நட்பு

முகம் பார்த்து முள்ளாய் மேலோட்டமாய் வந்த உறவுகளுக்கிடையில்
என் அகம் பார்த்து அடக்கமாய் ஆழம் சென்ற என் நட்பூ
இலக்கணப் பிழை இருந்தாலும் கருத்துப் பிறழ்வு இருந்தாலும்
எழுத்துப் பிழை இன்றி வாசிக்கும்-என் உயிர்மெய் நட்பு.
என்னை எனக்கு உணர்த்தி எனக்குள் ஒரு ஜீவ நதி
என்றென்றும் மூன்றெழுத்து மூச்சு-என் கற்பு நட்பு
திசைகள் மாறி பிறைபோல் தேய்ந்து வளர்ந்தாலும்
வேரில் பழுதில்லா பழுத்த பலா- என் கருப்பொருள் நட்பு
விசாரத்தினால் உடைந்த என் நம்பிக்கைகளை அக்கறையாய்
மீண்டும் நடவாய் நட்டு வைக்கும்-என் நங்கூர நட்பு.
தடுமாறும் தருணங்களில் நேர் வழிநடத்தி தயங்காமல்
எனக்குள்ஒலிக்கும் இன்னொரு குரல்-என் பரிவு நட்பு.
சோதனைகள் வந்திட்ட போது ஆயிரம் கைகள் அணைக்க இருந்தாலும்
ஓரமாய் வருடிடும் அந்த ஒரு விரல்- என் ஆன்மபல நட்பு .
நகரும் பொழுதெல்லாம் நகமும் சதையுமாய் சுகமாய் எனைத் தொடர்ந்து
உண்மையாய் என் உயிர் உள்ளவரை வாழும் -என் உன்னத நட்பு.