இரு-முனை----------------தூயன் ----------சிறுகதை

வெளியே வெகுநேரமாக நாய் குரைத்துக்கொண்டேயிருப்பது அவனுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அது தன் வாழ்நாளின் மொத்த இ;ழப்பையும் வெளித்தள்ளுவதற்காக வாய் பிளந்து கத்திக்கொண்டிருக்கிறதென எண்ணினான். தான் வளர்ந்த வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, சமீபத்தில்தான் அவன் வீட்டின் காம்பவுண்டடின் கீழ் தன் இருப்பை நிறுவி விட்டிருந்தது. வளர்த்தவர்கள் அணிவித்திருந்த கழுத்து பெல்ட் மட்டும் மிச்சம். அதையும் கடித்துத் துப்பிவிட முன்னங்கால்களால் எப்படியாயினும் முயன்று தோற்றுää ஆகாயவெளியை அண்ணாந்து குரைத்துக்கொண்டிருக்கிறது. அந்த நாய்க்கும் தன்னிடமுள்ள மாத்திரைகள் ஏதேனும் கொடுத்து அவ்வெறுமையை போக்கலாமென்று அதனருகே செல்வான். ஆனால் அதுää இவன் வீசும் ரொட்டிகளின் பக்கம்கூட தன் வறண்ட மூக்கினை திருப்பியதில்லை.
கணினியில் தட்டச்சிருந்த வரிகளை வெறித்துக்கொண்டிருந்தான். கடைசி வாக்கியத்தினருகே கரிய கோடு -அவன் பிரக்ஞை நின்றுவிட்டதைக் காட்டுவதுபோல- வெகுநேரம் துடித்துக்கொண்டேயிருந்தது. எந்தத் தொடுகையுமில்லாததால் மெல்லச் சிணுங்கி அணையச் சென்றதை, மௌஸ் கட்டத்தைத் தொட்டு உயிர்ப்பூட்டினான். எதற்காகவோ கேட்டிருந்த உதவிக்குப்பியிலிருந்து வெளியே குதித்த நாய், கணினியின் கீழ் விளிம்பில் வாலை ஆட்டிக்கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டான். அவ்வுருவம்தான் இத்தனைநேரம் குரைத்துக்கொண்டிருந்ததோ என்கிற பிரமை. அக்குறிப்பினை நீக்கிவிட்டு ஜன்னலை நோக்கி எழுந்து சென்றான். இருள் கவிந்த நகரத்தில் மின்மினிகள் மொய்ப்பதுபோல் கட்டிடங்களில் மட்டும்; வெளிச்சமிருந்தன. நகரம் ஆயிரம் கண்கொண்டு அவனை நோக்குவதாக எண்ணினான். காற்றில் குளிர்ச்சியிருந்தது. பெங்கள10ர் இரவில் மட்டுமே ஈரப்பதத்திற்கு மாறிவிடுகிறது. மின்சார சாதனங்கள் தணியட்டும். எங்கோ கன்னடியள் ஒருத்தி எப்ஃஎம்மில் தன் பியானோ குரலால் அவ்விரவைக் கிறக்க மூட்டிக்கொண்டிருந்தாள். ராஜ்குமாரின் மென்குரலில் பழைய பாடல் மெல்ல எழுந்தது. மறுபடியும் டேபிள் முன் வந்தமர்ந்தான். கணினியின் மூலையில் குறுஞ்செய்திப்பேழை விம்மிக்கொண்டிப்பது கண்ணில் பட்டது. அது எப்போதும் இரவு பன்னிரெண்டு மணிக்கான பொதுவான நினைவூட்டல்தான். அப்பேழை தன்னைத் திறக்கச் சொல்லி துடிப்பது பொறுக்காமல் கர்சரை அழுத்தினான். ‘குட்மார்னிங். இந்தப் புதிய நாளுக்கு நீங்கள் ஆசிர்வதிக்கப் பட்டுள்ளீர்கள். இருபத்தி நான்கு மணி நேரங்களை மட்டுமே இந்நாள் கொண்டிருக்கிறது. இது இனிய நாளாகட்டும்’ என்று ஆங்கிலத்தில் காட்டிவிட்டு பூஜ்யத்தில் தன் காலக்கணக்கைத் தொடங்கியது. அவனுடைய பாஸ் அடிக்கடி சொல்வார். ‘உன் நேரத்தை இரயில்வே நேரமாக மாற்றிக்கொள். ஏனென்றால் ஒன்றிலிருந்து பன்னிரெண்டு முடிந்து மீண்டும் ஒன்றிருந்து தொடங்கும் நேரமுறை உன் வாழ்வின் வேகத்தையும் செயலூக்கத்தையும் தாமதப்படுத்தும்;’.
தட்டச்சு செய்துகொண்டிருந்த பத்தியை நிறுத்திவிட்டு மின்னஞ்சலுக்குள் சென்றான். திறக்கப்படாத செய்திகள் கரிய எழுத்துகளாக நிறைந்திருந்தன. அலுவலகச் செய்திதான். எல்லாமே ஒரே தலைப்பில் தொடங்கியிருப்பது போலிருக்கவே ஒன்றை மட்டும் திறந்தான். மென்பொருள் நிறுவனத்தின் முத்திரையுடன் ஆரம்பித்த அவ்வஞ்சலில் இவ்வாண்டுக்கான ஓராக்ல் குளோபல் ஸ்பெசலைஸ்ட் பார்ட்னர் விருதில் அம்மென்பொருள் நிறுவனம் துறைசார்ந்த ஐந்து பிரிவுகளில் தேர்ந்தெடுக்கபட்டிருப்பதாகவும் அதற்கு பங்களிப்புச் செய்த பொறியாளர்கள் அனைவருக்கும் சி.இ.ஓ வின் கையொப்பமுடன் வாழ்த்தும் நன்றியும் இருந்தது. அக்கடிதத்தினை வாசிக்கையில் எரிச்சலும் வெறுப்புமே எஞ்சியது. சட்டெனக் கணினியை அணைத்துவிட்டு எழுந்தவன் சுவரை நோக்கினான். நிழல் அவனைப் பார்த்தது. அவன் நடப்பதனூடே அதுவும் நடந்து ஜன்னலருகே வந்து நின்றது. அதன் மார்புகள் மெல்ல அசைந்தன. காற்றில் அந்நிழலின் கூந்தல் பறந்தது…
0
அவ்வறையில் அவனுடன் மடிக்கணினியும், படமெடுத்தாடும் குட்டி நாகம்; போன்ற டேபிள் லேம்பும் மட்டுமே இருக்கின்றன. பளீரென விரியும் வெளிச்சத்திலிருந்து தன்னை எப்போதுமே ஒளித்துக்கொள்ளும் அவனுக்கு அந்த டேபிள் லேம்பின் கோணல் வெளிச்சம் மட்டுமே பிடிக்கும். அதற்காகவே தன்னறையில் எந்தவொரு லைட்டையும் பயன்படுத்தாது அறையை இருள் அமைதியிலேயே வைத்திருந்தான். டேபிள் லேம்ப் மட்டும் தன்னொற்றைக்கண்ணை விழித்தபடி இரவு முழுதும் அமர்ந்திருக்கும். அது காட்டும் நிழல் மட்டும் சுவர்களில் விரிந்து கிடக்கும்.
தினம் மென்பொருள் நிறுவனத்திலிருந்து திரும்பும்போது துருவேறிய சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட பைத்தியங்களுடன் புணர்ந்nழுந்தவுணர்வே அவனுக்கு இருக்கும். அருவருப்பும் மூளைச் சோர்வும் தலையில் கனக்க, கைதிபோல் பாவித்த நிலையில் அம்மேஜை முன்பு வந்தமர்வான். வாசிக்கப்படாத மொழிபெயர்ப்பு நாவல்கள் அங்கு சிதறிக்கிடக்கும். சட்டென புதிய நாவலொன்றை எடுத்து புரட்டத் தொடங்கிவிடுவான். எண்ணங்களின் துவாரத்தின்வழியே அக்கதை நுழைந்து ஊடுருவும். சொற்கள் காட்சிகளாகவும் அக்காட்சிக்குள் தன்னையும் கண்டுகொண்டிருப்பான். கற்பனைகளின் ஒவ்வொரு அடுக்கிற்குள்ளும் அவனைப் போன்ற பல ‘நான்’ கள் உள்ளே விரிந்திருக்கும் ஒவ்வொரு நான்களையும் தேடியலைவான். ஆயிரம் அறைகள் கொண்ட தேவாலயத்தினுள்ளிருந்து ஜன்னல் வழியே பார்க்கும்போது தெரிகிற நூறு அறைகள்; போல அவன் எண்ணங்கள் முடிவுறாமல் இருக்கும்.
