கொடை வள்ளல் கர்ணன்

"அள்ளி கொடுப்பதில் கர்ண மகா பிரபு" என்ற சொலவடை நம் நாட்டில் நிலவுகிறது. அந்த அளவிற்கு கொடை வள்ளலாக திகழ்ந்தவன் கர்ணன். மாத, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கு பேரின் அருளாசி இல்லாமலேயே இந்த புவியில் புகழ் பெற முடிந்த ஒருவன் கர்ணன் மட்டுமே. வாழ்க்கையில் அவன் பிறந்தது முதலே சவால்களை சந்தித்து முன்னேற்றப் பாதையில் பயணித்தான். இறந்த பிறகும் இன்று வரையில் எல்லோர் மனத்திலும் நீங்க இடம் பிடித்து புகழுடம்பு எய்தியிருக்கிறான். அவன் போற்றுதலுக்குரியவன். எனினும் கர்ணனை கொடை வள்ளல் என்ற சிறப்பைக்கடந்து பிற சிறப்புக்குரியவனாக காண முடியவில்லை. நண்பனுக்காக செஞ்சோற்றுக்கடன் தீர்த்து உயிரை விட்டான் என்பன போன்ற புகழுரைகள் அவனுக்கு பொருத்தமற்றவை என்றே எண்ணத்தோன்றுகிறது. அவற்றிற்கான காரணங்கள் இல்லாமலில்லை.

கர்ணனை தனக்கு இணையான அரசனாக்கினான், நண்பன் துரியோதனன். அவன் அர்ஜுனனை வீழ்த்தக்கூடியவன் இவன்தான், இவன் நம்மிடமிருப்பது நன்மை பயக்கும் என்ற சுய நோக்கு சிந்தனையில் கர்ணனுக்கு உயர்வு அளித்தாலும் அவன் கர்ணனை உற்ற நண்பனாகவே எண்ணி வணங்கினான், பெருமை கொண்டான். ஆனால் அதற்கு கைமாறாக கர்ணன் சிறந்த நண்பனாக விளங்கவில்லை. ஒரு நண்பனுக்குரிய இலக்கனங்கள் எதுவுமின்றியே கர்ணன் துரியோதனனிடம் பழகினான். அவற்றை உணர்த்தும் நிகழ்ச்சிகள் சிலவற்றை காணலாம்:

1. துரியோதனன் தீய சகவாசங்களுடன் உலா வந்தபோது கர்ணன் அதை கண்டிக்கவில்லை. சகுனியின் துர்போதனையை கேட்டு தனது நண்பன் அழிவுப்பாதைக்கு செல்கிறான் என்று தெரிந்தும் அதை தடுக்க அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக தானும் அத்தகு கூட்டத்தினருடன் சேர்ந்து மேலும் தீய போதனைகளை செய்யவே முன்வந்தான். பாண்டவர் நிலத்தை சூதாடி பெறவேண்டும் என்று மாத்திரமே சகுனி கூறினான். ஆனால் திரௌபதியின் சேலையை களைந்து மானபங்க படுத்தலாம் என்று யோசனை வழங்கியவனே இந்த கர்ணன்தான்.

2. குந்திதேவிதான் தன்னுடைய தாய் என்பதை அறிந்து மகிழ்ந்த கர்ணன் அப்பொழுதே தன்னுடைய பாசத்தை பாண்டவர் மீது பொழிய ஆசைப்பட்டான். குந்திக்கு இரண்டு வரம் தர முன்வந்ததே தாம் கொடை வள்ளல் என்ற பெருமையை இழக்கக்கூடாது என்பதாலும் தாய் கேட்கும் வரங்களால் பாண்டவர்களுக்கு நன்மை விளையும் என்பதாலும் மட்டுமே. இதன் விளைவு, தான் சார்ந்திருக்கும் துரியோதனன் தரப்புக்கு இழப்பு ஏற்படும் என்பதையும் அவன் நன்கு அறிந்திருந்தான்.

3.குந்தி கேட்ட வரங்கள் தன்னுடைய போர் தந்திர முறைகளில் தலையிடுகிறது என்று தெரிந்தே அவன் அவ்வரங்களை அளிக்கிறான். துரியோதனன் ஜெயித்தாலென்ன? தோற்றாலென்ன? நம் தம்பிமார் தோற்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறான்.

