என்னைப் பற்றி-----ராமகிருஷ்ணன்S
விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி. புத்தகங்கள் படிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவர். அண்ணன் டாக்டர் வெங்கடாசலம், அடுத்தது நான், அதன் பின்னே தங்கைகள் கமலா, கோதை, உஷா, கடைசி தம்பி பாலு.
தாத்தா வீட்டின் பெயர் பெரியார் இல்லம். சாத்துரில் உள்ளது. திராவிட இயக்கத்தில் ஆழமான நம்பிக்கை கொண்ட குடும்பம். அடிப்படையில் விவசாயக் குடும்பம் என்பதால் வயலும் கரிசல்காடும், கிணற்றடி நிலங்களும் எங்களுக்கு இருந்தன. சூலக்கரை, சத்திரப்பட்டி, மல்லாங்கிணர் என்று பழைய ராமநாதபுர மாவட்டத்தின் சின்னஞ்சிறு கிராமங்களில் கழிந்தது என் இளமைப்பருவம்.
இன்னொரு பக்கம் அம்மா வழித் தாத்தா தீவிரமான சைவ சமயப் பற்றாளர். தமிழ் அறிஞர். அவரது நூலகத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன் துவங்கி திருவாசகம் வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் நுற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. அவரது ஊர் கோவில்பட்டி. பூர்வீகம் திருநெல்வேலி. தினமும் அதிகாலையில் பச்சைத் தண்ணீரில் குளித்து திருநீறு அணிந்து தேவாரம் பாடி அவரது காலைப்பொழுது துவங்கும். அதனால் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்பம் என் வீட்டின் அன்றாடப் பிரச்சனையாக இருந்தது.
இரண்டு எதிர்முனைகளுக்கு இடையில் கழிந்தது எனது பால்யம். ஆனால் இரண்டு வீட்டிலும் தமிழ் இலக்கியங்கள், மற்றும் சமூகச் சிந்தனைகள் குறித்த தீவிர ஈடுபாடும் அக்கறையும் இருந்ததால் படிப்பதற்கும், அதைப்பற்றி விவாதிப்பதற்கும் அதிக முக்கியத்துவம் தந்தார்கள்.
கல்லுரி நாட்களில் எழுதத் துவங்கினேன். எழுதிய முதல்கதை கபாடபுரம். அது கையெழுத்து பிரதியாக நண்பர்களால் வாசிக்கபட்டு தொலைந்து போனது. வெளியான முதல்கதை பழைய தண்டவாளம் கணையாழியில் வெளியானது.
ஆங்கில இலக்கியம் கற்று அதில் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொண்டேன். ஆனால் ஊர்சுற்றும் மனது படிப்பைத் தூக்கி எறிய வைத்தது. மனம் போன போக்கில் சுற்றித் திரியும் பழக்கம் பதினெட்டு வயதில் துவங்கியது. இந்தியா முழுவதும் பலமுறை சுற்றிவந்திருக்கிறேன். இந்தியாவின் அத்தனை முக்கிய நுலகங்களுக்கும் சென்று படித்திருக்கிறேன்.
நெருக்கமான நண்பரான கோணங்கியோடு சேர்ந்து இலக்கியவாதிகளை தேடித்தேடி சந்திப்பதும், ஊர்சுற்றுவதுமாக பதினைந்து வருடங்கள் அலைந்து திரிந்தேன். என்னை எழுத்தாளனாக உருவாக்கியதில் கோணங்கியின் வீட்டிற்கு முக்கியப் பங்கிருக்கிறது.
சென்னையில் அறையில்லாமலும் கையில் காசில்லாமலும் பத்தாண்டுகளுக்கு மேலாக திரிந்த அவமானங்களும் வலியும் இன்று எழுத்தின் அடிநாதமாக ஒடிக் கொண்டிருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியும், வைக்கம் முகமது பஷீரும், போர்ஹேயும் மார்க்வெஸ்சும் பிடித்த எழுத்தாளர்கள். தமிழில் ஆண்டாள், பாரதியார். புதுமைபித்தன் கு.அழகிரிசாமி மற்றும் வண்ணநிலவன்.
காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். மனைவி சந்திர பிரபா. தேர்ந்த வாசகி. வீட்டின் சுமை என் மீது விழாமல் தாங்கிக் கொண்டிருப்பவர். குழந்தைகள் ஹரி பிரசாத் , ஆகாஷ்
ஆனந்த விகடனில் நான் எழுதிய துணையெழுத்து தொடர் பரவலான வாசக கவனத்திற்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரி கேள்விக்குறி என்று வெளியான பத்திகள் தமிழில் பரந்த வாசக தளத்தினை உருவாக்கியிருக்கிறது.
மகாபாரதம் மீது கொண்ட அதீத விருப்பத்தின் காரணமாக நான்கு ஆண்டுகள் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள அஸ்தினாபுரம், துவாரகை. குருஷேத்திரம் உள்ளிட்ட பலமுக்கிய நகரங்கள், இடங்கள் ஒவ்வொன்றாக தேடித்திரிந்து பார்த்திருக்கிறேன். பல்வேறுபட்ட மகாபாரத பிரதிகளை வாசித்து ஆய்வு செய்திருக்கிறேன் அத்தோடு மகாபாரதத்தின் உபகதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு நான் எழுதிய உபபாண்டவம் நாவல் தீவிர இலக்கியவாசிப்பிற்கு உள்ளானதோடு மலையாளம், வங்காளம் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
எனது சிறுகதைகள் ஆங்கிலம் ஜெர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. என்னுடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூன்று தமிழ் ஆய்வாளர்கள் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பதிமூன்று பேர் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஒன்பது கல்லூரிகளிலும் இரண்டு பல்கலைகழங்களிலும் என்னுடைய படைப்புகள் பாடமாக வைக்கபட்டிருக்கின்றன.
செல்லும் இடமெல்லாம் எனக்கு நண்பர்களுண்டு, பேச்சும் எழுத்தும் ஊர்சுற்றலுமே என்னை இயக்கி கொண்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் திரைக்கதை வசனம் எழுதி வருகிறேன். அட்சரம் என்ற இலக்கிய காலாண்டு இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.
இலக்கியம், சினிமா, பத்திரிக்கை, இணையம், நாடகம், ஆய்வு, பயணம், என்று பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறேன்.
***