட்டுக் கொண்டன...
அவள் கண்கள் கலங்குவதைக் கண்டதும் எழுந்து அவளருகே சென்றவன்,
"ஹேய் துளசி...நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்...இதுக்குப் போய் கண்ணெல்லாம் கலங்கிக்கிட்டு..."என்றவன் அவளது கண்களை மென்மையாகத் துடைத்து விட்டான்...
அவள் கொஞ்சம் சமாதானமாகி வரவும் அவளது கண்களை நன்றாக ஊடுருவிப் பார்த்தவாறே...
"ஏன் இப்போ அழுத துளசி..??."
"தெரியல..."என்று அவளுக்கே கேட்காத குரலில் சொன்னாள்...உண்மையிலேயே அவள் ஏன் அழுதாள் என்பது அவளுக்கே தெரியவில்லைதான்....அவன் விளையாட்டிற்குத்தான் சொன்னானென்று அவளது மூளை அறிந்திருந்தாலும் மனம் ஏனோ அவனது கேள்வியில் கலங்கத்தான் செய்தது...
ஆனால் அரவிந்தனால் அவளது அந்த அழுகைக்கான காரணத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது...சொல்லப் போனால் அதில் அவனுக்குக் கொஞ்சம் சந்தோசமும் கூட...அவனது விளையாட்டான கோபத்தைக் கூட அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் அவள் மனதிற்கு அவன் நெருக்கமாகிக் கொண்டு வருகிறான் என்றுதானே அர்த்தம்..
"ம்ம்...சரி...நீ உன் துணிகளை அடுக்கு...எனக்கு கொஞ்சம் வெளி வேலை இருக்கு...போயிட்டு வந்திடுறேன்..."
"ம்ம்.."
என்ன வேலை என்று அவளும் கேட்கவில்லை...அவனும் சொல்லவில்லை...கிளம்ப முன் மீண்டும் அவளை அழைத்தவன்,
"நான் வரவும் லேட் ஆகும் துளசி...நீ சாப்பிட்டுத் தூங்கு..."
"ம்ம்...சரி அரவிந்தன்..."
அவன் கிளம்பிச் சென்றதும்...அவனில்லாத அந்த அறை அவளுக்கு வெறுமையாகத் தோன்றியது...அவன் அருகில் இருக்கும் போது அவனைத் தேடாதவள்...அவன் விட்டுச் சென்றதும் அவனது நினைப்பிலேயே சுழலத் தொடங்கினாள்...
எப்போதும் அவனுடனேயே உணவருந்திப் பழகியவள்,அன்றைய இரவுணவின்னை அவனின்றிச் சாப்பிடப் பிடிக்காததால் சாப்பிடாமலேயே போய்ப் படுத்துக் கொண்டாள்...
ஆனாலும் அவனில்லாத தனிமையில் தூக்கமும் அவளுக்குத் தொலைவாகியே போனது...அதனால் சோபாவில் அமர்ந்து புத்தகமொன்றை வாசித்தவாறே அவனது வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினாள்...
நேரம் பன்னிரெண்டை நெருங்கியும் அரவிந்தன் வந்திருக்கவில்லை...அமர்ந்திருந்த நிலையிலேயே புத்தகத்தோடு உறங்கிப் போனவள்,
அரவிந்தன் வந்து அவள் தூங்கியிருந்த அழகை ரசித்ததையோ,அவளை பூவைப் போல் இரு கைகளிலும் தாங்கி கட்டிலில் படுக்க வைத்ததையோ அறிந்திருக்கவில்லை...
மறுநாள் காலை அவள் எழும்பும் போதே,குளித்துத் தயாராகி அவளுக்கான தேநீரோடு தரிசனம் கொடுத்தான் அரவிந்தன்...
"குட்மோர்னிங் மிஸஸ் அரவிந்தன்..."என்றவாறே பேந்தப் பேந்தப் முழித்துக் கொண்டிருந்தவளின் முன்னால் தேநீரை நீட்டியவன்,
"முழிச்சது போதும் மேடம்...சீக்கிரம் பல்லைத் துளக்கிட்டு வந்து என் டீ எப்பிடி இருக்கின்னு சொல்லுங்க...??..."
அப்போதும் அவளுக்கு என்ன நடக்கிறதென்று புரியவில்லைதான்...ஏதோ கனவில் மிதப்பவள் போல்,எழுந்து சென்று குளித்துத் தயாராகி வந்தவள்,அவன் கொடுத்த தேநீரைச் சுவைக்கத் தொடங்கினாள்...
அவனிடம் கேட்க வேண்டிய சில கேள்விகள் அவளுள் சுழன்று கொண்டிருந்ததில் தேநீரை ஒரே மடக்கில் குடித்து முடித்து விட்டு எழுந்தவள்,
"கிளம்பலாமா அரவிந்தன்....??..."
அவளிடமிருந்து தேநீருக்கான பாராட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தவனிற்கு,அவள் எதுவுமே சொல்லாமல் கிளம்பலாமென்றது குழப்பத்தை ஏற்படுத்த அவளை உற்று நோக்கினான்...
அவள் வேறு ஏதோ சிந்தனையில் இருக்கிறாள் என்பதை அவளது முகமே காட்டிக் கொடுக்க,எதுவாயினும் அங்கு சென்றே பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன்,
"ம்ம்...கிளம்பலாம் துளசி..."
அந்த இரு உள்ளங்களும் இருவேறுபட்ட மனநிலையோடு துளசியின் வீட்டை நோக்கி பயணித்தனர்...
தொடரும்...