நாவல்களின் பிற்பகுதியில் தோன்றும் கதாப்பாத்திங்களும்ää புனைவுகளும் தன் வாலைத் தானே விழுங்கும் பாம்புகளாக முன்கதையினை விழுங்கி உருமாற்றிவிடுவதாக எண்ணினான். பிரதியின் கதாபாத்திரங்களுடன் முரண்பட்டு எதிர்வாதம் செய்து, தலை கனத்து பாதியிலேயே மூடிவிடுவதும் உண்டு. ஒவ்வொரு பிரதிக்குள்ளும் எழுதப்படாத லட்சம் நாவல்கள் வெளவால்களாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. எக்கதைக்கும் முடிவென்பதே இல்லையென்றும் அது, ஆசிரியனுக்கு அக்கணத்தில் தோன்றியிருக்கும்; முடிவுகள்தான் அல்லது முடிக்கமுடியாதவொன்றின் தொடக்கம்தான் என அறிந்துகொண்டான். வாசித்து முடிக்கப்படாத பலநூறு பிரதிகள் அவ்வறையில் அவிழ்ந்து சிதறிக் கிடந்தன. காலை கண்விழிக்கின்றபோது புலரியின் கூசும் ஒளித்திரையைக் கண்டுää முந்தைய இரவில் முடித்திராத பிரதிகளை நினைகூர்வான். பின் அன்றைக்கு முழுதும் மனம் அலைக்கழிப்பில் உழன்றுகொண்டேயிருக்கும்.
அவனுடன் அவனின் நிழல் மட்டுமே இருக்கிறது. டேபிள் லேம்ப் முன்னமர்ந்து புத்தகங்களை வாசிக்கின்றபோது நிழல் அவனுக்குப் பக்கவாட்டுச்சுவரில் படர்ந்தமர்ந்திருக்கும். யாரோ கரிய உருவம் திரும்பி அமர்ந்திருப்பது போல- நிஜத்தில் அப்படியொரு உருவமாக தான் இருந்திருக்கலாமென்று- நினைத்து சிரித்துக்கொள்வான். நிழலைப் பார்த்தவாறே தன்னுடலை அசாதாரணமாக அசைப்பான். அதுää மிருகம் பறவை என தன் வெவ்வேறு வடிவங்களில் உருமாறும். நிழலைத் தொட்டு அதன் கைகளைப் பிடித்திழுக்கின்றபோது அவனுக்கு புதுவித ஸ்பரிசவுணர்வு ஏற்படும். சமயங்களில் நிர்வாணமாக அதன்முன் நின்று அவ்வுணர்வுகளின் ஓட்டத்தைக் கவனித்திருப்பான்.
0
அன்றைக்கு இரவு தன் நினைவுகளைக் குவித்து அந்நிழலுடன் பேசிக்கொண்டிருந்தபோதுஇ அவனின் இயக்கமில்லாமலே அது சுவரில் பரிபூரணமாக நகர்வதைக் கண்டான். திடுக்கிட்டு நகர்ந்தான். அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நிழல் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உருவை மாற்றத்தொடங்கியது. முறுக்கேறியிருந்த அதன் ஆணுடல் மெலிந்து நீண்டு குழைந்தது. தலை மயிர் விரிந்து காற்றில் அலைந்தன. நிழலின் மார்பு கொஞ்சம் கொஞ்சமாக உப்பிப் புடைத்து காம்பினை நீட்டி, அழகிய முலைகளாக எழுந்து அண்ணாந்தன. ஆண் நிழல் முழுவதுமாக பெண்ணின் நிழலாக மாறிவிட்டதைப் பார்;த்து உறைந்திருந்தான். கரிய யட்சிபோல தோன்றிற்று. அவளைக் கண்டு பயந்து விக்கித்திருந்தாலும் அவளின் உடல் நெளிவுகள் ஆழ்மனதை கிளரவே செய்தன. முதன்முதலில் பெண்ணின் வாசனையை நுகர்ந்த அவன் புலன்கள் விழித்துக்கொண்டன. பைத்திய பிரமை என நினைத்து கண்களை இறுக்கிப் பொத்திக்கொண்டான். சட்டென ஓர் அழுகுரல் எழுந்தது. பதறி வெளியே வந்து எட்டிப்பார்த்தான். விம்மலொலி அவன் செவிகளுக்கு பின்னால் பூச்சியாக அடித்துக்கொண்டிருந்தது. தன் முதுகின்மீது யாரோ சாய்ந்திருப்பது போலொரு மென்னதிர்வு. ஜன்னல் கம்பியை இறுகப் பிடித்தவாறே திரும்பிப் பார்த்தான். கரிய அப்பெண்நிழல் சுவரில் நின்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தது. அவன் திடுக்கிட்டு “யார்?” என்றான். நிழல் பதில் கூறாமல் புன்னகை உதிரும் ஒலியை எழுப்பியது. அவன் தன்னுடலை நகர்த்தி நிழல் அசைகிறதாவெனச் சோதித்தான். அது அவ்விடத்திலே நின்றவாறே அவனைப்பார்த்து சிரித்துவிட்டு கட்டில்மீது படுத்துக்கொண்டது. சட்டென்று விளக்கை அணைக்க எத்தனித்ததும் நிழல்ää ‘வேண்டாமென’ கைகளைக் கெஞ்சுவதுபோல அசைத்தது.
அணைத்த புருவத்திற்குள் துடித்தபடி கரிய விழிகளும்ää சிறிய அம்புபோன்ற கூர்மூக்கும் அதில் நீர்ச்சொட்டு வடிவ நாசித்துளையும்; அவனை லயித்திருக்கச் செய்தன. அந்நிழலின் வெப்ப மூச்சு அவ்வறையில் நிறைந்தது. இரவு முழுவதும் அவள் சுவரைச் சுற்றி நடந்தபடியே இருந்தாள். அலுவலகத்தின் அலுப்பு கண்களை இழுத்தது. இமைகளை இறக்கிவிடுகின்ற ஒருகணத்திற்குள் சட்டென்று ஒரு கனவு தோன்றி மறைவது போல சுழற்றியது. ஆனால் தூக்கத்திற்கு வெளியே அறையில் நிழல் நடக்கின்ற சப்தம் காதில் விழுந்தது. திடுக்கிட்டு எழுந்து பார்த்தான். அது அறையின் மூலையில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தது. கோயில்களிலுள்ள கரிய சிற்பங்களின்மீதிருக்கும் எண்ணெய் பூசிய பளபளப்பு அவள் உடலிலும் இருந்தது.
0
பார்ன் வீடியோக்கள் பார்த்து சலித்திருந்த ஒரு நள்ளிரவில் நிர்வாண ஓவியங்களைத் தேடி இணையத்துக்குள் அலைந்தபோது கஸ்டவ் கிளிம்டின் ஓவியங்கள் சிக்கின. அவை பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தடைசெய்யப்பட்டவை. அதன் கிளாஸிக் தன்மை அவனுக்கு மிக நெருக்கமாகியிருந்தது. பொன்னிற காகிதத்தில் பெண்ணின் வௌ;வேறு உடலசைவுகள். கழுத்திலிருந்து பாதம் வரை பெண்களின் இச்சைகளை வெளிப்படுத்தும் ஓவியங்கள். அறைக்குள்ளிருக்கும் அப்பெண் நிழலைப் பார்த்தபோது முதலில் கிளிம்டினின் ஓவியங்கள்தான் நினைவில் எழுந்தன. கிளிம்டின் தூரிகைகளிலிருந்து சிதறியவளென அவளை நினைத்தான்.
