அப்புசாமி, சீதாப்பாட்டிக்கு சொல்லிடாதீங்க’ ------------------பாக்கியம் ராமசாமி என்கிற ஜராசுந்தரேசன்

'நகைச்சுவை என்பது எப்போதுமே அனாதையாகாது’ என்றொரு வாசகத்தைச் சொன்ன, வாசகத்தின் மூலம் நகைச்சுவையின் அடர்த்தியையும் உண்மையையும் சொன்ன பாக்கியம் ராமசாமி இப்போது நம்மிடையே இல்லை.

ஜ.ரா.சு. என்றால் சிலருக்குத் தெரியும். ஜே.ஆர்.எஸ். என்றால் ஒருசிலருக்கு மட்டுமே தெரியும். பாக்கியம் ராமசாமி என்றால் எல்லோரும் அறிவார்கள். சிரிக்கச் சிரிக்க, நம் வயிறு வலிக்க வலிக்க எழுதிய பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ரா.சுந்தரேசன், உடல்நலக் குறைவால் மறைந்தார்.




எனக்கு, பன்னெண்டு பதிமூணு வயது இருக்கும் போதே, குமுதம், விகடன் வாங்கும் வழக்கம் வந்துவிட்டது. அப்போதே எழுதியவர் பெயர் பார்க்கும் பழக்கம் உண்டு. அவர் எழுத்து பிடித்துப் போனது. சிரிக்க வைத்தது. எளிமையான நடை கட்டிப்போட்டது. அந்த வாரம் புத்தகம் வாங்கியதும் இவருடைய எழுத்தையே தேடித்தேடிப் படித்தேன். ஒருகட்டத்தில்தான் தெரிந்தது... என்னைப்போலவே ஏராளமான வாசகர்கள், அவர் எழுத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று!

ஜ.ரா.சு. அதாவது ஜலகண்டபுரம் ராமசாமி சுந்தரேசன். சேலம் ஜலகண்டபுரம்தான் சொந்த ஊர். இவர் பெயர் சுந்தரேசன். பத்திரிகைக்காரர்கள் எல்லோரும் ஜ.ரா.சு. என்றே அழைத்தார்கள். குமுதத்தில் பல வருடங்களாகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டங்களில், இவர் மீதும் இவரின் எழுத்துகள் மீதும் மாறாக் காதல் கொண்ட, குமுதம் எஸ்.ஏ.பி... இவரை ஸ்டைலாக, அன்புடன் ‘ஜே.ஆர்.எஸ்.’ என்று பிரியத்தோடு அழைப்பார். வாசகர்களுக்கு பாக்கியம் ராமசாமி என்றால் பளிச்சென்று தெரிந்துவிடும்.

ஜேம்ஸ்பாண்ட்007, ஹாரிபாட்டர் போல் ஒரு கேரக்டர் உருவாக்குவது என்பது தமிழுக்குப் புதிது. ஏதேனும் புதிதாக, புதுமையாக, அதேசமயம் எளிமையாக, ரசனையும் ரகளையுமாக பத்திரிகையைக் கொண்டு வரவேண்டும் எனும் தாகம் ஜ.ரா.சு.வுக்கு உண்டு. என்ன செய்வது என்று யோசித்ததன் விளைவுதான்... அப்புசாமியும் சீதாப்பாட்டியும்! கதையை எழுதிவிட்டு, ஓவியர் ஜெயராஜை அழைத்து, கதையைக் கொடுத்து ‘ஒரு கேரக்டரை உருவாக்கப் போறோம். ஆயுசு முழுக்க இந்தக் கேரக்டர் பேசப்படணும்’ என்று சொல்ல, அப்புசாமிக்கும் சீதாப்பாட்டிக்கும் உருவம் கொடுத்தார் ஓவியர் ஜெயராஜ். தன் எழுத்தால் உயிர் கொடுத்து உலவவிட்டார் பாக்கியம் ராமசாமி.

எழுத்தால் ஒருவரைக் கட்டிப்போடுவது என்பது மிகப்பெரிய கலை. அதிலும் நகைச்சுவை எழுத்தின் மூலம் அதைத் திறம்படச் செய்த எழுத்து, அவருடையது. 'ரவா தோசை சாப்பிடுவது எப்படி?’ என்று ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அந்தக் கட்டுரையை பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது படித்தேன். நான் சிரித்த சிரிப்பில், எல்லோரும் என்னைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது செல்போன், ஹியரிங்போனெல்லாம் இல்லாத காலம்.

