முதல் காப்பி ---------------S ராமகிருஷ்ணன்
பேருந்து நிலையத்தின் மேற்கிலிருந்தது ரமண விலாஸ். சின்னஞ்சிறிய உணவகமாகத் துவங்கி பின்பு அருகிலுள்ள சைக்கிள் நிறுத்துமிடத்தையும் சேர்த்து வாங்கிப் பெரிது பண்ணியிருந்தார்கள். ரமண விலாஸின் சிறப்பு “காபி“.
அதுவும் பசும்பால் காபி. அதிகாலையில் அந்தக் காபி குடிப்பதற்கென்றே நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். நுரை ததும்ப பித்தளை டவரா செட்டில் தரப்படும் ஃபில்டர் காபியின் சுவைக்கு நிகரே கிடையாது.
பசும்பாலை அப்படியே கறந்து துளியும் தண்ணீர் கலக்காமல் காய்ச்சி எடுத்து, ஸ்பெஷலாக வறுத்து அரைக்கப்பட்ட காபி தூளில் டிகாஷன் எடுத்து மணக்க மணக்க போட்டுக்கொடுப்பார்கள். ரமணாவின் வீட்டுக்கு பின்னாடியே மாட்டுக் கொட்டகையிருந்தது. அவரிடம் ஆறு பசுமாடுகள் இருந்தன. ஆகவே வெளியே பால் வாங்குவதே கிடையாது.
ரமண விலாஸில் காலை பத்துமணியோடு காபி முடிந்துவிடும். திரும்ப மாலை நான்கு மணிக்கு துவங்கி இரவு எட்டு மணிவரையிருக்கும். சில நேரம் கடைசிப் பஸ்ஸிற்குப் போகிறவர்கள் காபியில்லையா என ஆதங்கத்துடன் கேட்பார்கள்.
“தூங்கப்போற நேரத்துல காபி குடிக்கக் கூடாது. காலையில வாங்க சூடா தர்றேன் “ என்பார் ரமணா
ரமண விலாஸ் காலை ஐந்தரை மணிக்கு துவங்கும். ஆனால் அதற்கு முன்பாகவே நடைப்பயிற்சிக்கு போய்வருகிறவர்கள் வியர்த்து வழிய இருட்டில் நின்று கொண்டிருப்பார்கள். சரியாக நாலரை மணிக்கு கணேசய்யர் வந்து சேருவார். அவர் வருவதற்கு முன்பாக ரமணா பால் கொண்டுவந்து வைத்திருப்பார். அடுப்பு ஏற்றப்பட்டுப் பால் கொதிக்க வைக்கபட்டுக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் டிகாசன் தயார் ஆகிக்கொண்டிருக்கும்
பாலும் கொதித்து டிகாசனும் ரெடி ஆனாலும் உடனே காபி கிடைத்துவிடாது. ரமண விலாஸில் முதல் காபி எப்போதும் மொய்தீனுக்குத் தான். அவர் வரும் வரை காபி எவருக்கும் விநியோகம் செய்ய மாட்டார்கள்.
சில நாட்கள் மொய்தீன் வர தாமதமாகிவிடும். ஆட்கள் கோபத்தில் சண்டையிடுவார்கள். ரமணா சமாதானம் சொல்வாரே அன்றிக் காபி கொடுத்துவிட மாட்டார்.
மொய்தீன் வீடு சின்னபள்ளிவாசல் தெருவில் இருந்தது. அங்கிருந்து சைக்கிளில் தான் வருவார்.. கட்டையான புருவங்கள். சற்றே வளைந்து போன மூக்கு. பூவேலைப்பாடு கொண்ட வெள்ளை தொப்பி, முட்டிக்கு மேலே கட்டியுள்ள ஊதா நிற லுங்கி, வெள்ளை ஜிப்பா, அதில் துருத்திக் கொண்டிருக்கும் பருத்த வயிறு.. கையில் வாட்ச் கட்டுகிற பழக்கம் கிடையாது. சைக்கிளை ஹோட்டலின் வலது பக்கம் தான் எப்போதும் நிறுத்துவார்.