தினம் கருமை பரவும் அந்திவேளையில் காய்ந்த பெருத்த மரத்தில் வந்தமரும் ராட்சஸப் பறவை போல அவள் எங்கிருந்தோ நிழலாக அவ்வறைச்சுவரில் தோன்றுவாள். அச்சாமப்பொழுது அவளுடனே தொடங்கும். அவன் பார்த்த பெண்களை பற்றி பேசுகையில் அவர்களுக்குள் தர்க்கம் மூண்டுவிடும். தன்னுடைய வாழ்க்கையில்; தானும் கஸ்டவ் கிளின்டினைப் போலொரு தனிமைக்குள் ஒதுக்கப்பட்டவன் என்றான். அதற்கு அவள், “நீ ஒரு தனிமைத் தீவின் அகதி” என்றாள். அவள் குரல் இசையின் முனகலாக மெல்ல எழுந்து செவிமுழுவதும் நிரம்பி ததும்பியது. மிக அருகே அவளைப் பார்ப்பதில் தன்னிலை இழந்தான். கழுத்தின் மென் மடிப்புகளும் கரிய மார்பகங்;களும். ஒட்டிய வயிறும் தொடைகளுக்குள் சென்று முடியும் அதன் நீட்சியையும் கண்டுகொண்டிருந்தான்.
அவளுக்காக தினம் சுவரின் ஒவ்வொரு பகுதியாக ஓவியங்களாகத் தீட்டத் தொடங்கினான். அவன் கனவுகளில் கண்டுணர்ந்த உலகம் அது. இணையத்தளத்திலிருந்த வான்கோவின்; ஓவியங்;களைப் பிரதியெடுத்தான். நீண்டு வளர்ந்த பொன்னிற புற்களின் நுனியில் சிறு வண்டுகளும் குருவிகளும் சூழ்ந்த பொன்படுக்கையை வரைந்தான். அதற்கப்பால் மலைச்சரிவினையும் ஆர்ப்பரித்துக் கொட்டும் நதியையும் அக்கரைகளில் வெண்ணிறப் பறவைகள் அமர்ந்திருப்பதெனத் தன் கற்பனைகளை அச்சுவர்களில் நிஜமாக்கினான். வான்கோவின் உலகத்தினுள் கிளிம்டின் பெண்கள் தோன்றியது அவ்வறையில் மட்டுமே என்று எண்ணியபோது அவன் மனம் குதுகலித்தது.
0
அன்றிரவு கணினியின் தன் வாழ்க்கையினுள் நிழல் நுழைந்து அதொரு பெண்ணாக உருப்பெற்றதை புனை கதையாக எழுதத்தொடங்கினான். படைப்பின் பித்தைப் பருகியவர்களைப்போல் புனைவினுள் மறைந்திருக்கின்ற வசியங்களுக்குள் அவனும் சிக்குண்டான். தன் கதையினை எழுதும்போது உண்டான எழுத்தின் வாசனையை நுகர்ந்து பரவசமடைந்தான். சடசடவென எழுத்துக்கள் வரிசைபிடித்து தட்டச்சக்குள் விழும் கணங்கள், இசையினை மீட்டுவதுபோலொரு ஆனந்தத்தினை அவ்விரல்கள் அடைந்தன. அப்பிரதியை அவளுக்குத் தெரியாது மறைத்து அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றான். தன்னைப் பற்றிய கதையினை ரகசியமாகப் படிப்பது கிளர்ச்சியைத் தூண்டியது. அப்பிரதி முழுவதும் அவள் உடல் வனப்புகளின் தாபவரிகள் ஊற்றாகக் கசிந்துகொண்டிருந்தன. திரும்பத் திரும்ப புரட்டி வாசிக்கையில் சுயமைதுவுணர்வைத் தருவிப்பதாக உணர்ந்தான். இப்புனைவு பிரசுரமானால் வாசிக்கின்ற ஆண்களுக்கு ஒருவித மோகத்திருகளையும்ää அதுவரை ஏற்படுத்தியிராத கற்பனையைக் கொடுக்கக்கூடுமென எண்ணினான்.
நூலகத்தில் குவித்துகிடக்கும் சிற்றிதழ்களைத் தேடி புனைகதைகளை பிரசுரிக்கும் இதழின் முகவரியைக் குறிப்பெடுத்துக்கொண்டான். அதற்கென தனக்கொரு புனைப் பெயரிட முடிவெடுத்தவன், அப்பெயர், அதுவரை படித்த நாவல்களின் கதாபாத்திரங்களையும் இசைத்துணுக்களையும் ஓவியங்களையும் கொண்டதாக இருக்கவேண்டுமென மெனக்கெட்டான். புனைப் பெயரிடுவதே புதுவிதமான சிலிர்ப்பை அளித்தது. முடிவில் அப்பெயர் அவளைப்பற்றிய குறிப்புகளைக்கொண்டதாக மாறியிருந்தது. அடுத்தடுத்த வாரத்தில் மாலை நேரங்களெல்லாம் சிற்றிதழ்களைப் புரட்டியபடியே நூலகத்தில் மறைந்தன.
0
அறைக்குள் நுழைந்ததும் சுவர் முழுவதும் அவள் வெறிபிடித்து எதையோ தேடி ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு பைத்திய யட்சி போல குரூரமாக அலைவதைக் கண்டு மருண்டான். அப்பிரதி, எங்கும் தேடிக்கிடைக்காததால் மூச்சிரைத்து அவனை நோக்கினாள். அவளுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? அவனைக்கொல்ல இயலாததால் அவன் முதுகில கடித்து தன் பற்தடங்களைப் பதித்துவிட்டு அழத்தொடங்கினாள். அவள் பேச்சு முழுவதுமாக அற்று, ‘இம்’; என்கிற முனகலொலி மட்டுமே அறையில் எதிரொலித்தது. அருகே செல்லும்போதெல்லாம் அவள் தன் உடலைக் கீறி, அவன் அருகாமையை வெறுத்தாள்.
அடுத்தடுத்த நாட்களில் தினம் பகல் பொழுதில் நூலகத்தில் ஒவ்வொரு இதழ்களாக அக்கதை வந்திருக்கிறதாவென்று தேடிப் பதறினான். தொடர்ச்சியாக சிற்றிதழுக்கு மெயில்களனுப்பி பிரசுரிக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்டற்குபின்பு கதை பிரசுரமாகாது நின்றது. இருந்தும் அவளின் உக்கிரம் தணியவில்லை. அறைக்குச்செல்லத் தயங்கி அலுவலகச்சாலை ஓரத்தில் தலை கனத்து அமர்ந்துகொண்டான். வெறிபிடித்து ஓடும் வாகனங்களின் வெப்பம் மிகுந்த டயர்களுக்குள் சிக்குவதும், பின் மேலே வருவதுமாக அவன் பிரக்ஞை அலைந்தது. ஆட்டோக்காரர்கள் நின்று அவனைக் கூப்பிட்டுப் பார்த்து ஆக்ஸிலேட்டரை முறுக்கிச் சென்றார்கள். அப்போது மேம்பாலத்தின்கீழே வாகனங்களின் வெளிச்சத்தினூடே சாலையோரச் சுவரில் வரைந்திருந்த இராட்சஸப் பறவை விளம்பரத்தைப் பார்த்தான். சட்டென வேகமாக எழுந்தவன்ää கடைகளில் சில பெயின்ட் குப்பிகளை வாங்கிக்கொண்டு விரைந்தான்.
0
அறைக்குள் நுழைந்ததுமே அவனி எண்ணத்தை அவள் அறிந்துவிட்டிருந்தாள். அவன் கையிலிருந்தவற்றை பிடுங்கி எரிந்து “இது எதுக்கு?” என்றாள். தனக்கு இச்சுவர் சித்தரங்களே போதுமென்றும் தன் மீது வண்ணத்தைக் குழைக்க வேண்டாமென கத்தினாள். அவளை தடுக்காமல் அவன் கட்டிலில் அமர்ந்தவாறு அந்தரங்கமாக பார்த்துச் சிரித்தான். அவள் பேசுவது விரல்கள் படாத கித்தாரில் என்றாவதொருநாள் தொடும் போது எழும் முனகலைப்போலிருந்தது.
