மறுக்கப்பட்ட மாற்றங்கள் பகுதி_1

#மறுக்கப்பட்ட மாற்றங்கள்! (பகுதி_1)


நேற்று நள்ளிரவு கடந்தும் கமலேஷ் செய்த லீலைகளின் விளவோ இல்லை இரண்டு நாட்களாய் தூக்கமில்லாமல் கல்யாண பரபரப்பிலும் புது வாழ்க்கையை பற்றி எதிர்பார்ப்பிலும் தூக்கம் மறந்தப் போனதாலோ என்னவோ மகாவிற்கு படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடல் வலியில் புரண்டுக் கொண்டிருந்தாள்!


லேசாக கண் விழித்து பார்க்க முயல வெளிச்சம் கண்ணில் பட்டுக் கூச தோற்றுப் போனாள்!

இதற்குமேலும் படுத்துக் கிடப்பதில் அர்த்தமில்லையென்று உணர்ந்தவள் எழுந்து அமர்ந்தவள் அப்போதுதான் தான் அரைகுறை ஆடையோடு படுத்திருப்பதை கவனித்தாள்!

முதல் ஸ்பரிசம்...

முதல் கூடல்...

'எத்தனை மென்மையாய் நடந்துக் கொண்டான். தனக்கானவள் இவளென்று எந்த அதிகப்படியான அத்துமீறல்களும் இல்லாமல் பூவைப் போலலல்லவா என்னை கையாண்டான்! '

வீட்டில் மகாவும் கமலேசும் மட்டும்தான் இருக்கிறார்களென்று உறுதியாய் தெரிந்திருந்தும் தன் இரு கைகளை மார்புக்கு குறுக்கே வைத்து மறைத்துக் கொண்டாள் மகா!

' ஆடையைக் கூட சரி செய்ய தோணாத அளவிற்கு என்னை அவன் அன்பினால் அடிமையாக்கி விட்டானே...

ஒரே இரவில் ஒரு பெண்ணால் மட்டும் எப்படி ஓர் ஆணிடம் முழுதாய் சரணாகதியடைந்து விட முடிகிறது...' தனக்குள்ளே எழுந்த ஆச்சரியம் கலந்த கேள்விகளோடு எழுந்தாள் மகா!

மகா ஒரு பட்டதாரிப் பெண்... புரோக்கர் மூலமாக கமலேஷ் பெண் பார்க்க வந்த போது மகாவின் தந்தை கணேசன் ஒரேடியாய் மறுத்து விட்டார்! காரணம் கமலேஷ்க்கு அப்பா அம்மா ரெண்டு பேருமே இல்லை... அண்ணன் ரவியும் அவன் மனைவி சுமதி மற்றும் மகள் சுமித்ரா மட்டும்தான் கமலேஷ்க்கு உறவுகள்!

"என் மக கூட்டுக் குடும்பத்துலதான் வாழணும்... அப்போதான் கஷ்ட நஷ்டம்னா என்னனு தெரிஞ்சிப்பா... மாப்பிள்ளை தனியா மெட்ராஸ்ல இருக்கறதா சொல்றிங்க அவளுக்கு பேச்சு துணைக்கு கூட ஆளில்லாம தனியா வாழ்ந்தா அது அவ மன நிலையை பாதிக்கும். அதுவும் இல்லாம எந்த உறவும் இல்லாம வாழ்ந்தா அவருக்கு அனுசரித்துப் போற குணம் இல்லாமலே போயிடும்...


மாமனாருக்கு காப்பி போட்டு கொடுத்து மாமியாருக்கு கை கால் பிடிச்சி விட்டு... நாத்தனார்களுக்கு சீர் செனத்தி... வந்தாப் போனா அவங்களை உபசரிச்சி அனுப்பற பண்பெல்லாம் அடியோட இல்லாம போயிடும்யா..."கராராய் சொன்னார் கணேசன்!

"யோவ் கணேசா... என்னையா நீ பிழைக்கத் தெரியாத ஆளாயிருக்க... மாமியார் மாமனார் இல்லாத பையனாத்தான்யா எல்லோரும் தேடுறாங்க இப்போ... " தரகர் தன் பங்குக்கு அவர் பக்க நியாயத்தைக் கூற...


" யோவ் தரகு... என் பொண்ணு வசதியா வாழ்ந்தா மட்டும் போதாதுய்யா... அவ நல்ல பண்போடவும் வாழணும்யா...அம்மா பாசம்னா என்னனே தெரியாத பொண்ணுய்யா... மாமியார் மூலமாகத்தான் அதை அவ உணரனும்னு நான் நினைக்கிறேன்!

உனக்கு கமிசன் வரணும்னு அதை இதை சொல்லாதே... "
கணேசன் சொல்ல கமலேஷ் முதன் முறையாக வாயைத் திறந்தான்!

