இளைய தலைமுறை மூலம் வரலாறுகளை மீட்டெடுக்கலாம் தமிழிசை சவுந்தரராஜன்
இளைய தலைமுறைக்கு வேலுநாச்சியார் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லிக்கொடுப்பதன் மூலம், அவர்களின் உடல் மொழியின் வாயிலாக வரலாற்றுப் பெருமைகளை உள்வாங்கி நடிப்பதன் மூலம் நமது வரலாறுகளை மீட்டெடுக்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை ஹாரிங்டன் சாலையில் பொன்னேரி, வேலம்மாள் போதி கேம்பஸ் மாணவர்களின் உணர்வுபூர்வமான நடிப்பினால் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் கடந்த இரண்டு நாட்களாக அரங்கேற்றப்பட்டது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பாஜக துணைத் தலவர் வானதி சீனிவாசன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், சவுமியா அன்புமணி, நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
இந்நாடகத்தின் மூலம் திரட்டப்பட்ட ரூ.17 லட்சம் நிதி அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, ''வேலு நாச்சியார் நாடகத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது நிஜமான வேலு நாச்சியார் நம் கண்முன்னே வந்தது போன்ற எண்ணம்தான் வந்தது. அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட நமது வரலாறுகளை சொல்லிக்கொடுப்பதன் மூலமாகவும், அவர்களின் உடல் மொழியின் வாயிலாக வரலாற்றுப் பெருமைகளை உள்வாங்கி நடிப்பதன் மூலமாக நமது வரலாறுகளை மீட்டெடுக்கலாம். நமது தமிழ் சமூகத்தில் வாழ்ந்த வீரப் பெண்மணி வேலு நாச்சியாரின் திறமையையும், வீரத்தையும், துணிச்சலையும் இந்த நவீன காலத்திற்க்கு எளிதாக கண்முன்னே நிகழ்த்திக் காட்டிய மாணவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாடக நிகழ்ச்சி மூலமாக கிடைக்கும் நிதியை அடையார் புற்று நோய் மையத்துக்கு வழங்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றிகள்'' என்றார்.