கண்ணாடிப் பீங்கானில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வண்ணக்குப்பிகளைக் கொட்டினான். அவை ஒன்றோடொன்று மோதிப் புணர்ந்து புதிய வண்ணங்களாக மாறின. அவன் செய்வதையெல்லாம் அவள் தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருந்தாள். கண்ணாடிப் பாத்திரத்தினுள் வண்ணத்திரட்சிகள் உடைந்து ஒவ்வொன்றும் சிறு சிறு மீன் போல எழுந்து பாத்திரத்தின் விளிம்பிற்கு நீந்துவதை ரசித்தவாறிருந்தான். தூரிகையில் நிறங்களை அள்ளி அவளுடலில் தீட்டத்தொடங்கியதும் அவளின் ஆங்காரம் மெல்ல அடங்கியது. தன் கைகளை ஒன்றோடொன்று பின்னி மேலே உயர்த்தி நின்றுகொண்;டாள். அத்தூரிகையின் மென்மயிர்கள் அவளைக் கிளர்ந்தெழச் செய்வதாக எண்ணினான். அவளின் அப்புதிய பரிமாற்றம் கற்பனையின் உச்சமாக அவனுள் நிறைந்தது. அவளின் கரிய நிர்வாணம் சிவந்தது. அவளின் இடை மார்பு கழுத்து என உடலெங்கும் பொன்மஞ்சள் நிறமேறிக்கொண்டிருந்தது. முலைகள் பழுத்த கனியின் சதைத் திரட்சியாக மாறின.
விலாவிலிருந்து அக்குள் வரை வெண்ணிற இறகைத் தீட்டும் போதுதான் அவள் முகம் கன்றிப்போயிருந்ததைக் கவனித்தான். இவன் பார்வையைப் புரிந்து கொண்டவளாக “நீயும் எல்லா ஆண்களைப் போல என்னை சிறகு முளைத்த தேவதையாக மாற்ற விரும்புகிறாயா?” என்று கேட்டாள். அவன் தீட்டுவதை நிறுத்தினான். அவள் சிறகை பிய்த்து எறிந்துவிட்டு உடலில் ஏறிய வண்ணத்தை பாம்பு சட்டை கலற்றுவது போல உரித்தெடுத்தாள். மீண்ட தன் கரிய நிர்வாணத்துடன் ஓவியச்சுவர் படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள். அவன் குற்றவுணர்ச்சி தாளாது நடுங்கி நின்றான். கட்டிலில் பிய்த்தெறிந்த வண்ணச்சிறகுகள் தரையெங்கும் செதில்களாகக் காற்றில் பறந்தன. அவள் தன் பழைய நிர்வாண உடம்புடன் சலனமாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
0
பகலில் வெளியே தெரியும் உலகம் இவனுக்கு எப்போதுமே வேற்றுக்கிரகத்தைப் போலிருக்கும். எத்தனையோ நிழல்கள் மனிதர்களில் பாதங்களைத் தொற்றிக்கொண்டு கற்குகைவாசிகளைப் போல பின்தொடர்கின்றன. அந்நிழல்களின் மரணங்கள் பற்றிய பிரக்ஞையில்லாத மனிதர்கள் மீது அவனுக்கு வெறுப்பே இருந்தது. பெண் நிழல் தோன்றியதிலிருந்து பகலில் அவனுக்கு வேறெந்த நிழலும் பின்தொடரவில்லை. அவள் கருமையை ரசிக்கத் தொடங்கினான். கருமைக்குள் இருக்கின்ற எத்தனையோ முகங்கள் வெளிச்சத்தில் இல்லை. இருளுக்குள்ளிருந்து வெளிச்சத்தின் கூர்மையைப் பார்த்தான். இருள் கவிந்த வானமும், இருண்ட கோவில் சிற்பங்களும் அவன் மனதில் புது உணர்வுகளை முகிழ்த்தின. அவளை அவ்வறையை விட்டு வெளியே வரக்கூடாதென எச்சரித்திருந்தான். அவன் வெளியேச் சென்றதும் சுவரின் வண்ணங்களுக்குள்; மறைந்து கொள்வாள். தினம் அவளுடன் பேசுவதற்கென குறிப்புகளை சேகரித்தான்.
அன்றைக்கு நடுநிசியில் அந்நிழல் அவனைப் புணரத் தொடங்கியது. அவ்வியக்கம் பிரபஞ்சத்தின் முதல் இணைவாக உருவாகியது. அவனைச் சுற்றி படர்ந்ததும் பட்டுப்புழு போல அதன் நாவிலிருந்து தாபக்கோழைகள் சுரந்து இழையிழையானதொரு கூடாக அவனைப் பின்னிக்கொண்டது. அக்கூட்டிற்குள் அவன் தலைகீழாகத் தொங்கினான். கூட்டின் வெளியே மலை மேடுகளும் அதில் பொங்கி மேலேறும் நதியும்ää வேரின்றித் தொங்கும் ராட்சஸ மரங்களும் கீழ் நோக்கி வேகமாக விழுந்துகொண்டிருக்கும் பறவைகள் என வேற்றுக்கிரகமொன்று அவனுக்குத் தெரிந்தது. உலகம் தலைகீழாக உருண்டு ஓடியது. அவள் உடலிலிருந்து கிளம்பிய அல்குல் மணம் அவ்வறையெங்கும் குமைந்ததும் அவனின் நாசிகள் அதுவரையிருந்த தனிமையிலிருந்து மீண்டுகொண்டன. விழித்துக்கொண்ட அவளின் முலைமிருகம் அவன் உடலை கிழித்துப் பசியாறியது. தொடையினைவில் எரிந்துகொண்டிருந்த செங்காந்தள் மலரிதழ்களிலிருந்து சிறு நெருப்பு தனது நாவை நீட்டி அவனை உள்ளிழுத்ததும் தன் சரீரம் அவ்வெரிதழலில் கருகிச் சாம்பலாவதைக் கண்டான். காமத்தின் கரிய இரத்தம் தரையில் கசிந்து வழிந்தது.
0
அன்று காலை ஒருவாரப் பயிற்சி முகாமிற்கு மும்பைக்குச் செல்வதற்காக சீ.இ.ஓ விடமிருந்து அவனுக்கு மின்னஞ்சல் வந்திருந்தது. அலுவலகத்தின் ஏழாம் தளத்தில் நுழையும்போது சீ.இ.ஓ தன் பேச்சை நிறைவு செய்துகொண்டிருந்தார்.
“ஒவ்வொரு மென்பொருள் நிறுவனத்திலிருந்தும் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இது உங்களுக்கு மிக முக்கியமான நேரம். உயர்ந்த இடத்திற்குப் போவதற்கான வழியை இது அமைத்துக் கொடுக்கும். தொழில்நுட்பத்தின் இன்னொரு முகத்தைத் தெரிஞ்சுக்க வாய்ப்பு” பேசிவிட்டு அவர் அமர்ந்தார். எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்றனர். அவன் அமைதியாக அமர்ந்;திருந்துகொண்டான்.
அலுவலகத்திலிருந்து திரும்புகையில் காம்பௌன்ட் சுவருக்குக் கீழ் படர்ந்திருந்த மர நிழலில் நாயைக் கண்டான். சாய்ந்து கண்களை மூடியபடி அமர்ந்திருந்தது. உடலில் தன்னிச்சையாக ஒரே சீராக குலுங்குகின்ற ஆட்டம். முகத்தில் ஈக்கள் மோதி அதைச் சீண்டியபடியும், பல் இடுக்கில் சரிந்து தொங்கும் இரத்தம் படிந்த நாக்கில் மொய்த்துக்கொண்டுமிருந்தன. மூச்சு விட முடியாத நிலையில் தான் இருந்தது. பறவைகள் விடாமல் கத்திக்கொண்டிருந்தாலும் எந்தச் சலனமும் இல்லை. பேகிலிருந்த ரொட்டிப் பாக்கெட்டை பிய்த்து வீசியதும் தலையைச் சாய்த்து அதை முகர்ந்துவிட்டு பின் கண்களை மூடிக்கொண்டது. பயிற்சி முகாமிற்கு போகும் வரை நாயைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான்.