பூட்டி சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே நுழையும் போது ரமணா எதிர்கொண்டு சிரிப்பார். இருவரும் கைகூப்பி வணங்கிக் கொள்வார்கள். முதல்டேபிளில் தான் எப்போதும் உட்காருவார். காபி வரும்வரை அவர் ஒருவார்த்தை பேச மாட்டார். சூடான காபியை கணேசய்யர் கொண்டுவந்து அவர் முன் வைக்கும் போது அதன் மணத்தை ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டபடியே கண்களை மூடிக் கொண்டுவிடுவார். தேனை சப்பிச் சப்பி ருசிப்பது போலக் காபியை கொஞ்சம் கொஞ்சமாகத் தொண்டையில் படக் குடிப்பார். ஒவ்வொரு மடக்கிற்கும் அவரது முகம் மலர்ச்சி அடைந்து கொண்டேயிருக்கும். உன்னதமான சங்கீதம் கேட்டு மலருகிற முகம் போல அவரது முகம் மலரும். பாதி குடித்த பின்பு டம்ளரை கிழே வைத்துவிட்டுக் கண்களைத் திறந்து பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார். அதன்பிறகு மற்றவர்களுக்குக் காபி வழங்கப்படும்.
மொய்தீன் ஒரு போதும் அவசரமாகக் காபி குடிப்பதேயில்லை. ஒரு நாளைக்கு ஒரேயொரு காபி. அது ரமணவிலாஸ் காபி மட்டுமே. வீட்டில் காபி டீ எதுவும் குடிப்பதேயில்லை
காபியை குடித்து முடித்தவுடன் பிரார்த்தனைக்குப் போய்விட்டு வெளியே வருகிறவர் போல முகம் மலர கல்லாவின் அருகில் வந்து மெதுவான குரலில் “நிறைஞ்ச செல்வம் பெருகட்டும்“ என்பார்.
அந்த வாழ்த்தொலி தான் காபிக்கான ஈடு.
அந்த ஆசியை ரமணா பிரசாதம் வாங்கிக் கொள்வது போலப் பயபக்தியோடு ஏற்றுக் கொள்வார்.
மொய்தீனுக்கு எதற்காக முதலில் காபி கொடுக்கிறார்கள் என ஊர்வாசிகள் ஒருவருக்கும் தெரியாது. யாராவது கேட்டாலும் அது ஒரு வழக்கம் என்று மட்டுமே ரமணா சொல்வார். மொய்தீனும் அதைப்பற்றிச் சொல்லிக் கொண்டதே கிடையாது.
மொய்தீனுக்கு உடல்நலமில்லாமல் போய்விட்டாலோ, அல்லது வெளியூர் போய்விட்டாலோ அன்றைக்கு ஹோட்டலில் காபியில்லை என்று ரமணா மறுத்துவிடுவார். இந்தப் பிடிவாதம் அவரது வாடிக்கையாளர்களுக்கு எரிச்சல் உண்டுபண்ணிய போதும் அவர் விட்டுக் கொடுக்கவேயில்லை.
இதனாலே மொய்தீன் என்ன நடந்தாலும் காலை காபிக்கு வந்து நின்றுவிடுவார். ஒரு வருஷத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ வெளியூர் போகிற போது முன்னாடியே சொல்லிவிடுவார். ரமணா அது போன்ற நாட்களில் ஹோட்டல் வாசலில் நாளைக்குக் காபி கிடையாது என எழுதி வைத்துவிடுவார். அதைப் பற்றி ஊரே வியந்து பேசுவதுண்டு.
ஒரு மனிதனுக்காகப் போய் இப்படி வியாபாரத்தைக் கெடுத்துக் கொள்கிறாரே எனக் கணேசய்யர் கூடப் பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் ரமணாவிற்கு அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பமில்லை. வீட்டில் யாராவது இதைக் கடிந்து சொன்னால் ரமணா அவர்களுடன் சண்டைபோடவும் செய்வார்.
மொய்தீனும் ரமணாவும் காலையில் அந்த ஒருமுறை சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்து ஒருநாளில் கூடி பேசுகிறவர்களும் இல்லை. எப்போதாவது மாதத்தில் ஒரு நாள் இரவு கடை எடுத்து வைக்கப்போகிற நேரம் மொய்தீன் வருவார்.
வியாபாரம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது. குடும்பத்தில் என்ன பிரச்சனை என்பதையெல்லாம் பற்றி அவரிடம் ரமணா எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பார். மொய்தீன் சில நேரம் ஆலோசனைகள் சொல்வதுண்டு. ரமண விலாஸில் காபி ஒன்றை தவிர வேறு உணவுகள் எதையும் எப்போதும் மொய்தீன் வாங்கிப் போனதாக யாரும் கண்டதில்லை.