‘பீரோவுக்குப் பின்னால்’ என்றொரு கட்டுரை. எல்லார் வீடுகளிலும் பீரோவுக்குப் பின்னே கொஞ்சமான இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் உள்ள பொருட்கள் குறித்து எழுதி, இடைவேளையே இல்லாமல் நம்மை கண்ணீர் வர... சிரிக்கவைத்திருப்பார்.

‘பத்திரிகைக்கும் சரி... நாவலுக்கும் சரி... லைட் ரீடிங் ரொம்பவே முக்கியம். லைட் ரீடிங் இருந்தா, படிச்சவன் பாமரன்னு எல்லாருக்குமே நம்ம எழுத்து போய்ச்சேர்ந்திரும்’ என்று சொன்னதுடன், அந்த லைட்ரீடிங் எழுத்தின் நாலா திசைகளிலும் கம்புசுழற்றின இவரின் எழுத்துகள்!

இந்த வாரம் என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஆபீஸ்பாயை அழைத்தார். அஞ்சாறு பூவன் பழம் வாங்கிவரச் சொன்னார். ஒரு பழத்தைப் பாதியாக்கினார். தோல் உரித்து ஒன்றை வைத்தார். கொஞ்சமாய்க் கிள்ளிவிட்டு ஒரு பழத்தை நிறுத்தினார். இப்படியாக செய்துவிட்டு, அந்தப் பழங்களுக்கு கண், வாய், மூக்கெல்லாம் வரையச் சொன்னார். அதைக் கொண்டு, ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொருவிதமாக கதைகள் எழுதி வெளியிட்டார். இப்படி ரகளைரவுசு விடும் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் எப்போதுமே இருந்தார் பாக்கியம் ராமசாமி.

குமுதத்தில் அரசு பதில்கள் வருகிறது அல்லவா. அந்தக் காலத்தில், அரசு பதிலுக்கு விளக்கம் ஒன்று சொல்லுவார்கள். ’அ’ என்றால் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, 'ர’ என்றால் ரா.கி.ரங்கராஜன், 'சு’ என்றால் ஜ.ரா.சுந்தரேசன் என்பார்கள். பிரமாண்டமான மகாபாரதக் கதையை இரண்டு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக்கொள்வது போல் எழுதிய ‘பாமர கீதை’ இவரின் உச்சபட்ச எழுத்துக்கும் நகைச்சுவைக்கும் ஆன்மிகச் சிந்தனைக்குமான சோறுபதம்!

''பத்திரிகையில் மிகப்பெரிய ஜாம்பவான். எந்நேரமும் நகைச்சுவையுடன் ஒருவரால் இருக்கமுடியுமா. பேசமுடியுமா. ஆனால் ஜ.ரா.சு. சார் அப்படித்தான் இருந்தார். எத்தனை துக்கத்துடன் இவருடன் போய்ப் பேசினாலும் பேசிவிட்டுத் திரும்பும் போது, மொத்த துக்கமும் காணாமல் போயிருக்கும்’’ என்கிறார் ராணிமைந்தன்.

இப்படித்தான் ஒருமுறை... ஜ.ரா.சு.வை சந்திக்க ஒருவர் வந்திருந்தார். கிட்டத்தட்ட வந்த மனிதர், ஒன்றரை மணி நேரம் தன்னைப் பற்றியே பேசினார். ஜ.ரா.சு.வைப் பேசவே விடவில்லை. ஒன்றரை மணி நேரம் கழித்து, அந்த மனிதர்... ‘’உங்ககிட்ட பேசினதுல நேரம் போனதே தெரியல சார். என் தலைவலி எங்கே போச்சுன்னே தெரியல’’ என்றார். சட்டென்று ஜ.ரா.சு. சொன்னார்... ‘எங்கேயும் போகலை. எங்கிட்ட வந்துருச்சு’ என்றார், சிரிக்காமலே!

'அக்கறை’ எனும் அமைப்பை நடத்தி வந்தார். மாதத்தில் 3வது சனிக்கிழமை கூடுவார்கள். அனுபவம் பகிர்வார்கள். வரும் பிப்ரவரியில் 200வது கூட்டம். அதற்குள் இப்படியாகிவிட்டதே என்று வருந்துகிறார் ராணிமைந்தன்.