4.குந்தி தேவிக்கு வரம் தந்தவன் பிரதிபலனாக கேட்ட வரங்கள் துரியோதனனுக்கு வீழ்ச்சியையும், பாண்டவருக்கு வெற்றியையும் நிச்சயம் செய்திருந்தது. தான் பாண்டவருக்கு அண்ணன் என்பது அவர்களுக்கு தெரியக்கூடாது என்ற வரத்தைக்கேட்டதன் மூலமாக அவன் போரை நிச்சயித்து விட்டான். பாண்டவர்களின் அண்ணன்தான் கர்ணன் என்பது பாண்டவர்களுக்கு தெரியுமானால் அவர்கள் போர்புரியாமல் காட்டிற்கு போய்விடும் நல்மனமுடையவர்கள் என்பது கர்ணனுக்கு தெரியும். அவ்வாறு அவர்கள் போரிலிருந்து விலகாமல் போர்புரிந்தால் துரியோதனனின் வீழ்ச்சி ஏற்படும் என்பது கர்ணன் அறிந்திருக்க மாட்டானா? மற்றொரு வரத்தின் மூலம் தான் இதுகாறும் எல்லோரும் நினைத்திருந்தது போல தேரோட்டியின் மகன் அல்ல, குந்தியின் புதல்வன்தான் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்ற சுயநல நோக்கு மட்டுமே தெரிகிறது. நண்பனோ அவன் வெற்றியின் நலனோ தனக்கொரு பொருட்டல்ல என்பதை உணர்த்தியிருக்கிறான் கர்ணன்.

5. நண்பன் நலம்தான் முக்கியம் என்று கருதும் எந்த நண்பனும் நண்பனுக்காக எத்தகைய வேலையையும் செய்ய தயாராயிருப்பான். இந்த வேலை எனக்கு கௌரவ குறைச்சல் என்று நினைப்பவன் சிறந்த நண்பனாக மாட்டான். அப்படித்தான் கர்ணன் செயல்பட்டான். போர்ப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட பீஷ்மர் எல்லோருக்கும் உரிய பணியை போர் துவங்குவதற்கு முன்னதாக ஒதுக்குகிறார். கர்ணனை கூட்டத்தோடு கூட்டமாக நின்று போர்புரியும் பிரிவில் ஒதுக்குகிறார். ஆனால் கர்ணன் அந்தப்பணியை ஏற்காமல் அது தனக்கு இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறது என்று மறுக்கிறான். அது மட்டுமில்லாமல் அவ்வாறு இழுக்கை ஏற்படுத்திய பீஷ்மர் போரில் வீழும் வரை தான் அவர் தலைமையின் கீழ் இயங்க மறுத்து போர் புறக்கணிப்பு செய்கிறான். நண்பன் துரியோதனன் எவ்வளவோ மன்றாடியும் அவன் போரில் பங்கேற்காமல் ஒதுங்கிவிடுகிறான். பத்தாம் நாள் போரில் பீஷ்மர் வீழ்ந்த பின்னரே பதினோராம் நாள் போரில் பங்கேற்றான். தளபதி என்ற முறையில் பீஷ்மர் சொன்ன உத்தரவை மறுத்தது முதல் குற்றம். தனக்கு கேவலமான பணியை அவர் ஒதுக்கியிருந்தாலும் தனது உயிரினும் மேலான நண்பனுக்காக அதை மனமுவந்து ஏற்றிருக்க வேண்டும். இப்படி எதுவும் செய்யாமல் நண்பன் போராடிக்கொண்டிருந்த பத்து நாட்களும் கை கட்டி வேடிக்கை பார்த்தவன் எப்படி சிறந்த நண்பனாயிருக்க முடியும்? அவன் சென்சொற்று கடன் தீர்க்க வில்லை, பாண்டவர்களுக்கு பரிவாக நண்பனை கடன் தீர்த்துவிட்டான் என்பது சரியாக இருக்கும்.

