தூங்கா நினைவுகள்

செங்கதிரோன் விலகி
நிலவொளிக்கு வழிவிட
செங்காந்தள் மலரெல்லாம்
இதழ் மூடி ஓய்வெடுக்க

இமைத்திரை மூடியும்
மனத்திரை விழித்திருக்க
அடிவயிற்றின் அமிலத்தால்
அலை அலையாய் எண்ணங்கள்

அணு அணுவாய் நகர்ந்தது
என் ஆறு மணித்தியானம்
ஊரெல்லாம் தூங்கியெழ
உறங்காமல் விழித்தெழுந்தேன்

மறுநாளும் துரத்தியது
என் தூங்கா வேட்டை
தூக்கத்தின் கால் இன்றி
துக்கத்தில் விழுந்தெழுந்தேன்

நாளொன்றாய் நகர்ந்து
ஒன்பது ஆகியும்
முற்றியது போராட்டம்
மூளைக்கும் மனதிற்கும்

இரு கன்னம் ஒட்டி
கருவளையத்தில் வீழ்ந்தது
கருவேல முள்முளைத்து
அகமெல்லாம் விரிந்தது

காரணம் களைய
வலைவிரித்தேன் தளத்திற்கு
ஒவ்வொவொரு காரணமும்
வெடித்தது பூகம்பமாய்

ஆழ்மனதின் அமைதியை
கலக்கியது சுனாமி
பேரலையில் சிக்கி
சிதறியதென் நிம்மதி

அம்மனின் பெயர்சொல்லி
காப்பு கட்டிய அம்மா
கோவிலெல்லாம் சுற்றிவந்து
சுற்றிப்போட்ட மனைவி

நலமாய் மாறும் என
வாழ்த்திய நட்புக்கள்
உளமார தீரும் என
உரைத்திட்ட உறவுகள்

அத்துணை திசைகளிலும்
அம்புகளாய் அறிவுரைகள்
அனைத்தும் அறிந்திருந்தும்
அடங்கா கருங்குரங்கு

என்றோ எங்கோ மூதேவி
என வைய்யக்கேட்டு
நைய நகைத்த
நினைவொன்று வாட்டியது

இன்று முத்தேவியருள்
மூத்தவளே நீயென்று
முழந்தாளிட்டு முழு நாளும்
வணங்குகின்றேன்

தூக்கம் என்பது
கடமை என்றிருந்தேன் - அன்றி
வாழ்வை வளர்க்கும்
வரமே என்றுணர்ந்தேன்.

எழுதியவர் : மன்னார் ஸ்ரீராம் (11-Dec-17, 5:23 pm)
Tanglish : thoongaa ninaivukal
பார்வை : 116

மேலே