கல்லூரி இறுதிநாள் விழா ​

​பள்ளியில் முடித்த பால்ய பருவமதை
கடந்து முடிந்த களிப்பின் விளிம்பதை
கல்லூரி​ வாயிலில் பாதம் பதிந்ததும்
விரிந்து பரந்திடும் பரவசம் பெருகிடும் !

இலட்சிய நோக்குடன் இளைஞர் கூட்டமிது
இலக்கை அடைய விரும்பும் வீரப்படையிது !
இன்பமாய் இணைந்த முதல்நாள் அன்று
இதயம் கனக்கப் பிரியும் இறுதிநாளின்று !

சமதர்ம உணர்வால் சாதிமதம் அறியோம்
சலனமிலா மனதால் நட்புடன் பழகினோம் !
கனவுகள் மெய்ப்பட கண்ணியம் காத்தோம்
எண்ணம் நிறைவேற எழுச்சியுடன் கற்றோம் !

அறிவை ஆற்றலை கற்பிக்கும் ஆசிரியர்கள்
சாதிக்க வருவோர்க்கு போதிக்க வந்தவர்கள் !
வாழ வழிகாட்டும் பேரன்பு பேராசிரியர்கள்
மறவோம் உங்களை மண்ணில் உள்ளவரை !

கலகலப்பு நிறைந்த கல்லூரி வாழ்க்கை
சலசலப்பு இருக்கும் கைகலப்பு இல்லாது !
பாசம் பரிமாற்றம் பகைமை கழுவேற்றம்
பசுமை நினைவுகள் நிலையாய் நெஞ்சில் !

மனதில் திட்டங்கள் மலையளவு குவியலாக
நிறைவேறும் நிச்சயம் விருப்பம் விரைவாக !
திருப்பங்கள் நிகழும் நிலையும் உயர்ந்திடும்
உற்சாகம் ஊற்றெடுத்து உள்ளமும் நிறையும் !

விட்டுத்தான் செல்கிறோம் பாதத்தின் பதிவுகளை
விலகித்தான் சென்றாலும் சுவடுகள் உள்ளத்தில் !
எனதருமை நட்புகளே எதிர்காலத்தில் சந்திப்போம்
தோற்றம் மாறினாலும் ஏற்றம் பெற்றிருப்போம் !

விடைபெறும் நண்பர்களே விண்ணளவு புகழுடன்
குறைவிலா நிறைவோடு நூறாண்டு வாழ்ந்திடுக !



பழனி குமார்

( இலங்கையில் உள்ள நண்பர் ஒருவர் கல்லூரி ஆண்டு விழா இறுதிநாளன்று வாசிக்க கவிதை கேட்டார் நேற்று . அதற்க்காக நான் எழுதிய கவிதை இது . அவர் அனுமதியுடன் இங்கே பதிவு செய்கிறேன் )

எழுதியவர் : பழனி குமார் (12-Dec-17, 7:26 am)
பார்வை : 181

மேலே