6. இப்படி மனத்தை ஓரிடத்தில் கொடுத்துவிட்டு, வெறும் உடலோடு நண்பனுக்காக போரிடுவது போல் பாசாங்கு செய்திருந்தான் கர்ணன். அவனை நேரிய முறையில் கொள்ளாமல் மோசடி செய்துதான் கொன்றிருக்கிறார்கள் என்ற புகழுரைக்கூட கர்ணன் பெற்றுவிட்டான். இவன் எல்லோரையும் நம்பி ஏமார்ந்தான் என்பது தவறு, இவனை நம்பித்தான் துரியோதனன் மோசம் போனான் என்பதுதான் சரி. கர்ணனை அர்ஜுனன் சூது செய்து கொன்றதாக கீழ்கண்ட அறுவரை கூறுவார்கள். பரசுராமர், ஹஸ்தினாபுரத்தை சார்ந்த ஒரு பிராமணர், இந்திரன், சல்லியன், குந்திதேவி மற்றும் கண்ண பரமாத்மா ஆகியோரே அவர்கள். கடைசியாகத்தான் அர்ஜுனன் அம்பெய்து வெறும் உடலை வீழ்த்தினான் என்பார்கள். ஆனால் இதில் ஒருசிறிதும் உண்மையில்லை. ஒருவர் பின் ஒருவராக செய்த செயல்களையும், அதில் கர்ணன் மட்டுமே பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதையும் விரிவாக பார்க்கலாம்.

1. பரசுராமர்: பிராமணர்களைத் தவிர வேறு யாருக்கும் கல்வியறிவு புகட்டுவதில்லை என்று விரதம் மேற்கொண்டிருப்பவர் பரசுராமர். அவரிடம் தமது குலத்தைப்பற்றி மறைத்து தான் பிராமணன்தான் என்று பொய் கூறி கல்வியறிவு பெற முயன்றான் கர்ணன். உண்மை வெளிப்பட்டபின் பரசுராமர், "நீ கற்ற கல்வி உரிய நேரத்தில் பயனளிக்காமல் போகக்கடவது" என்று சபிக்கிறார். ஆகவேதான் அர்ஜுனனை எதிர்த்து போராடும் நேரத்தில் பல மந்திரங்கள் மறந்து போய் தடுமாறும் நிலை கர்ணனுக்கு ஏற்பட்டது. கற்ற கல்வி உரிய நேரத்தில் பயனளிக்காவிடில் அக்கல்வியால் என்ன பயன்? இது கர்ணனாக தேடிக்கொண்ட விதி. பொய் கூறியதன் பலனை அனுபவித்தான். இதில் பரசுராமர் கொன்றார் என்று கூறுவது ஒருசிறிதும் பொருத்தமற்றது.

2. ஹஸ்தினாபுர பிராமணர்: ஒரு சமயம் ஹஸ்தினாபுரத்தில் வெற்றிக்களிப்பில் துரியோதனனும் கர்ணனும் தேரில் உலா வந்துக்கொண்டிருந்தனர். கர்ணன் தேரோட்டிக்கொண்டிருந்தான். அது சமயம் ஒரு பிராமணருக்கு ஊறு விளைவித்து விடுகிறான். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேளாமல், அவருக்கு ஆறுதல் கூறாமல் சென்றதோடு அல்லாமல் துரியோதனன் அவரை அவமானப்படுத்திய போது அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குற்றத்திற்காக அந்த பிராமணர், "நான் அவதிப்படுவது போல உன் தேறும் தக்க சமயத்தில் சகதியில் சிக்கி அவதி படுவாய்" என்று சாபமிடுகிறார். அதனால்தான் கர்ணனின் தேர் அர்ஜுனனுடனான போரில் சகதியில் சிக்குகிறது. இதனால் அந்த பிராமணர் கொன்றார் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனம். அவன் செய்த அபச்சாரத்திர்கான பலனைத்தான் அறுவடை செய்தான்.

3. இந்திரன்: கர்ணனுடனே பிறந்து அவனுக்கு பாதுகாப்பாக திகழ்ந்தவை அவனது கவச-குண்டலங்கள். அவை அவனுடன் இருக்கும் வரையில் யாராலும் அவனை வெல்ல முடியாது. இதை இந்திரன் அந்தண வேடத்தில் வந்து யாசகம் கேட்கிறான். கர்ணன் தானம் கொடுத்து பழக்கப்பட்டவன் என்பதால் அதையும் கொடுக்க முன்வருகிறான். இது தமக்கு அரணாக இருப்பதால் தமது நண்பனையும் காக்க முடியும் என்பதை அறிந்த கர்ணன், நண்பன் தமக்கு முக்கியமல்ல தமது கொடைவண்மைத்தான் முக்கியம் என்று முடிவு செய்கிறான். அந்த நேரத்தில், தந்தையான சூரியன் வந்திருப்பது இந்திரன்தான் என்று உண்மையை கூறி கவச-குடலங்களை தானம் தரவேண்டாம் என்கிறார். தந்தை சொல்லை கேளாமல், இந்திரனுக்கே தாம் தானம் செய்கிறோம் என்ற மமதை தலைக்கேறி தானம் செய்து விடுகிறான். ஆதலினால்தான் அர்ஜுனனுடன் போரிடும்பொழுது பாதுகாப்பில்லாமல் நிற்கிறான். இது தந்தை சொல் கேளாத குற்றத்திற்காக அவனே தேடிக்கொண்ட வினை. இதில் இந்திரனை குறை கூறுவது தவறு.