0
மும்பை விமானநிலையத்தில் இறங்கியதும் மென்பொருள் நிறுவனத்தின் வாகனம் அவர்களை அழைத்துச் செல்லத் தயாராகக் காத்திருந்தது. புனே போகும்வரை ஜன்னல் வழியே பனி கவிந்திருக்கும் மலைச்சரிவுகளைப் பார்த்தவாறே வந்தான். பயிற்சி அலுவலக மாடியில் அவர்களுக்கு அறைகள் ஒதுக்கியிருந்தார்கள். நிழல்களே விழாத வெளிச்சம் கொண்ட தாமிற நிற அறைகள். ஒவ்வொரு கணமும்; பதைபதைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டேருந்தான். முதல்நாள்; அவனுடைய எண்ணமெல்லாம் தன் நிழலைத் தேடிச் சலித்திருந்தது. யாருக்குமே அங்கு நிழல்கள்; இல்லை. புதிய இடம் அதீதமயக்கத்தில் ஆண்களும் பெண்களும் என அப்போதுதான் அவனைச் சூழ்ந்து மனிதர்கள் இருப்பதை உணர்ந்தான். லேப்டாப்பின் விரிப்பில் மட்டுமே அவன் நிழல் தெரிந்தது. அடுத்த கணமே அது தன் பிம்பம் எனத் தெளிந்தான். காலை மாலை இரவு எல்லாம் ஒன்றுபோலவே இருந்தன. தலைகீழாக தொங்கும் பறவையைப் போல எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள். அங்கு இரவே இல்லை நீண்ட பகல் மட்டுமே. இரவில் இருக்கும் லயிப்பும் சிலிர்ப்பும் இதில் இல்லை.
அவனுடைய குழுவிற்குப் பயிற்சியாளராக மரிலின் டிஸோசா அமர்த்தப்பட்டிருந்தாள். அவளின் கொங்கனி கலந்த ஆங்;கிலம் புளித்த ஒயினைப் பருகுவது போலிருந்தது. அவள் முகத்தின் நுட்பமான விளிம்புகளும்ää அதிவெண்மையான சருமமும் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கச் செய்தன. கழுத்தின் ஊடே மார்பில் இறங்கும் செந்நிற நரம்புகளும் உள்ளே தழும்பிக்கொண்டிருக்கும் மார்பின் முகடுகள் பிரக்ஞையை நழுவி இழுத்தது. அவள் தன்னோடு மட்டுமே பேசுவது போல பட்டது. தினம் தூக்கமின்றி அத்தனைபேரும் விழித்திருந்தார்கள். தூக்கம் சிறு மயக்கம் போலவே இருந்தது. மென்பொருள் நிறுவனங்கள் தரும் பயிற்சிகளே ஒரு போதை என அவனுணர்ந்தான்.
பயிற்சியின் நிறைவு நாளில் அவர்கள் அஜந்தா குகை ஓவியங்களைப் பார்க்கச் சென்றனர். பச்சைக்கம்பளிக்குள் புகுந்திருக்கும் கரிய மலைப்பாம்பாக அக்குகை படுத்திருந்தது. அவன் அப்போதுதான் அத்துனை ஓவியங்களையும் சிற்பங்களையும் ஒருசேரக் கண்டது. ஒவ்வொரு பாறைக் குகைக்குள்ளும் ததும்பும் பௌத்தமௌனத்தை உணர்ந்தான். ஓவியங்கள் ஒவ்வொன்றின் முகங்களிலும் நழுவும் புன்னகையினைப் பிரிதொன்றுடன் ஒப்பிட்டு, அதன் தனித்தன்மையைப் பரிசோதித்தவாறே வந்தான். பேரழகிகளின் ஸ்தனங்களில் பொதிந்திருந்த துறவிகளின் கற்பனைகளை எண்ணி வியந்தவன் அவனருகேயிருந்த மரிலினிடம் அவற்றைக் காட்டிச் சொன்னான். அவள் முகம் பதைப்புற்றிருந்தது. இவன் கவனிப்பதை அறிந்துää “அந்த ஓவியங்களுக்குள் நிழல்கள் மறைந்திருக்கின்றன” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். அவள் கூறியது அவனைத் திடுக்கிடச்செய்தது. ஒவ்வொரு குகைகளாக அவளுடனே பார்த்தவாறு வந்தவன் இருபத்தாறாவது குகையை அடைந்தபோது மீண்டும் அக்கேள்வியின் அர்த்தத்தைக் கேட்டான். அவள், ‘ஓவியன் முதன் முதலில் தன் நிழலைப் பார்த்துதான் ஓவியம் வரைய ஆரம்பித்தான். பின் அவனிடமிருந்து வெளியேறிய அந்நிழலைää அவன் தான் வரைந்த பல்வேறு ஓவியங்களில் தினம் தேடிக்கொண்டேயிருந்தான். அப்படித் தொலைந்த நிழல்கள் இன்னும் ஓவியங்களுக்குள் இருக்கின்றன’ என்றாள். மருண்டுவிட்டிருந்த அவன் முகத்தை மற்றுமொருமுறை ஏறிட்டு “ஆமாம் இரண்டாயிரம் வருடத்தின் நிழல்கள்” என்றாள் ஒரு கதையினை சொல்லத் தொடங்குவதுபோல். அவன் குறுக்கிட்டு; தன்னுடைய நிழலையும் அதன் உருமாற்றக் கதையினையும் சொன்னான். அவள் பதறி கழுத்தைப் பற்றி “ஜீஸஸ்” என்றாள் மென்குரலில்.
இருபத்தி ஆறாவது குகைக்குள்ளிருக்கும் பிருமாண்டமான தூண் வரிசைகளினடியில் அமர்ந்து அவளிடம் அந்நிழல் கதையினைச் சொல்லத்தொடங்கினான். கேட்டும் ஒவ்வொரு கணமும் அவளுக்குள் தாழாத பரவசம் மூள்வதை அவதானித்தான். கதையை முடித்தபோது அவள், தானும் அப்படியோரு நிழலுடன் இருக்கிறேன் என்றாள்.
அவன் திடுக்கிட்டு “அது உன்னுடையதா?” என்று கேட்டான்.
“இல்லை. அது என்னுடைய கணவனின் நிழல். அவர் இறந்தபோது சவப்பெட்டியின் வெளியே அந்நிழலை பார்த்தேன். கல்லறையிலிருந்து என்னைப் பின்தொடர்ந்து வந்து என் அறைக்குள் கணவர் வரைந்திருந்த ஓவியங்களுக்குள் புகுந்துகொண்டது” என்றாள். அவள் சொன்னதைக் கேட்டபோது அது தன்னுடய கதைதானென்றும் அல்லது தான் அவள் கூறும் கதைக்குள் இருக்கக்கூடுமெனவும் எண்ணங்கள் மாறி மாறி எழுந்தன.
“ஓவியங்கள்தான் அதற்கு இருப்பிடம். இன்றும் தினம் படுக்கையறைக்குள் என் கணவர் வரைந்திருந்த ஓவியங்களிலிருந்த அந்நிழல் என்முன் தோன்றுகிறது. என்னைத்தவிர வேறுயாருக்கும் தெரியாது” சொல்லும்போது அவளின்; விரல்கள் நடுங்குவதைக் கவனித்;தான். தினம் வெளியே வந்ததும் அந்நிழல் அவளின் ஆடைக்குள் நுழைந்து மறைந்துகொண்டு உள்ளே அவளைத் தீண்டுவதாகச் சொல்லிவிட்டு ஆடம்பரமான தொனியில் புன்னகைத்தாள். அப்புன்னகை அவளிடம் இருக்கும் மிக அழகான ஒன்றுபோலிருந்தது. அவளின் கதையைக் கேட்டுமுடித்ததும் அதற்குமுன் தன் பெண்நிழல் எப்போதோ சாமத்தில் முனங்கிய கதைதான் அதுவென யூகித்துää பின் எல்லாக் கதையுமே ஒன்றுபோல தோன்றுகிறதென குழம்பினான்.