பணம் வருகிறதே என்பதற்காக எதையும் தின்னக்கொடுத்து காசு வாங்கிப்போட்டு கல்லாவை நிரப்பக்கூடாது என்பதில் ரமணா கவனமாக இருந்தார். அவரது குடும்பத்தில் எவரும் ஹோட்டல் நடத்தியதில்லை. இப்போது கூட அவருக்கு அவசரத்துக்கு ஒரு காபி போடத்தெரியாது. ஆனால் கணேசய்யரின் பழக்கம் தான் ஹோட்டல் ஆரம்பிக்கச் செய்தது.
கணேசய்யரின் குடும்பமே சமையல்கலைஞர்கள். தலைமுறையாகவே இதுவே தொழில் என்பதால் வெறும் தண்ணீரில் விரலை நனைத்துக் கொடுத்தாலும் ருசிக்கும்.
ரமணாவின் அப்பா வக்கீல் குமாஸ்தாவாக இருந்தார். காசநோய் கொண்டவர் என்பதால் அடிக்கடி வீட்டில் முடங்கிக் கொண்டுவிடுவார். அதனால் ரமணாவை படிக்க வைக்கமுடியவில்லை. எட்டுவரை தான் படித்தார். அப்பா இறந்தபிறகு வீட்டின் சுமையைக் குறைக்க அவரைச் சிட்பண்ட்ஸ் ஒன்றில் சீட்டுப் பணம் வசூல்செய்கிற வேலையில் சேர்த்துவிட்டார்கள்.
ரமணா சைக்கிளில் சுற்றாத தெரு கிடையாது. சீட்டுப்பணம் வசூல் பண்ண போன இடத்தில் தான் கணேசய்யரை சந்தித்தார். முதற்சந்திப்பில் கணேசய்யரின் வீட்டில் ஒரு டம்ளர் மோர் கிடைத்தது. அவ்வளவு ருசியான மோரை அவர் குடித்ததேயில்லை. இதை மட்டும் விற்பனை செய்தால் கைநிறைய காசு பார்த்துவிடலாம் என ரமணாவிற்குத் தோணியது. அந்த யோசனையைக் கணேசய்யர் ஏற்றுக் கொண்டதுடன் தினமும் இரண்டு லிட்டர் பால் வாங்கிக் கொடுத்துவிட்டால் மோர் தயார் பண்ணி தருவதாகச் சொன்னார். வீடு வீடாக அலைந்து சீட்டுப் பணம் சேகரிக்கும் போதே சைக்கிளில் மோர் விற்பதையும் ரமணா இணைத்துக் கொண்டார்.
சீட்டுபணத்தில் கிடைக்கும் கமிஷனை விடவும் மோர் விற்பதில் காசு நிறையக் கிடைத்தது. அப்போது தான் மொய்தீன் அறிமுகமானார். மொய்தீன் வீட்டுப் புரோக்கர் என்பதால் அவருக்கு ஊரில் பலரையும் நன்றாகத் தெரிந்திருந்தது. பெரிய வணிகர்களுக்குத் தேவையான குடோன்கள் கூட அவர் வாடகைக்குப் பிடித்துத் தருவதுண்டு. உள்ளுர் பேங்குகள் மூன்றும் அவர் வாடகைக்குப் பிடித்துத் தந்த கட்டிடத்தில் தான் நடக்கின்றன. ஆகவே மொய்தீனிடம் வாடகைக்கு ஒரு கடை கேட்கலாமே என்று நினைத்து அவரைச் சந்தித்தார்
“உங்க அப்பா வக்கீல் குமாஸ்தா சுப்பையா தானே“ எனக்கேட்டார் மொய்தீன்
“ஆமாம்“ என தலையாட்டினார் ரமணா
“நல்ல மனுசன். எனக்கு கூட ஒரு கேஸ்ல உதவி செய்துயிருக்கார். பாவம் அற்பஆயுசில போயிட்டார்“
“அவருக்கு காச நோய்“ என்றார் ரமணா
“உனக்கு என்ன வேணும் சொல்லு“
“தேரடி கிட்ட ஒரு கூல்டிரிங்க்ஸ் கடை போடலாம்னு நினைக்கேன். முருகன் ஸ்டோர்ஸ்காரங்க இடம் இருக்கு. நீங்க பேசி முடிச்சி தர முடியுமா “
மொய்தீன் அதைக்கேட்ட மாத்திரம் சொன்னார்
“அந்தக் கடை வேணாம். அதுல ஆரம்பிச்ச எதுவும் நல்லா ஒடலை. உனக்குச் சரிப்படாது. தேரடி பக்கம் வேணாம். புதுப் பஸ் ஸ்டாண்ட் வாசல்ல டிபன் கடை போட்டா ஒடும்“.
