அப்பாவும் நானும்

அப்பாவும் நானும் போகாத இடமில்லை
கூடிப் பேசாத கதை இல்லை
பள்ளியில் நடந்த நிகழ்வுகள்
கற்ற பாடம் பற்றிய சர்ச்சைகள்
எல்லாம் பேசி மகிழ்வோம்
மகிழ்ச்சி ஒன்றே மனதில் வைப்போம்.

பூங்காவில் பூக்களை ரசிப்போம்
கதை பல பேசி களிப்புற்றிடுவோம்
அதிகாலை நடை பயிற்சி செய்ய
கடும் பிரயத்தனம் செய்வோம்
மறுநாள் எழுந்து செல்லலாம் என
சூளுரைத்து உறங்கச் செல்வோம்.

கடற்கரை மணலில் விளையாடுவோம்
கடைத் தெருவில் பல நாள் சுற்றுவோம்
பாவாடை துணி தெரிவு செய்வோம்
அதே நிற வளையலும் பொட்டும் வாங்கிடுவோம்
அப்பா உனக்கு சோர்வு என்பதே கிடையாதா
கேட்பேன் என் அன்பு அப்பாவிடம்

பாசம் கொண்ட மகள் அருகில் இருக்கையில்
சோர்வு கூட துவண்டு ஓடும்
அப்பா சொல்வார் அதில் தான்
எத்தனை பாசம்! எத்தனை பரிவு
எனக்கும் அப்படிதான் அவர் அருகில்
கவலை என்பதே தெரிந்ததில்லை

ஒரு நாள் புல்வெளியை ரசித்திருந்த வேளையில்
அப்பா நாளை வருவாயா கேட்டேன் நான்
விடை ஒன்றும் அவர் தரவில்லை
ஆனால் விழியில் வழிந்த கண்ணீர் துளிகள்.
ஏன் என புரியும் முன் அம்மா எழுப்பினார்
எழுந்திரு பள்ளிக்கு நேரமாகி விட்டது!

கண்களில் உருண்டோடின நீர்த்துளிகள்
விரைவில் விடிந்ததை நினைத்து
கனவும் கடிதென கலைந்ததை நினைத்து
கலைந்த கனவில் மறைந்த தந்தையை நினைத்து
ஒன்பது வயதில் இழந்த என் அன்பு அப்பா
அவருடன் அதிகம் இருந்தது கனவில் மட்டுமே.


இறைவன் அழைத்தார் அவர் சென்றார்
சொல்வார் எங்கள் அன்னையும் சோர்வுடன்
நாம் அழைத்தால் வராதது ஏன்
கேட்பேன் பல முறை அன்னையிடம்
ஆயிற்று இன்றோடு வருடம் நாற்பத்தொன்று
இருப்பினும் நெஞ்சமதில் தீரா வலி.

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (9-Dec-17, 1:01 pm)
Tanglish : appavum naanum
பார்வை : 582

மேலே