0
அன்று மாலை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக மரிலின் அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள். மும்பை-புனே நாற்கரச் சாலையில் அவளுக்காகக் காத்திருந்தான். சாலையில் பாவியிருந்த விளக்குகளின் பொன்னிற வெளிச்சத்தினை பார்த்துக்கொண்டிருந்தபோது மரிலின் தன் சாம்பல் நிற ஸ்விஃப்ட் காரை ரோட்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு விளிம்பிற்கு ரிமோட் பொம்மை போல திருப்பி வந்து நிறுத்தினாள். அதன் உலோகப் பளபளப்பில் அவன் குட்டையாகத் தெரிந்தான். முன்னோக்கிக் குனிந்து கண்ணாடியை இறக்கிவிட்டுச் சிரித்தாள். சீட்டின்மீது சோப்புநுரை குவிந்திருப்பதுபோல வெண்ணிற சுடிதாரிலிருந்தாள். சாரல் போல ஏசியின் குளிர் அவனை கூசியது. டாஷ்போர்டில் மேரி மாதாவின் கனிந்த முகம். அதனருகே கீட்ஸின் போயட்ரி சரிந்திருந்தது. அவள் வார்த்தை உச்சரிப்பின் அழகியலை அக்கவிதை வாசிப்பதிலிருந்து கற்றிருக்கக் வேண்டும். மர்லின் இவனைப் பார்த்து சிரித்தவாறே காரின் வேகத்தை முடுக்கினாள். ஆக்ஸிலேட்டரின் மேல் அமர்ந்திருக்கும் அவளின் மென்பாதத்தை ஒருகணம் கற்பனை செய்துகொண்டான்.
“இன்னும் என் வீட்டில் அவனுடைய வாசனை வீசிக்கிட்டேயிருக்கு”. என்றாள் ஆங்கிலத்தில். இசைக்குறிப்புகள் போல் இருந்தன அவளின் ஆங்கிலக்குரல். அவன் அதிகமும் அவளின் நாவின் நுனியையே நோக்கியிருந்தான்.
“திருமணத்துப் பிறகு தொடர்;சியான வேலையிருந்ததால் இரண்டுப் மாதங்களுக்கு பிறகே நாங்கள் மறுபடியும் உறவு கொள்ள முடிந்தது. உச்சம் அவிழ்ந்தயிரவில் அவனுடைய உடலிலிருந்து இரத்தவாடை வெளியேறுவதை உணர்ந்தேன். ஆமாம் உங்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும்” அவனை ஏறிட்டுப்பார்த்தாள். எதிரே வாகனங்கள் பீய்ச்சும் வெளிச்சத்தில் அவள் முகம் மின்னியது. அவளின் நீள்மூக்கின்மீதே இவன் கவனம் குவிந்தது. வெளிநாட்டினருக்கே உரிய வடிவம் அது.
“அவன் உறங்கியவேளையில் அவ்வாசனையை நுகர்ந்துத் தேடியபோது அது என்னுடலில் தெறித்த அவனின் ஸ்கலிதத்திலிருந்து குமைகிறதெனக் கண்டுபிடித்தேன். அதற்குமுன் அப்படியொரு இரத்தம் உறைந்த குமட்டல் வீச்சத்தை நான் உணர்ந்ததில்லை. அடுத்தடுத்த நாட்கள் நான் அவனின் தாபத்திலிருந்து தப்பித்துக்கொண்டிருந்தது அவனுக்குத் அச்சத்தை ஏற்படுத்தியது. என் தவிர்ப்பு அவனுக்கு அகங்காரத்தை ஏற்படுத்தியது. கழிப்பறையினுள் சுயமைதுனம் செய்துகொண்டான். அப்போதுதான் அவனுக்கு தன் விந்து கெட்டுவிட்டது தெரிந்தது. தினம் கழிப்பறைக்குள் அமர்ந்து அழத்தொடங்கினான். மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றேன். அது விதைப்புற்று நோய் என்றார்கள். அவனைப் எப்படியாயினும் குணப்படுத்திவிட வேண்டுமெனப் புற்றுநோய் ஆய்கவங்களைத் தேடியலைந்தேன். அவனுக்குச் செலுத்தப்பட்ட கதிர்களும் மருந்து ரசாயனங்களும் வினையிழந்து மூத்திரமாக வீணாகின. இறுதியில் அவனின் ஒற்றை விதையினை அகற்றுவதென முடிவெடுத்தார்கள். அதுதான் அப்போதைக்கான எங்களின் ஒரே தீர்வு. தன் ஒற்றைவிதையுடைய குறியைப் பார்;க்கும் கணங்கள் ஆத்திரம் தாளாது கத்தக்தொடங்கிவிடுவான்”
“ஆறு மாதம் அவனைக்கூட்டிக்கொண்டு இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் சுற்றினேன். ஒவ்வொரு நகரத்தையும் பார்த்துவிட்டுக் கிளம்புகையில் வெறுமையையே எங்களால் உணர முடிந்தது. அவ்வெறுமை அடுத்த நகரத்தைக் காணும் வரை பின்தொடர்ந்தபடியே இருக்கும். ஒரு கட்டத்தில் வீட்டிற்கு திரும்பிவிடவேண்டும் போலிருந்தது. விமானத்தில் அவசரமாக டிக்கெட் பெற்று வீட்டிற்கு வந்துவிட்டோம். நான்கு நாட்கள் படுக்கையில் அட்டையாகச் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்தான். எழுந்தபோது அவன் கண்களில் சவம் பீடித்திருந்தைப் பார்த்தேன். சட்டெனத் தலையை சாய்த்து என் மடியில் பொத்திக்கொண்டேன். சரசரவென என் ஆடையினை மேலுயர்த்தி அடிவயிற்றில் முத்தமிடத் தொடங்கினான். தொடைகளிடையில் ஈரம் குளிர்வதை உணர்ந்தேன். ஆடைக்குள் குழந்தைபோல ஒளிந்துகொண்டிருந்தவனின் முகத்தைத் தூக்கி முத்தமிட்டேன். அற்றுப்போன அவனது காமவுணர்வை மீளச்செய்ய அன்றிலிருந்து அவனது அறைச்சுவரெங்கும் நிர்வாண ஓவியங்களை மாட்டி வைத்தேன். வீட்டில் யாருமற்ற நேரத்தில் அவ்வோவியங்களில் விழும் தன் நிழல்கள்மீது வண்ணங்களிட்டு வரைந்துக்கொண்டிருப்பான். என் வருகையை எதிர்பார்த்து அவனின் கற்பிதங்களைக் காட்டி மகிழ்ந்தான். கொஞ்ச நாளில் சுவர் முழுவதும் நிழல்களின் கருப்பு ஓவியங்கள் நிறைந்தன. அத்தனையும் அவன் வரைந்த உயிரோவியங்கள். அவன் நிழல்கள் அவ்வோவியங்களுக்குள் இருக்கிறதெனவும் அதனைக் கண்டுபிடிக்க முடியாததென்றும் என்னிடம் சொல்லி விளையாடுவான். அவ்வார்த்தைகள் சாதாரணமாக எனக்கு படவில்லை. அறையின் எட்டுதிசையிலிருந்து டார்ச் லைட்டுகளை அவனை நோக்கி ஒளிரவைத்து சுவரெங்கும் நிழல்களை உருவாக்கிää அந்நிழல்களும் ஓவியங்களும் இணைகின்ற புள்ளியில் எதையோ தேடிக்கொண்டிருப்பான். அவனின் எண்ணமெல்லாம் ஓவியங்களுக்குள்ளே சிதைந்துகிடந்ததால் நான் பதறி அவனை மீட்டெடுக்க மறுபடியும் புணர்விற்குத் தயார் செய்தேன். அன்று அவனுடலிலிருந்த குரூரம் வெளிப்பட்டு, என்னை அழிக்கத் துடித்தது. ஒரு சருகுபோல பற்றியிருந்தேன். அவன் போராட்ட அவஸ்த்தைகள் மோதி நழுவியதும், ஸ்கலிந்தம் ரசாயன வீச்சத்தோடு சொட்டி முடிந்தது. காலையில் படுக்கையில் அவனின் சவம் மட்டுமே கிடந்தது. முந்தினயிரவே விஷத்தைப் குடித்திருப்பதாக மருத்துவர்கள் ரிப்போர்;ட்டில் எழுதியிருந்தார்கள்”. அவள் சொல்லிமுடித்து, தன் அழகான பல் வரிசைகள் தெரிய எதையோ நினைத்துச் சிரித்தாள். அவன் “என்ன” என்றான் புரியாமல். “நத்திங். உங்களிடம் வீட்டில் வைத்துதான் இதைக் கூறவேண்டுமென்றிருந்தேன். இவ்வளவு சிறிய தூரத்தைக் கடப்பதற்குள் என் கதையைச் சொல்லிமுடித்துட்டேன். வாழ்க்கை மிகச் சிறிய தூரம் இல்ல” என்றாள் மீண்டும் சிரித்தபடி.
