நகைச்சுவைக் கதாபாத்திரங்களை பற்றி -----------‘ஜராசுந்தரேசன்’, ‘சுந்தரேசன் சார்’, ‘பாக்கியம் ராமசாமி’, ‘ஜரா’

‘ஜ.ரா.சுந்தரேசன்’, ‘சுந்தரேசன் சார்’, ‘பாக்கியம் ராமசாமி’, ‘ஜ.ரா’ இப்படி எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். எல்லாம் அவரே. ரொம்ப இயல்பான நகைச்சுவை எழுத்துகள் என்றால் உடனே நினைவுக்கு வருபவரும் அவர்தான். ‘பாப்பய்’, ‘லாரல் அன்ட் ஹார்டி’, அதன் பிறகு நம் நாட்டிலேயே ‘துப்பறியும் சாம்பு’ போன்ற நகைச்சுவைக் கதாபாத்திரங்களை நாம் பார்த்தும், படித்தும் இருக்கிறோம். அந்தப் பாத்திரங்களுக்கு இணையாக நமது பாக்கியம் ராமசாமி சிருஷ்டித்துக் கொடுத்தது ‘அப்புசாமி -சீதாபாட்டி’ கதாபாத்திரங்கள்.

அந்தத் தாத்தா - பாட்டிக்கு இடையே நகைச்சுவை சும்மா சரமாரியாகக் கொட்டும். எழுத்தில் மட்டுமல்ல, பாக்கியம் ராமசாமியின் பேச்சிலும் அதே இயல்பான நகைச்சுவை தெறிக்கும். சில சமயம் அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசும்போது, சிரித்துச் சிரித்து முகவாய் எலும்புகள் எல்லாம் நோகவே ஆரம்பித்துவிடும். அவருடைய மேடைப் பேச்சைக் கேட்டதில்லையே? அரங்கம் முழுவதும் இடைவிடாத சிரிப்பொலிதான். நகைச்சுவை எழுத்தாளர்களின் இல்லத்தில் இருப்பவர்களும் நகைச்சுவை உணர்வோடு இருப்பது அரிது. ஆனால், அவருடைய துணைவியாரும், பிள்ளைகளும் ஹாஸ்ய உணர்வில் நன்றாகவே பங்கேற்றிருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

வெறுமனே அவரது எழுத்துத் திறமைக்கு மட்டும் நான் ரசிகனல்ல. மற்றவர்களுடைய திறமையைப் பெரிதாகப் பேசி, மனமுவந்து பாராட்டுவது அவருடைய தனித்தன்மை. என்னையும் அப்படிப் பலமுறை பாராட்டியிருக்கிறார். ஒரு கதையில் கவர்ச்சிகரமான பெண் கதாபாத்திரம் வருகிறது என்றால், அந்தக் கதைக்கான ஓவியத்தை வரையும் பொறுப்பை வலுக்கட்டாயமாக என்னிடம் ஒப்படைத்துவிடுவார். “அதில்தான் நம்ம ஜெயராஜ் ஸ்பெஷலிஸ்டாச்சே!” என்பார். இப்படி ஒவ்வொரு கதை, கதாபாத்திரத்துக்குமான ஓவியர்களைத் தேர்வு செய்வதிலேயே அவருக்குள் ஒரு தேர்ந்த ஓவியர் இருக்கிறார் என்பதைக் காட்டிவிடுவார்.