“புது பஸ்ஸ்டாண்ட் வாசல்ல இடம் கிடைக்குறது லேசில்லை. பகடி ரொம்பக் கேட்பாங்களே “என ஆதங்கமாகக் கேட்டார் ரமணா
“என் சின்ன மகன் கடை போட ஒரு இடம் பிடிச்சி வச்சிருக்கேன். அதை வேணும்னா நீ எடுத்துகிடுறயா“
“அப்போ உங்க மவனுக்கு “
“அவனுக்கு வேற இடம் பாத்துகிடுறேன் “
“வீட்ல கோவிச்சிகிடமாட்டாங்களா“ எனக்கேட்டார் ரமணா
“கோவம் வரத்தான் செய்யும். நான் பேசிகிடுறேன். நீ நாளைக்கு வந்து அந்த இடத்தைப் பாரு. “
ரமணா தலையாட்டிக் கொண்டார். இதைப்பற்றி விவாதிப்பதற்காகக் கணேசய்யர் வீட்டுக்குப் போனார். ஐயருக்குப் புதுப் பஸ்ஸ்டாண்ட் வாசலில் கடை ஆரம்பிப்பதில் விருப்பமில்லை.
“வெளியூர்காரங்க வந்து போற இடம். அவசரத்துக்குச் சாப்பிடுறவங்களுக்கு ருசி தெரியாது. நம்மளை கோவிச்சிகிடுவாங்க“.
ரமணா அரைமனதோடு தான் மொய்தீன் காட்டிய இடத்தைப் பார்க்க போனார். அது பெட்டி கடை வைக்கும் அளவிற்கான இடம் தான். அதன்முன்னால் ஒரு கூரைகொட்டகை போட்டுக் கொள்ளலாம். அதற்கு நான் பேசி அனுமதி வாங்கித் தருகிறேன் என்றார் மொய்தீன்
அப்படிச் செய்தால் நாலு பெஞ்சு போட்டுவிடலாம் என ரமணா நினைத்து அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள ஒத்துக் கொண்டார்.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய முன்பணத்தைத் தானே கட்டிவிட்டதாகவும், வாடகை மட்டும் அவன் கொடுத்தால் போதும் என்று மொய்தீன் சொன்னார்
“நானே முன்பணத்தைக் குடுத்துருறேன்“ என ரமணா சொன்னபோது “பரவாயில்லை இருக்கட்டும் நீ வேலையைப் பாரு. “ என மறுத்துவிட்டார்.
கீற்றுக் கொட்டகை போட்டு ரமணவிலாஸ் தயார் ஆனது. ஒரு வெள்ளிகிழமை ஹோட்டல் ஆரம்பம் என விளம்பரம் செய்தார்கள்
கடை திறப்பு விழாவிற்கு நேரில் அழைப்பிதழ் கொடுக்க வேண்டி பத்தாயிரம் ரூபாயை ஒரு கவரில் போட்டு எடுத்துக் கொண்டு வெற்றிலை பாக்கு பழத்தோடு மொய்தீனைப் பார்க்க போனார் ரமணா
பணக் கவரை கண்ட போது மொய்தீன் முகம் மாறியது
“என்னது இது“
“உங்க முன்பணம்“ எனத் தயங்கியபடியே சொன்னார் ரமணா
“நான் என் மவன் தொழில் பண்ண பிடிச்சி வச்சிருந்த இடத்தை உனக்குக் குடுத்துருக்கேன். நீயும் என் மவன் மாதிரி தான். பணம் உங்கிட்ட இருக்கட்டும் தேவைப்படும் போது வாங்கிகிடுறேன். “
அதைக்கேட்ட போது ரமணா நெகிழ்ந்து போய்விட்டார்
“எங்க அப்பா எனக்கு எதுவும் கொடுத்துட்டு போகலை. நானா உழைச்சி சம்பாரிச்சி தான் இந்த ஹோட்டலை ஆரம்பிக்கிறேன். நீங்க செய்த உதவியை என்னைக்கும் மறக்கமாட்டேன். “
“நல்லா வருவே. போயிட்டு வா“. என ஆசி கொடுத்தார் மொய்தீன்
“ஹோட்டலை நீங்க தான் வந்து திறந்து வைக்கணும்“. எனப் பணிவோடு கேட்டார் ரமணா
“நான் என்னப்பா பெரிய ஆளா. அந்தக் கணேசய்யரயே கடையைத் திறக்க சொல்லு. மனுசன் சொந்த கடைனு நினைச்சிட்டு வேலை செய்வான்“.