மழை பெய்திருந்ததால் வீட்டின் வெளி வராந்தாவில் ஈரம் மின்னியது. திறந்ததும் உள்ளே தங்கிய மென் வெம்மை அவர்களை உள்ளிழுத்தது. மெழுகுவர்த்திகளின் மூச்சுக்காற்று குமையும் கிறிஸ்தவவீடு. வீட்டினுள் புதுப்புது வாசனைகளினூடே வியர்வையின் உப்பு நெடியுமிருந்தது. கலவியின்போது மட்டுமே கசியும் அவ்வியர்வையின் பசிய வாசனை அது.
டைனிங் டேபிளில் அவனை அமரச் செய்து பிரிட்ஜிலிருந்து ஒயின் பாட்டிலையும்ää சமைப்பதற்காக வெட்டி வைத்திருந்த மீன் துண்டுகளையும் கொண்டு சென்றாள். சுவர்களிலிருந்த கிறிஸ்த்தவ வாசகங்களைப் படித்தவாறே ஷெல்பில் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த ஒயின் கிளாஸ்களைப் பார்த்தான். கேடயத்துடன் தயாராக நிற்கும் போர் வீரர்கள் போலிருந்தன. அவள் இரண்டு கண்ணாடி தம்ளர்களில் சிவப்பு ஒயினை ஊற்றி நீட்டினாள். குட்டிக் கடல்போல அது பொங்கியிருந்தது. “என் கணவருக்கு கேஷிவ் ஒயின் ரொம்பப் பிடிக்கும். கோவாவில் அதைத் தேடி வாங்கி விடுவார்”. கண்ணாடியிலான அம்மேஜையில் பீங்கான் பாத்திரங்களும் கரண்டிகளும் மோதுவது ராக் பாடலொன்றின் கடைசி டிரம்ஸ் இசை போலிருந்தது.
சாப்பிட்டு முடித்தபின் அவனைத் தன் படுக்கையறையைக் காட்டினாள். அவ்வறைக்குக் நுழைந்ததுமே சுவரில் ஓர் ஆணின் நிழலைக் கண்டான். வேட்டைத்தொப்பியணிந்துää தலைமுடிகள் தோள்களில் தவழää கூர் மூக்குகொண்ட கரிய ஆண் நிழல். நெடிய உயரம் கொண்ட அவன் அழகு, ஆணாகிய தன்னையே கிளரச்செய்கிறதென ஒருகணம் நினைக்கத்தோன்றியது. அந்நிழல் சுவரின் விளிம்புவழியே இறங்கி அவளின் இடையைப் பற்றி அணைத்தவாறு காதில் எதையோ முனுமுனுத்ததும் அவள் திரும்பி அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவன் “என்ன?” என்றான்
“உன் பெண் நிழலை அவன் பார்த்து விட்டான்” என்றாள்.
இவன் திடுக்கிட்டு அப்பெண் நிழலைப் பார்த்தான். அது அவனுக்கு பின்னால் சுவரோரத்தில் அது நின்றுகொண்டிருந்தது. அப்போதுதான் தன் பெண் நிழல் அங்கிருப்பதையே கவனித்தான். பயிற்சிக்கு வந்ததுமுதல் கண்ணில் படாத அந்நிழல் அவள் வீட்டினுள் நுழைந்ததுமே தோன்றியதுஇ ஒருகணம் அவனை வியப்பிலாழ்த்தியது. காதலியைக் கனவில் கண்டதுபோல திளைத்தான். ஆனால் அவள் அந்த ஆண் நிழலை நோக்கியவாறே இருந்தாள். நிழல்கள் பிறிதொரு நிழலைக் கண்டுகொள்வது போல். ஆண் நிழலின் வாசனை அவள் நாசியை விடைக்கச்செய்தது. இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவ்வாண்நிழல் பெண்நிழலின் கைகளைப் பற்றி இழுத்து அணைத்தது. அவள் கூச்சத்தோடு அவனின் கைகளைப் இறுக்கிக்கொண்டாள். இரண்டு நிழல்களும் சுவரில் பிணையத் தொடங்கின. பெண்நிழல் ஆண் நிழல் அணைப்பின் இறுக்கத்தில் சரிவதை இவன் பார்த்துக்கொண்டிருந்தான். உடலுக்கப்பால் பெருவெளியை எட்டும் புணர்வை அவர்கள் கண்டுகொண்டிருந்தார்கள். மனித தாபத்தை மீறிய வேட்கை. இரு கரிய நீர்க்கோழிகள் தண்ணீரின் மீது சடசடவென அடித்துக்கொள்வது போல அவை மூர்க்கமாக மோதின. பெண்நிழலின் முனகலில் ஆதிமொழியினுடைய ஸ்வரம் எழுந்தது. தன் அறையில் அன்று அப்படியோரு கலவியைத்தான் அவள் அன்று முயற்சித்திருந்தாளென அப்போது எண்ணினான். பேய்க்காற்று போல அறைமுழுவதும் நிழல்களின் மூச்சு வீசியது. அக்கலவியைப் பார்த்தவாறே மர்லின் டிஸோசா படுக்கையில் சாய்ந்து தன் கைகளை பின்னிக்கொண்டு நிதம்பத்தினைப் பற்றியிருந்தாள். அவளின் அந்நிச்சலன வடிவத்தினைப் பார்த்ததும் அவனுக்கு கிளிம்டின் சுயமைதுனம் புரியும் ‘தானே’ ஓவியம் நினைவில் எழுந்தது. அவ்வோவியத்தில் பார்த்ததுபோலவே படுக்கையறையெங்கும் பொண்ணிறம் சொரிந்திருந்தது.
மரிலின் படுக்கையிலாழ்ந்திருந்தாள். அவள் உடலிலிருக்கும் துளைகள் வழியே வெப்பம் வெளியேறிக்கொண்டிருப்பதாகத் தோன்றிற்று அவனுக்கு. பிம்பங்களையும் காட்சிகளையும் தாங்கி பறக்கும் சோப்புக்குமிழ்களைப் போல அவ்வறை இருந்தது. தன்னிடமிருந்து எதோவொன்று வெறியேறிவிட்டதாகவோ அல்லது சிலந்தி வலையின் கட்டத்திலொன்றில் தான் தொங்கிக்கொண்டிருப்பதாக உணர்;ந்தான். பிரக்ஞை மீட்டெடுக்கும் வழி தவறியது போலிருந்தது. இன்னும் ஒருகணம் அவ்விடத்தில் இருப்பது தன்னை தன் நிழலையும் சிதைத்துவிடுமென அறிந்தவன் நடுயிரவில் அவள் வீட்டிலிருந்து தப்பிக்கும் வழியைத் தேடிக் கிளம்பினான். அவன் வெளியேறுவதை ஓவியங்களுக்குள் மறைந்திருந்த அவளின் ஆண்நிழல் பார்த்துக்கொண்டிருந்தது.
