ஆடுவதும், ஆட்டுவிப்பதும் அவனே

மேகங்கள் அழைத்திட வானம் பார்த்தேன்..
நட்சத்திரங்கள் அங்குமிங்கும் ஒட்டங்களிட மேகங்கள் எட்டிப்பிடித்தன..

மேகங்களே! நில்லுங்கள்.
நட்சத்திரங்களைப் பிடிக்காதீர்கள்.
சுதந்திரமாய் அவை சுற்றித் திரியட்டும் என்றேன் கண் கெட்ட மூடனாய்...

ஹெய் மித்திரா! நட்சத்திரங்கள் மிக உயரத்தில் இருக்கின்றன.
அவற்றை எட்டிப் பிடிக்கிறோம் என்கிறாயே! உன் கருத்தும் கெட்டுவிட்டதா?
என்றன மேகங்கள்.

புத்தி தெளிந்த நான்,
மேகங்களே! நட்சத்திரங்களை மறையாதீர்கள்.
நான் அவற்றைக் காண வேண்டும் என்றேன்.

ஓஓ! மித்திரா! உன் மூளை மழுங்கியதா?
மேகங்களாகிய எங்களால் தனித்து இயங்க, நகர இயலுமா?
எங்களை ஒருவன் ஆட்டுவிக்கிறான்.
அவனிடம் முறையிடுவாயாக, என்றன.

ஆட்டுவிப்பவன் யார்?
அவன் யார்? நான் நட்சத்திரங்களைப் பார்க்கக் கூடாதென்று உங்களை நகர்விக்கும் அந்த தீயோன் யார்?
என்றேன் கோபமாக..

ஹாஹா! நன்றி கெட்ட உலகமென்பது சரியாகத்தான் போச்சு!
என்னை சுவாசித்துக் கொண்டே கோபமாக என்னை தீயோன் என்கிறது இவன் பேச்சு!
இவனைச் சொல்லிக் குற்றமில்லை.
அருவமாய் நானிருக்கும் குற்றம்.
இன்னும் எதையெல்லாம் கேட்கப் பார்க்க வேண்டுமோ?
சலித்துக் கொண்டது பெரிய கடவுளாகிய காற்று...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Dec-17, 10:48 pm)
பார்வை : 1433

மேலே