“அப்போ கடை திறக்குற அன்னைக்கு முதல் காபியாவது நீங்க குடிக்கணும்“
“எனக்குக் காபி டீ குடிக்கிற பழக்கம் கிடையாது. ஆனா நீ அன்போட கூப்பிடுறப்போ மறுக்கமுடியலை. வர்றேன் “
அப்படித் தான் கடை ஆரம்பிக்கும் முதல்நாளில் முதல்காபி மொய்தீனுக்கு வழங்கப்பட்டது. அன்றைக்குக் கடையில் நல்ல வசூல். வடை, இட்லி, தோசை எல்லாமும் காலி. மாலையில் பஜ்ஜி. போண்டா, பூரி எல்லாமும் ஏழு மணிக்குள் விற்று தீர்ந்து போனது. அதிகம் விற்பனையானது காபி தான்.
கணேசய்யரின் காபிக்கு மவுசு அன்று தான் உருவானது. அன்றிரவு மொய்தீனை பார்த்து நன்றி சொன்ன ரமணா சொன்னார்
“இனிமே தினம் முதக் காபி உங்களுக்குத் தான். இந்தக் கடையில் உங்க பங்கும் இருக்கு. எனக்கு இந்த வாழ்க்கை அமைஞ்சதுக்கு நீங்க தான் காரணம். இது என்னோட படையல்னு நினைச்சிக்கோங்க“
“அதெல்லாம் சரியா வராது ரமணா. உன் ஆசைக்கு ஒரு நாள் காபி குடிச்சிட்டேன்ல அது போதும்“
“அப்படிச் சொல்லாதீங்க. இனிமே நீங்க குடிச்ச பிறகு தான் கடையில காபி விற்பேன்.நீங்க வரலைன்னா அன்னைக்குக் காபி கிடையாது. “
“வியாபாரம் பண்ணுறவன் இப்படி இருந்தா பிழைக்கமுடியாது ரமணா. “
“என் மனசுக்கு இது தான் சரினு படுது. நீங்க பாத்து ஆரம்பிச்ச கடை. உங்க ஆசியில தான் நடக்கணும்“ என்றபடி திடீரென அவரது காலில் விழுந்தார் ரமணா
மொய்தீன் அவரைத் தூக்கிவிட்டபோது கண்கலங்கிப் போயிருந்தார்
“உன் மனசுக்கு எல்லாமே நல்லா வரும். “ என ஆறுதலாகச் சொன்னார்
அன்றிலிருந்து தான் மொய்தீனுக்கு முதக்காபி தரும் பழக்கம் உருவானது. அது முப்பத்தியாறு வருஷங்களாக நீண்டு கொண்டிருந்தது. சில நாட்கள் ரமணா வெளியூர் போயிருந்தாலோ, நோயுற்றிருந்தாலோ அவரது தம்பியோ, மச்சினனோ வருவார்கள். அவர்களும் மொய்தீன் வரும்வரை எவருக்கும் காபி வழங்கமாட்டார்கள்.
சின்னஉணவகம் புகழ்பெற துவங்கி எப்போதும் கூட்டம் காத்திருந்த நாட்களில் மொய்தீன் தான் பக்கத்து சைக்கிள் ஸ்டாண்ட் ஆளிடம் பேசி அதையும் வாங்கிக் கொடுத்தார். பின்பு ஹோட்டலுக்குப் புதுப் பில்டிங் கட்டி மாடியில் சாப்பாடு பிரிவு தனியே துவங்கபட்டபோதும் மொய்தீன் தான் உடனிருந்தார்.
ரமண விலாஸ் காபிக்கென எப்போதும் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். வெளியூர் பயணிகள் பஸ் நிற்கும் நேரத்தில் இறங்கி வந்து ஒரு கப் காபி குடித்துவிட்டு தான் போவார்கள். இசைக்கலைஞர்கள். நடிகர்கள். அரசியல்வாதிகள் எனப் பலரும் அந்தக் காபியை தேடி வந்து குடித்துப் பாராட்டியிருக்கிறார்கள்.