0
இரயில் பயணம் முழுவதும் சிந்தனைகள் அவனிடம் குவியாமல் சிதறி ஓடிக்கொண்டிருந்தன. ஓடும் எண்ணங்களை அஜந்தா ஓவியங்கள் மீதும் அவன் அறைக்குள் இருக்கும் ஓவியங்கள்மீதும் செலுத்திப் பார்த்தான். ஒருகணம் தொட்டுவிட்டுப் பின் விலகிக்கொண்டன. பெண் நிழலிடம் அவளின் ஆதித்தோன்றலைப் பற்றிக் கேட்கவேண்டுமெனச் சொல்லிக்கொண்டான். வெளியே பெரும் பாம்புபோன்று இரயிலின் நிழல் தடதடவென பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது.
அறைக்குச் செல்லும் தார்சாலைகள் இருளில் பளபளப்புடன் நெளிந்திருந்தன. அடைமழை பெய்து ஓய்ந்திருக்க வேண்டும். வீடுகளில் தரையில் கொட்டும் சத்தம் கேட்பதற்கு மழை போலவே இல்லை. அறைக்கு நெருங்கும் ஆவல் அவன் இதயத்தை வேகமாக முன்னே இயக்கிக்கொண்டு போனது. தெருவின் திருப்பத்தில் இறங்கும்முன் சட்டென்று வீசிய குமட்டலில் முகத்தைப் பொத்தியவாறு திரும்பினான். சாலையின் நடுவே உடல் கிழித்தெறிந்து கிடந்த அந்த நாயைக் கண்டான். எலும்புகள் நொறுங்;கிக் காகிதம் போல பதிந்திருந்தன. சற்றே பெரிய பெருச்சாலியின் அளவிற்கு அது சுருங்கிவிட்டிருந்தது. அதன் அருகே சென்று பார்த்தான் நாயின் கழுத்தப்பட்டை சாலையில் அமிழ்;ந்து போயிருந்தது.
கதவைத் திறந்ததும் அறைக்குள் நிறைந்திருந்த இருள் மோகினிபோல குப்பென அவனை இழுத்துக்கொண்டது. டேபிள் லேம்பை போட்டுவிட்டு சுவரில் ஓவியங்களுக்குள் அவள் தோன்றுவதற்காக காத்திருந்தான். பதிலாக அவனின் ஆண்நிழல் மட்டுமே பெரியதாக நின்று கொண்டிருந்தது. அதன் பக்கத்தில் நின்று தடவிப்பார்த்து, சுவரோவியங்களுக்குள் தேடினான். அவள் வரவில்லை. கண்களை மூடி இமைகளைத் திறக்கும்போது அவள் எங்;கிருந்தோ வந்துவிடுவாளென்ற நம்பிக்கையில் பொத்தியமர்ந்திருந்தான். எத்தனை முறை அவ்வாறு செய்தும் அவன் ஆண்நிழல் மட்டுமே தெரிந்தது. அதைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் அருவருப்பு எரிச்சலும் பரவியது. லைட்டைத் திரும்பத் திரும்ப அணைத்துப் பார்த்தும் அவனின் கரிய உருவமே பூதம் போல் வந்துசென்றது. முன்பொருமுறை செய்ததுபோல ஆடைகளைக் களைந்து நிர்வாணியாகி கழுத்திலிருந்து தொடைவரை தடவி நிமிர்ந்தான். அப்போதும் அவனின் நிழல் மட்டுமே தெரிந்தது. சுவர்முழுவதும் தேடிச்சலித்து தரையில் விழுந்து அழத்தொடங்கினான். தலை கனத்து கண்களை மூடினான். அவள் சாம்பல் நிறத்தில் மார்பு குலுங்கிட சித்திரச் சுவரிலிருந்து அவனருகே வந்து முத்தமிட குனிந்தாள். அவளைக் கண்டதும் கைளை நீட்டி அணைக்க எழுந்தவன் சட்டென்று அவளின் பற்கள் கோரமாக நீண்டு, நாக்கு சிவந்து தொங்குவதைக் கவனித்து அதிர்ந்தான். அவளின் விழிகள் வெண்ணிறமாக மாறிச் சுழன்றன. கால்களைத் தூக்கி அவனை மிதிக்க எத்தனிப்பதற்குள் கனவுக்குள்ளிருந்து திடுக்கிட்டு எழுந்தான். உடல் வியர்த்திருந்தது. அவ்வறையே ஒரு குகையோவியங்களாக மாறியதைப் போலிருந்தது. அவள் அச்சுவர்களுக்குள்தான் இருக்கிறாளென அவ்வோவியங்களுக்குள் புகுந்துவிட பிரயத்தனப்பட்டு தலையைப் பலம்கொண்டு முட்டி விழுந்தான். ஓவியங்களில் அவன் இரத்தம் தெறித்திருந்தது. அவளின் வாசனை குமைவதை நுகர்ந்தபடி ஒவ்வொரு திசையாக மோதி மோதி தலை பிளந்து குருதி பீறிட்டுச் சாய்ந்தான். அவள் வெகுதூரத்தில் அவ்வோயங்களுக்குள் அலைந்துகொண்டிருந்தாள்.
0
விபின் இறந்து இரண்டாவது நாள் நான் அவனுடைய அறைக்குச் சென்றேன். சுவர்களில் வரைந்திருந்த ஓவியங்களை ஆர்ட் கேலரியை பார்வையிடுவதுபோல அலுவலக ஊழியர்கள் நின்று பார்த்து வியந்துகொண்டிருந்தனர். ஆனால் எனக்கு எவ்வித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் விபின் மிகச்சிறந்த ஓவியன். கல்லூரி ஆடிட்டோரியத்தில் ‘பிரபஞ்சத்தின் வரைபடம்’ என மிகப்பெரிய ஓவியத்தை வரைந்தவன் அவன். நிறைய வாசிக்கக்கூடியவன். ஒரு நாவலை வாசித்துவிட்டு அப்பிரதியில் அவ்வெழுத்தாளனின் பிரக்ஞை எங்கு அறுபட்டு பின்பு எங்கு பிணைந்ததெனக் கூறிவிடுவான்.
அவனுடைய லேப்டாப்பினுள் ஒவ்வொரு ஃபோல்டர்களாக ஆராய்ந்தபோது நாட்க்குறிப்புக்கென புதிய சாஃபட்வேர் ஒன்றை உருவாக்கி அதில் தினம் எழுதிவந்த பக்கங்களைப் பார்த்தேன். ‘ஷேடோஸ்’ என்கிற தலைப்பிட்ட ஃபைலில் இக்குறிப்புகள் இருந்தன. முழுக்க ஆங்கிலத்தில் எழுதியிருந்தான். உண்மையில் அவன் எழுதியது அவனைப் பற்றிய கதையே. அன்றைக்குப் பயிற்சிக்காக புனேவுக்கு நானும் சென்றிருந்தேன். அவனுக்குள் ஏற்பட்டிருந்த பைபோலர் பிறழ்வை முன்னரே அறிந்திருந்ததால், அவனை ஆற்றுபடுத்தவே மரிலின் டிஸோசாவிடம் அறிமுகப்படுத்தினேன். விபின் அவளுடன் அன்யோன்யமாக பழகும்போது தன் நோய்மையிலிருந்து படிப்படியாக விடுபடுவானென்று எண்ணினேன். ஆனால் இக்கதையை வாசித்தபிறகு இது என்னை வேறொரு மனநிலைக்குள் தள்ளிவிட்டது. ஆமாம். என்னைச் சூழ்ந்துகொண்டு விரட்டும் சில கேள்விகளுக்குப் பதில்கள் புலப்படவில்லை. மரிலினின் கதை உண்மையென்றால் அவளுக்கும் இந்நோயின் பாதிப்பு இருந்திருக்குமா? இருக்க வாய்ப்பு உண்டுடென்றால் எல்லோருமே பைபோலார் தன்மை உடையவர்கள்தானா? இக்கதையை மறு வாசிப்பு செய்யும்போது இன்னொரு கேள்வியொன்றும் தொற்றிக்கொண்டது. ஓவியங்களின் ஆதிவடிவம் நிழல்களிலிருந்துதான் தோன்றியதா?
பெங்களுர்
11.8.2014

எழுதியவர் : (12-Dec-17, 1:32 am)
பார்வை : 118

மேலே