4. சல்லியன்: மத்தர தேசத்து மாமன்னனான சல்லியனை தனக்கு தேரோட்டியாக நியமிக்குமாறு துரியோதனனை கர்ணன் கோரி பெறுகிறான். தேரோட்டி மகனுக்கு தேரோட்டுவதில் தமக்கு இழுக்கு என்று முதலில் மறுத்தாலும் துரியோதனனின் வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக்கொண்டு தேரோட்டுகிறான் சல்லியன். தேரோட்டுவது ஒரு நாட்டின் அரசர் என்ற மரியாதையை சிறிதும் தராமல் அவரை சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் அவமரியாதை செய்கிறான். அவன் போர்த்திறம் பற்றி கூறும் யோசனைகளைஎல்லாம் புறக்கணிக்கிறான். அதில் ஒன்றுதான் நாகக்கனையை அர்ஜுனனின் மார்பை நோக்கி எய்யுமாறு அவன் கூறியது. அதை ஒதுக்கிவிட்டு கழுத்துக்கு குறி வைத்தான் கர்ணன். அவன் ஒரு தேரோட்டித்தான் என்றும், அந்த வேலையே மட்டும் பார்க்கவேண்டும் என்றும், தன்னைப்போன்ற மாவீரனுக்கு அறிவுரைக்கூர முயற்சிக்கக்கூடாது என்றும் கூறி கேவலப்படுத்துகிறான்.விளைவு! கண்ணனின் தந்திரத்தினால் அர்ஜுனன் உயிர் பிழைக்கிறான். இதற்கிடையில்தான் தேரின் சக்கரம் சகதியில் சிக்குகிறது. அதை மீட்கும்படி சல்லியனுக்கு கட்டளையிடுகிறான். இப்போது சல்லியன், கர்ணன் ஒரு தேரோட்டிமகன், அவனுக்கு பணிந்து செல்ல தன்னால் முடியாது என்றுகூறி வெளியேறுகிறான். இங்கு கர்ணனின் பணிவின்மையும், சல்லியனைப் போன்ற அரசர்களை மதிக்கத்தவறிய பாங்கும்தான் இக்கட்டில் தள்ளியதே தவிர, சல்லியன் கர்ணன் உயிரிழக்க காரணமானான் என்று கூறுவது பேதைமை.

5. குந்திதேவி: பாண்டவர்களின் தாய்தான் தனக்கும்தாய் என்று அறிந்து பெருமைப்படும் கர்ணன் இந்த உலகையே மறந்து விடுகிறான். தாய் யார் என்பது அறிந்த மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு கேட்கும் வரங்களின் பின்விளைவுகளைப் பற்றி சிறிது கவலைப்படாமல் கொடுத்து விடுகிறான். பிரதியாக கேட்ட வரங்களும் தன் நண்பனுக்கோ அவன் சேனைக்கோ நன்மை பயக்காதவையாக கேட்டான். இதனால் அவன் தோல்வியை சந்திக்க நேர்ந்ததே தவிர அவன் தோல்வியில் குந்திதேவிக்கு சிறிதும் பங்கில்லை.

6. கிருஷ்ணர்: பாரதப்போரின் சூத்திரதாரியான பெருமானை கர்ணனுடைய சாவிற்கு காரணமாக்குவது பேதைமையிலும் பேதைமை. கண்ணன் கர்ணனுடைய தான-தரும புண்ணியங்களை யாசகம் பெற்றிருக்காவிட்டால் கர்ணன் இறந்திருக்க மாட்டான். ஆனால் எழுந்து சண்டையும் போட்டிருக்கமாட்டான். கோமாவில் படுத்திருக்கும் நோயாளியைப்போல தனக்கும் பிறருக்கும் தொல்லையாகவே இருந்திருப்பான். அந்த போருக்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டியது நல்லோர்களின் செயலாகும். இதைத்தான் பெருமாள் செய்தார். போருக்கு முடிவை ஏற்படுத்தியது மட்டுமின்றி கர்ணன் செய்த தானதருமங்களுக்காக திவ்விய தரிசனத்தைத்தந்து வைகுந்தப்பதவியையும் அளித்த வள்ளன்மை வேறு யாருக்கு வரும். இதைப்போய் கர்ணனின் உயிர் பறித்த செயல் என்பது விவேகமல்ல.