" சார் நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்க பொண்ணுக்கு ஒரு கூட்டுக் குடும்பத்தை உருவாக்கிக் கொடுக்க நினைக்கிறீங்க அதை நான் தப்புனு சொல்லல... ஆனா, குடும்பமே இல்லாத என்னைக் கட்டிக்கிட்டா அவங்க ஒரு குடும்பத்தையே புதுசா உருவாக்குறாங்கனு ஏன் யோசிக்க மாட்டேங்குறிங்க... அப்பா அம்மா இல்லாம போனது என் தப்பா சார்... " கமலேசின் இந்த பண்பட்ட பேச்சு கணேசனின் மனதை லேசாய் கரைக்க தன் முடிவை இரண்டு நாட்களில் சொல்வதாய் அனுப்பி வைத்தவர் பலரின் கருத்துக்களைக் கேட்டும் கமலேசின் குணம் பற்றி விசாரித்ததில் மனம் நிறைந்ததாலும் திருமணத்திற்கு தலையாட்டினார்!

கமலேஷ்_மகா திருமணம் நேற்று முடிந்தக் கையோடு சென்னையில் கமலேஷ் கட்டி வைத்திருந்த வீட்டிற்கு அனுப்பப் பட்டாள்!

கமலேசின் அண்ணன் குடும்பத்தை தன்னோடு இரண்டு நாட்கள் வந்து தங்கும்படி கமலேஷ் கேட்டும் மகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்று விடாப்பிடியாய் மறுத்துவிட்டாள் அவன் அண்ணி கோகிலா!

**************, ***********************************************

மகா எழுந்து கடிகாரத்தைப் பார்க்க மணி ஒன்பதைக் காட்டியது!

"2 அய்யோ எவ்வளவு நேரம் தூங்கியிருக்கிறோம்... அவர் எப்போ எழுந்தார்னு தெரியலையே... என்ன நினைத்திருப்பார் என்னைப் பற்றி??? " கலைந்திருந்த ஆடைகளை சரி செய்துக் கொண்டிருந்த நேரம் மகாவின் செல்போன் சிணுங்கியது!

அவள் தந்தை கணேசன்தான்!

" ஹலோ அப்பா... "

" மகா... எப்படிமாயிருக்கா? "


" நல்லாயிருக்கேன்பா... நீங்க எப்படிப்பா இருக்கிங்க??? குமுதா காலேஜுக்கு கிளம்பிட்டாளா??? "


" கிளம்பிட்டாமா... நைட் முழுக்க அவ தூங்காம அழுதுகிட்டேயிருந்தா மகா "

" இருக்காதாப்பா அவளுக்கு அம்மாவா.. அக்காவா... தோழியா இருந்தது நான் மட்டும் தானேப்பா... எனக்கும் கஷ்டமாதான்பா இருக்கு... "கண் கலங்கினாள் மகா!


" அழாதே மகாம்மா... எல்லாம் பழகிடும்... மாப்பிள்ளை பக்கத்துல இருந்தா போன் கொடேன்... மறு வீட்டுக்கு அழைக்கணும் மா... "


" நான் இப்போதான்பா எழுந்தேன்... அவர் முன்னேயே எழுந்துட்டார் போல... லிவிங் ரூம்ல இருப்பார் லைன்லயே இருங்கப்பா கொடுக்கிறேன்... " மகா செல்போனை எடுத்துக் கொண்டு இரவு ஒடிந்ததுப் போக மிச்சமிருந்த கை வளையல்கள் கல கலவென சத்தமிட நடந்து சென்றாள்!

" என்னங்க.... "

"............"


"எங்க இருக்கிங்க??? "


".................."


எங்கும் கமலேஷ் இல்லாமல் போகவே மாடியில் இருந்த அறையில் விளக்கு எரிவது தெரிய மாடிப் பாடி ஏறத் தொடங்கினாள்!

அடி வயிற்றில் இனம் புரியாத ஒரு புது வலி அவளை இம்சித்தது!


"அப்பா மாடியில இருக்கார் போல லைன்லயே இருங்கப்பா... "

என்று கூறிக் கொண்டே சென்று மாடிப்படியேறி சென்று அறையின் கதவை திறந்தவள்...



" என்னங்க...... "என்று அலறியபடி கையிலிருந்த செல்போனை நழுவ விட அது தரையில் விழுந்து நொறுங்கியது!

அங்கே கமலேஷ் நாக்கு நான்கு அங்குலங்கள் வெளியே நீட்டியபடி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான்!

(தொடரும்)


_சத்யா ஸ்ரீராம்

எழுதியவர் : சத்யா ஸ்ரீராம் (15-Dec-17, 3:17 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 288

மேலே