ஜ.ரா.சு.வுக்கு மூன்று மகன்கள். மூன்றாவது மகன் யோகேஷிடம் பேசினேன். 'அப்பா மாதிரியே நடந்துக்கமாட்டார். ஃப்ரெண்ட்தான் அவர் எங்களுக்கு. எதுவேணாப் பேசலாம். யாரை வேணா கலாய்க்கலாம். ஆனா வார்த்தைக்கு வார்த்தை காமெடி பண்றதுல, அப்பாவை அடிச்சிக்கவே முடியாது.

அவ்வளவு ஏன்... அப்பாவுக்கு டயாலிசிஸ் பண்ணனும். ஆஸ்பத்திரில இருக்கோம். டயாலிசிஸ் நடந்துக்கிட்டிருக்கு. அவர் கூட, நானும் அவரோட உதவியாளரும் இருக்கோம். நர்ஸ் வந்து திட்டுறாங்க. ‘கொஞ்சம் வெளியே இருங்க’ன்னு சொன்னாங்க. சரின்னு நகர்ந்தோம். உடனே அப்பா கூப்பிட்டு, ‘போகாதீங்கடா... இதோ... கட்டிலுக்குக் கீழே ஒளிஞ்சிக்கோங்க. நர்ஸ் கண்டுபிடிக்கறாளானு பாத்துடலாம்’ என்றார். அங்கிருந்த எல்லோருமே சிரித்துவிட்டோம்.




கொஞ்ச காலமாத்தான் முடியலை. உடம்பு படுத்தி எடுத்துருச்சு. வீட்ல, எதுனா அனத்திண்டே இருப்பார். சத்தம் போட்டுண்டே இருந்தார். ‘ஏம்பா... இப்படி சத்தம் போடுறீங்க. கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருங்கோ’ன்னு சொன்னோம். உடனே அவர்... 'சரி... நான் சத்தம் போடலை. நீங்க எல்லாரும் சேர்ந்து சத்தம் போடுங்கோ. நான் சின்னதா சத்தம்போட்டுக்கறேன்’னு சொன்னார். இத்தனை உடம்பு வேதனைலயும் அவரை இன்னும் இன்னுமா வாழ வைச்சது... அவரோட நகைச்சுவை உணர்வுதான்’’ என்று நெகிழ்ந்து குரல் உடையச் சொல்கிறார் அவரின் மகன் யோகேஷ்.

நகைச்சுவை எழுத்தாளர்களுக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் வெளிநாடு போல் இங்கேயும் மரியாதைக் கிடைத்திருந்தால், அப்புசாமியும் சீதாப்பாட்டியும் மிகப்பெரிய ஆல்ரவுண்டர் ஆகியிருப்பார்கள். பாக்கியம் ராமசாமிக்கு உரிய அங்கீகாரமும் பெயரும் புகழும் பணமும் கெளரவமும் கிடைத்திருக்கும்.

‘நல்ல நகைச்சுவை, எப்பவும் அனாதையாகாது. ஏன்னா... நல்ல நகைச்சுவைன்னா அது சிரிக்க வைச்சிரும். அந்தச் சிரிப்பு, அடுத்தவருக்கு அடுத்தவருக்குன்னு தொத்திக்கும். அப்புறம் அதுவொரு பந்தமாயிரும். அதான் சொல்றேன்... நல்ல நகைச்சுவை எப்பவுமே அனாதையாகாது’ என்றார் பாக்கியம் ராமசாமி.

இன்றைக்கு ஜ.ரா.சு. இல்லை. ’அவங்களுக்குச் சொல்லணும்... இவங்களுக்கு போன் பண்ணிச் சொல்லிடுங்க. ஊர்லேருந்து வந்துட்டிருக்காங்க...’என்றெல்லாம் எல்லோருக்கும் மரணச் சேதியை தெரிவிக்கும் தருணம் இது.

பாவம்... அப்புசாமிக்கும் சீதாப்பாட்டிக்கும் இந்த மரணச் சேதி தெரியுமா என்று தெரியவில்லை. இப்போதைக்கு அவர்களிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள். எப்போதுமே சொல்ல வேண்டாம்,

ஏனென்றால்.. ‘நல்ல நகைச்சுவை எப்போதும் அனாதையாகாது!’


வி.ராம்ஜி

எழுதியவர் : (8-Dec-17, 4:53 pm)
பார்வை : 202

மேலே