மத்தவர்கள் ஒரு தடவை காபித் தூள் போட்டால் அதுலருந்து மூணு தடவை டிகாஷன் அடிப்பார்கள். ஆனால், கணேசய்யர் ஒரே ஒரு தடவை தான் டிகாஷன் எடுப்பார். இப்படி ருசியான காபி குடுத்து ரமண விலாஸிற்குப் பெரிய ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்திருந்தார்கள்.
ஹோட்டல் பிசினஸில் பணம் லட்ச லட்சமாகக் கொட்டிய போது மொய்தீனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தர முன்வந்தார் ரமணா. ஆனா மொய்தீன் ஒரு பைசா வாங்கவேயில்லை. அதற்குப் பதிலாக அந்த ஒரு டம்ளர் காபியை மனதோடு குடித்து ஆசி கொடுத்துப் போனார்.
அவர்களுக்குள் இருந்த இந்த உறவு உலகம் அறியாதது. ஊர்மக்கள் அதைப்பற்றி எத்தனையோ கதைகளை உலவவிட்டார்கள். மொய்தீன் மாந்தீரிகம் படித்தவர். இருவரும் சேர்ந்து புதையல் எடுத்தார்கள் என்றெல்லாம் கதைகள் உலவின.
தேர் திருவிழா நடந்து கொண்டிருந்த போது ஒருநாள் மொய்தீன் காபி குடிக்க வரவில்லை எனவே இன்று காபி கிடையாது என ரமணா போர்டு வைத்த போது கணேசய்யர் கோவித்துக் கொண்டார். இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இனி வேலைக்கு வரமாட்டேன் என ஹோட்டலை விட்டு வெளியேறிப் போனார்.
மறுநாள் மொய்தீன் வந்தபோது காபியின் சுவை மாறியிருந்தது.
“எங்க கணேசய்யர் எனக்கேட்டதற்கு ரமணா நேரடியாகப் பதில் சொல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து புது மாஸ்டர் வந்துருக்கார். காபி கைகூட ரெண்டு நாள் ஆகும்“ என்றார்
“ஏன் கணேசய்யர் எங்க போனார்“ எனக்கேட்டார் மொய்தீன்.
“சொல்வார் பேச்சை கேட்டுகிட்டு வெளியேறி போயிட்டான்“ என ரமணா சுவற்றிலிருந்த சாமி படத்தைப் பார்த்தபடியே சொன்னார்
மொய்தீன் ஒன்றும் கூறவில்லை. ஆனால் மறுநாள் கணேசய்யர் ஹோட்டலில் வேலைக்கு வந்திருந்தார். ரமணாவும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. எப்போதும் போலக் காபி குடித்துவிட்டு மொய்தீன் சிரித்தபடியே சொன்னார்
“நேத்து கழுதை மூத்திரத்தை குடிச்ச மாதிரி இருந்து. நல்லவேளை நீரு வந்துட்டீரு“
“நானா எங்க வந்தேன். உங்க புத்திமதிக்கு கோவில்கட்டி கும்பிடணும்“.
மொய்தீன் என்ன செய்தார். எப்படிக் கணேசய்யர் திரும்ப வேலைக்கு வந்தார் என யாருக்கும் தெரியாது. ஆனால் அதன்பிறகு கணேசய்யர் ஒரு போதும் அந்தக் கடையை விட்டு போகவில்லை.
ரமணாவிற்குத் திடீரென ஒருநாள் முதுகில் ராஜபிளவை நோய் ஏற்பட்டது. அந்நோயை குணப்படுத்த பல வைத்தியர்கள் வந்தாலும் குணமாகவில்லை. மதுரைக்கு அழைத்துப் போய் மாதக்கணக்கில் சிகிட்சை செய்தார்கள். அதில் ஆள் உருக்குலைந்து போனார். ஹோட்டலுக்கு வருவது நின்று போனது. அவரது மூத்தமகன் லட்சுமணன் தான் கடையை நடத்தினான். அவன் ஒரு முன்கோபி. கடை பணியாளர்களையும் கணேசய்யரையும் கண்டபடி திட்டுவான். தரமற்ற பலசரக்குச் சாமான்களை வாங்கிப் போடுவான். எண்ணெய்யை திரும்பத் திரும்பப் பயன்படுத்த செய்வான். இதனால் ஹோட்டலில் சாப்பிட வருகிறவர்கள் எண்ணிக்கை குறைந்து போனது. ஆனால் காபிக்கான கூட்டம் குறையவேயில்லை.
பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட டீக்கடைகள் முளைத்த போதும் ரமணவிலாஸ் காபியை அடித்துக் கொள்ள முடியவில்லை.
லட்சுமணன் புதிதாகத் துவங்கப்பட்ட சினிமா தியேட்டர் முன்பாக ரமணவிலாஸின் கிளை ஒன்றை துவங்கினான். அந்தக் கடையில் துரித உணவு வகைகளைக் கிடைக்கச் செய்தான். ஆரம்பத்தில் அந்தக் கடை நன்றாக ஒடியது. ஆனால் பின்பு அதுவும் முடங்கிப்போனது. சைவ உணவகத்தை விடவும் அசைவ உணவகம் நடத்தினால் நல்லலாபம் என முடிவு செய்து புறவழிசாலையில் புதிய அசைவ உணவகம் ஒன்றை துவக்கி அதை அவன் பொறுப்பு ஏற்றுக் கொண்டு சின்னவன் சபரியிடம் ரமணவிலாஸை பார்த்துக் கொள்ளச் செய்தான்.
சபரி பொறுப்பு ஏற்றுக் கொண்டதும் கடையின் வாஸ்து சரியில்லை என்று வாசலை தெற்கு நோக்கி வைத்தான். கடையில் பிளாஸ்டிக் கோப்பைகள் தட்டுகளைப் பரிமாறச் செய்தான். உணவு பொருட்களின் விலையை மூன்று மடங்கு அதிகமாக்கினான். ஒரு காபி இருபத்தைந்து ரூபாய் என விலை வைக்கபட்ட அன்று பலரும் மனதிற்குள் திட்டிபடியே பணம்கொடுத்தார்கள். அன்று மொய்தீன் காபி குடித்துவிட்டு திருப்தியற்றவராகச் சபரியிடம் சொன்னார்
“காபி விலையைக் குறைக்கணும் சபரி. மெட்ராசு விலை நம்ம ஊருக்கு கட்டுபடி ஆகாது. ஜனங்க வாயில விழக்கூடாது. “
சபரி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. அவன் சாமிக்கு பூ போடுவது போலத் திரும்பிக் கொண்டான்
மறுநாள் காலை எப்போதும் போல மோதீனுக்கு முதல்காபியை கணேசய்யர் கொண்டு வந்து வைத்தபோது அவர் காது படச் சபரி சொன்னான்
“ஒசியில பினாயில குடுத்தா கூடத் தினமும் வாங்கிக் குடிக்க நம்ம ஊர்ல ஆள் இருக்கு, என்ன ஜென்மமோ, ஒசி காபிக்குனு வந்துருறாங்க.. “
மொய்தீன் காபி டம்ளரை அப்படியே வைத்துவிட்டு எழுந்தார். கணேசய்யர் அவரைச் சமாதானப்படுத்த முயன்ற போதும் அவர் திரும்பி கூடப் பார்க்கவில்லை
அதன் மறுநாள் மொய்தீன் ரமண விலாஸிற்குக் காபி குடிக்க வரவில்லை. அன்று வாடிக்கையாளர்களுக்குக் கணேசய்யர் காபி போடமுடியாது என உறுதியாக இருந்தார். சபரியே அடுப்படிக்கு வந்து காபி போட்டுக் கடையில் இருந்தவர்களுக்கு விநியோகம் செய்தான். கணேசய்யர் துண்டை உதறி போட்டுக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறிப் போனார்.
இது நடந்த ஒருவாரத்தின் பின்பு ரமணாவை பார்க்க அவரது வீட்டிற்குப் போனார் மொய்தீன் . படுக்கையில் கிடந்த ரமணா அவரைப் பார்த்தவுடன் எழுந்து உட்கார்ந்து கொண்டார். சட்டையில்லாத உடம்பில் மார்பு எலும்புகள் துருத்திக் கொண்டு தெரிந்தன, நரைத்து வெளிறிய தலை. உலர்ந்து போன உதடுகள்.
“எப்படியிருக்க ரமணா“ என ஆறுதலாகக் கேட்டார் மொய்தீன்
“இருக்கேன். என் கதை முடியுறதுக்கு முன்னே ரமணவிலாஸை மூடிட்டு போயிருவாங்களோனு கவலையா இருக்கு“.