7. அர்ஜுனன்: அர்ஜுனன் நேர்மையற்ற போர் முறையில்தான் கர்ணனைக் கொன்றான். கர்ணன் சகதியில் சிக்கிக்கிடக்கும் தேரை மீட்டுக்கொண்டிருந்த பொழுது நிராயுதபாணியாக இருந்தான். (நிராயுதபாணி என்றால் கைகளில் ஏதும் ஆயுதமில்லாத நிலை). அப்பொழுது அம்பெய்தி அர்ஜுனன் கொன்றுவிட்டான் என்ற குற்றச்சாட்டு அர்ஜுனன் மீது சுமத்தப்படுகிறது. ஆனால் இந்தக்குற்றச்சாட்டில் சிறிதும் நியாயமில்லை. முதற்கண் கர்ணன் நிராயுதபாணியாக நிற்கவில்லை. தேர் சக்கரத்துடன் நிற்கிறான். கைகளில் ஏதோ வைத்திருப்பவன் அதை நம் மீது எய்யமாட்டான் என்பது என்ன நிச்சயம்? அவன் எய்யும்வரைத்தான் பொறுத்திருக்க வேண்டுமா? சரி! தேர்ச்சக்கரம் ஆயுதம் அல்ல, அவன் சரிந்த தேரை மீட்கத்தான் முயற்சி செய்தான் என்று சொன்னாலும் அர்ஜுனன் செய்ததில் தவறேதுமில்லை. ஒருவன் போர் புரியும்பொழுது அடுத்தவனின் குதிரை, தேரோட்டி, தேர், கொடி, வில், கதை என்று அனைத்தையும் வீழ்த்துவதுதான் போர்த்தந்திரம். இது அனைவராலும் ஏற்கப்பட்ட போர்முறை. அர்ஜுனன் கர்ணனின் தேரோட்டியை வீழ்த்த அவசியமில்லாமல் தேரோட்டி ஓடிவிட்டான். அவனுடைய தேரை நொறுக்கவும் அவசியமில்லாமல் போய் அதுவும் சகதியில் சிக்கிக்கொண்டது. இப்பொழுது அர்ஜுனன் கர்ணன் மீது பாணம் எய்வதுதானே முறையாக இருக்கும். இதில் எங்கே வந்தது தவறு? மேலும் கர்ணன் படைகலங்களை சரிசெய்துக் கொண்டு போருக்கு வரும் முன் அவனை வீழ்த்துவதுதான் ஒரு புத்திசாலி போர் வீரனுக்கு அழகே தவிர, அவன் தன்னிலையை மேம்படுத்தும் வரை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தால் அவனை விட முட்டாள் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. பெருமானிடமே உபதேசம் பெற்ற அர்ஜுனன் முட்டாட்கள் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத அளவிற்கு முட்டாள்தனம் செய்வான் என்று எதிர்பார்த்தது கர்ணன் செய்த முட்டாள்தனம்.

இப்படியாக தானே தன்னைச்சுற்றி குழிவெட்டிக்கொண்டு, அதில் தன்னைத்தானே தள்ளிக்கொண்டு, மண்ணையும் போட்டுக்கொண்டுவிட்ட கர்ணன் தன்னுடைய வீழ்ச்சிக்கு பிறரை சுட்டுவது அறிவுடையோர் செய்யும் செயல் அல்ல. அவன் கொடை வள்ளல்தான்! அதற்கு பெருமானும் தரும தேவதையுமே சாட்சியாக நின்றார்கள். ஆனால் அவனுடைய கொடையாற்றலின் பெருமை அவனுடைய மற்றை பிற கீழ்மைச்செயல்களை நம்மிடமிருந்து மறைத்து நம் கண்களைக் கட்டிப்போடுவதால்தான் நாம் அவனை நல்லவன் என்று முடிவுகட்டி பிறரிடம் குற்றத்தைக்கான புறப்படுகிறோம். தவறு நம்மிடமும் உள்ளது.

எழுதியவர் : (7-Dec-17, 2:01 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 2374

மேலே