பொதுவாக, ஒரு கதைக்கு ஓவியம் வரைய வேண்டும் என்றால், அந்தக் கதையை முழுமையாகப் படிக்க வேண்டும். பெரும்பாலான கதாசிரியர்கள் தங்கள் கதையை ஓவியர் தன் வீட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அப்போது மின்னஞ்சல் வசதியும் கிடையாது. அலுவலகத்திலேயே வாசித்து, ஒரு காட்சியைத் தேர்ந்தெடுத்துப் படம் வரைந்து தர வேண்டும். படம் வரைந்த பிறகு சிலர், ‘வேறு சிச்சுவேஷனைத் தேர்ந்தெடுங்கள், இது நல்லாயில்லை’ என்பார்கள். இதிலும் ஜ.ரா. வித்தியாசமானவர். குமுதத் தில் துணை ஆசிரியராக அவர் இருந்தபோது, “ஏன் கதையை ‘கஷ்டப்பட்டு’ படிக்கிறீங்க? கதையில் முக்கியமான காட்சியை மட்டும் சொல்கிறேன். வரைந்துகொடுங்கள்” என்பார். கதை ஒன்று என்றாலும், ஓவியர்களைப் பொறுத்து அவர்களின் திறமைக்கேற்ப வெவ்வேறு சிச்சுவேஷன்களைச் சொல்லும் சாமர்த்தியசாலி. ஒரு எடிட்டருக்குரிய திறமை அவரிடம் அபரிமிதமாக உண்டு. ஆனால், அதைப் பெரிய விஷயமாகக் கருதாமல், போகிறபோக்கில் சொல்லிவிடுவார்.

குமுதத்தில் துணை ஆசிரியர்கள் ரா.கி.ரங்கராஜன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் போன்றோர்கள் ஒன்றாக வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். இவரது கருத்துக்கு மாற்றாக மற்ற இருவரும் ஏதாவது சொன்னால், இவர் எதிர்வாதம் செய்ய மாட்டார். “ஓ அப்படியும் இருக்கலாமோ” என்று அழகாக விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார். ஒரு ஆங்கிலச் செய்தியை மொழிபெயர்த்துப் போட்டிருப்பார் ஜ.ரா. அதைப் பார்த்துவிட்டு ரா.கி.ரங்கராஜன், “இந்த வரியைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் சொன்னேனே” என்று கூறினால், ‘அதை எதற்காகப் பயன்படுத்தினேன் என்றால்…’ என்று விளக்கம் சொல்ல முயற்சிக்க மாட்டார். “அதற்கென்ன எடுத்திட்டாப் போச்சு” என்பார். “பேசாம, நான் சொல்லற மாதிரி போடுங்க” என்று கொஞ்சம் எரிச்சலுடன் சொன்னாலும்கூட, “சரி, பேசாம போட்டுக்கிடுறேன்” என்பார் புன்னகையோடு. அவ்வளவு பொறுமைசாலி!

அப்புசாமி-சீதாபாட்டி பாத்திரங்களை அவர் உருவாக்கியபோது அந்த தாத்தா - பாட்டிக்கு உருவம் கொடுக்கும் பொறுப்பு என்னுடையதாகியது. என் பாக்கியம் அது.

எனக்கான அறிமுகமே அந்த கதாபாத்திரங்களாகிவிட்டது. ‘லெட்டர் ஹெட்’ என்று சொல்வார்களே, அப்படி என் கடிதங்களின் தலைப்பில் இன்றும் சீதாபாட்டியும், அப்புசாமி யும் இருக்கிறார்கள். இந்த தாத்தா - பாட்டியை ஆயிரக்கணக்கில் வரைந்திருக்கிறேன்.

இதனால், நானும் என் மனைவியும் ஏதாவது ஒரு பத்திரிகையாளர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றால், அங்கே “இதோ வந்துவிட்டார்கள் அப்புசாமியும் சீதாபாட்டியும்” என்று சொல்லிப் புன்னகையுடன வரவேற்பார்கள். தான் வரைந்த ஓவியமாகவே ஒரு ஓவியர் கருதப் படுவது எவ்வளவு பெரிய பாக்கியம்? இதற்காகவே நாங்கள் ஜ.ரா.சுந்தரேசனுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர் எழுத்தில் மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தோர் அனை வரது இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

- ஜெயராஜ், ஓவியர்

எழுதியவர் : (13-Dec-17, 5:14 am)
பார்வை : 165

மேலே