“அதான் எனக்கும் வருத்தமா இருக்கு. ஊர்ல எல்லோரும் ரொம்ப மோசமா பேசுறாங்க. சாப்பாடும் சரியில்லை. கணேசய்யர் போனபிறகும் காபியும் கழனிதண்ணீ மாதிரி ஆயிருச்சினு சொல்றாங்க “
“பிள்ளைக நாம சொல்றதை கேட்கமாட்டேங்கிறாங்க. மீறி சொன்னா அசிங்கமா திட்டுறாங்க. ஹோட்டல் நடத்துறவன் ஊர்வாய்ல விழக்கூடாது. இது என் பிள்ளைகளுக்குத் தெரியலை. “
“காலம் மாறிப்போயிருச்சி. நான் தான் உனக்கு இடம்பிடிச்சி குடுத்து கடையை ஆரம்பிச்சி வச்சேன். நானே சொல்றேன். ரமண விலாஸை மூடீரு . இல்லை. உன் பேரு கெட்டு போயிரும். உன் மகன் சேர்க்கை சரியில்லை. கடனு வேற நிறைய இருக்குனு கேள்விபட்டேன். நீ திடமா இருக்கிறப்பவே முடிவு எடுக்கலைன்னா. நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கும். “
ரமணா பேசவில்லை. தலைகவிழ்ந்தபடியே இருந்தார். அவரை மீறி கண்ணீர் பெருகியது. அதை அவர் துடைக்கமுற்படவில்லை. தலைகவிழ்ந்தபடியே இருந்தார். பெருமூச்சு வாங்குவது போல மார்பு விம்மியது..
பிறகு மெதுவான குரலில் சொன்னார்
“நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்“.
மொய்தீன் அதற்கு மேலும் ஏதோ சொல்ல விரும்பியவரை போல ரமணாவை பார்த்துக் கொண்டேயிருந்தார். பிறகு எதையும் பேசாமல் கிளம்பி போய்விட்டார்
ஆனால் மறுநாள் ரமணவிலாஸ் மூடப்பட்டது. அதன் பிறகு வீட்டில் ரமணாவிற்கும் அவரது பிள்ளைகளுக்கும் இடையே பெரிய சண்டை நடந்து சொத்தை பிரித்துக் கொடுத்துவிட்டார் எனப் பேசிக் கொண்டார்கள். ரமண விலாஸை பெயரை மாற்றி அவரது சின்னமகன் சபரி புதிதாக ஹோட்டல் துவங்கியிருந்தான். அந்தப் பெயர்பலகையில் பழைய ரமணவிலாஸ் எனக் குறிப்பிட்டிருந்தான். ஆனால் பழைய வாடிக்கையாளர்கள் வரவில்லை.
கணேசய்யர் எங்கே போனார் என ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால் மொய்தீன் அதன்பிறகு ஒரு டம்ளர் காபி கூட எங்கேயும் குடிக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறி போகவுமில்லை. அவரும் வீட்டோடு முடங்கிப் போனார்.
ரமணா இறந்த நாளில் மயானம் வரை மொய்தீன் ஒரு நிழலைப் போலக் கூடவே வந்தார். மயானத்தை விட்டு திரும்பி வரும் போது வாழைமண்டி ராமசாமியிடம் தழுதழுத்த குரலில் சொன்னார்
“பெத்ததாயி கூட இப்படி எனக்குத் தினம் காபி போட்டு குடுத்ததில்லை. பாவி அவனும் போயிட்டான். இந்த உலகத்தில நல்லவங்க எல்லோரும் போய்கிட்டே இருக்காங்க, அந்த மனுசங்களோடு நன்றி விசுவாசமும் உலகத்தை விட்டுப் போய்கிட்டு இருக்கு“.
பாதிபேச்சில் அவரது தொண்டை அடைத்துக் கொண்டது. அவர் புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொண்டார். அதன்பிறகு மொய்தீனை வெளியே யாரும் பார்க்கவேயில்லை.
இப்போதும் ஊரில் வயதானவர்கள் ஒன்றுகூடும் போதெல்லாம் ரமணவிலாஸ் காபி பற்றிப் பேசிக் கொண்டுதானிருக்கிறார்கள். காபியைப் பற்றிப் பேசும் போது கூடவே மொய்தீனை பற்றியும் பேசிக் கொண்டுதானிருக்கிறார்கள்.
பேருந்து நிலையத்தின் புழுதியோடு இந்த நினைவுகளும் சுற்றிக் கொண்டுதானிருக்கிறது.
•••
24.10.2017