கண்ட நாள் முதலாய்-பகுதி-34
.....கண்ட நாள் முதலாய்....
பகுதி : 34
"அக்கா..."என்று கூவியவாறே வாயிலில் வந்திறங்கிய துளசியை நோக்கி ஓடினான் ஆதி...
"டேய்....பார்த்து மெதுவா வாடா..."என்றவாறே தன்னை நோக்கி வந்த ஆதியை அள்ளி அணைத்துக் கொண்டாள் துளசி...
பின்னாலேயே மொத்தக் குடும்பமும் வந்து அவர்களை வரவேற்க,அரவிந்தன் அவர்களின் சுக நலன்களை விசாரித்தவாறே உள்ளே செல்ல,துளசி பிறந்த வீட்டிற்கு வந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காத குறையாக உள்ளே சென்றாள்...
கலைவாணியோடு கதைத்துக் கொண்டும்,ஆதியோடும் சுசியோடும் வம்பு வளர்த்துக் கொண்டும் அவள் சென்றதில் அரவிந்தனை அவள் திரும்பியும் பார்க்கவில்லை...அதற்கு உள்ளூர அவன் நேற்றைய இரவில் வெகு தாமதமாக வந்ததின் கோபம் அணையாமல் இருந்ததும் ஒரு காரணம்...
என்னதான் அவன் தாமதமாக வருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தாலும்,நடு இரவு கடந்தும் அவன் வராதது அவளுக்குள் லேசான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது...அதனால்தான் காலையில் கூட அவனோடு சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை அவள்...
ஆனால் இது எதுவும் தெரியாத அரவிந்தனோ,அவளது பாரா முகத்திற்கான காரணம் புரிபடாது தவித்துக் கொண்டிருந்தான்...அரவிந்தனும் யோகேஸ்வரனும் ஹோலில் அமர்ந்து பொதுப்படையான நிகழ்வுகளை அலசி ஆராய,துளசியோ தன் புகுந்த வீட்டின் சந்தோசங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டிருந்தாள்...
நிமிடத்திற்கொரு முறை அரவிந்தனின் பார்வை துளசியைத் தேடி மீள்வதைக் கண்டு கொண்ட யோகேஸ்வரன்,அத்தோடு தனது கதையினை முடித்துக் கொண்டு அவனைத் துளசியின் அறையினுள் ஓய்வெடுக்குமாறு அழைத்துச் சென்றவர்,பின்னாலேயே துளசியையும் ஒரு வழியாகச் சமாளித்து உள்ளே அனுப்பி வைத்தார்...
அவள் அறையினுள் நுழையவும்,அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன்...கதவினைத் தாளிட்டுக் கொண்டான்...
"இப்போ எதுக்கு கதவைச் சாத்துறீங்க...??"
திருமணமாகி முதன் முதலாக அவனிடம் அவள் உரிமையோடு காட்டும் கோபத்தை உள்ளூர ரசித்துக் கொண்டவன்,வெளியே ஒன்றும் அறியாத சாதுப் பையன்போலே முகத்தை வைத்துக் கொண்டான்...
"சாத்துறத்துக்கு தானே கதவு வைச்சிருக்காங்க துளசி.."
அவன் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன விளக்கத்தில் ஏகத்திற்கும் கடுப்பாகியவள்,கட்டிலில் கிடந்த தலையணையை அவனை நோக்கி வீசினாள்...
அதை மிகவும் லாவகரமாக கைகளில் பிடித்துக் கொண்டவன்,அதுவரை நேரமும் உள்ளே அடக்கி வைத்திருந்த சிரிப்பின் முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டான்
அவனது சிரிப்பைக் கண்டு மேலும் கடுப்பாகியவள்,கிடந்த அத்தனை தலையணைகளாலும் அவனை மாறி மாறித் துவைக்க ஆரம்பித்தாள்...அவளது அடியிலிருந்து தப்புவதற்காய் கட்டிலைச் சுற்றியவாறே ஓடிக் கொண்டிருந்தவன்,
"ஹையோ துளசி....தெரியாம கதவைச் சாத்திட்டேன் அது ஒரு குத்தமா...??.."
"பண்றது எல்லாம் பண்ணிட்டு பேச்சைப் பாரு....நேத்து நைட் ஏன் அவ்வளவு லேட்டா வந்தீங்க...??..."
அவளது கேள்வியில் ஓடுவதை நிறுத்திக் கொண்டவன்,
"அடிப்பாவி....இதுக்குத்தான் இப்படி பூட்டின அறைக்குள்ள வைச்சு சாத்து சாத்துன்னு சாத்துறீயா....??...நான் உன்கிட்ட சொல்லிட்டுத்தானே போனேன் வர லேட்டாகும்னு..."
"ம்ம்....நடு இராத்திரி ஆகும்னு ஒன்னும் சொல்லிட்டுப் போகலையே...உங்களுக்காக நேத்து நைட் எவ்வளவு நேரமா காத்திட்டு இருந்தன் தெரியுமா??சாப்பிடக் கூட இல்லை..."
இது எதையுமே அரவிந்தன் அறிந்திருக்கவில்லை...அவன் வரும் போது அவள் சோபாவிலேயே உறங்கியிருந்தது மட்டும்தான் அவனுக்குத் தெரியும்....ஆனால் அது அவனுக்கான அவளின் காத்திருப்பென்று அவன் நினைத்திருக்கவில்லை...
அவள் புத்தகத்தோடே உறங்கிப் போயிருந்ததால்,வாசித்தவாறே தூங்கிவிட்டாளென்று தான் எண்ணியிருந்தான்...ஆனால் இப்போது அவள் வாயாலேயே அதற்கான காரணத்தை அறிந்து கொண்டவனுக்கோ...வானமளவு பூக்கள் தலையில் வந்து விழுவது போன்று இருந்தது...ஆனாலும் வெளியில்,
"நீ எதுக்கு எனக்காக காத்திட்டிருந்த துளசி,நான்தான் உன்னை சாப்பிட்டுத் தூங்க சொன்னேனே...??..."
"ஓஓ...அப்போ உங்களுக்காக காத்திட்டிருந்தது என்னோட தப்பு...அப்படித்தானே??இனிமேல் உங்களுக்காக நான் காத்திட்டிருக்கல மிஸ்டர் அரவிந்தன்...போதுமா?.."
"ஹேய் நான் அப்படிச் சொல்ல வரல..."என்று அவன் அவளைச் சமாதானப்படுத்த முயலும் போதே அறையை விட்டு வெளியேறியிருந்தாள் துளசி...
அந்த சண்டைக்கான காரணம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும்,அவளது அந்தச் செல்லக் கோபத்தை உள்ளூர மிகவும் விரும்பினான் அரவிந்தன்...
"டேய் அரவிந்தா...உனக்கு மட்டும் எப்படிடா புதுப் புதுப் டிசைனில எல்லாம் சண்டை கிளம்புது..."என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டவன்,இப்போதைக்கு அவளைத் தேடிச் செல்ல முடியாதென்பதால்...யோகேஸ்வரனே சரணமென்று மீண்டும் அவரிடமே அடைக்கலமாகிக் கொண்டான்...
அரவிந்தனும் கைவிட்டுச் சென்றதில்,தனியாக அமர்ந்து டிவியில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தவர்...அவன் மறுபடியும் வந்து சேர்ந்ததில் மிகவும் குஷியாகிப் போனார் யோகேஸ்வரன்...விட்ட இடத்திலிருந்து மீண்டும் தன் பேச்சாற்றலைத் தொடர்ந்தவர்...அரவிந்தனும் நன்றாகத் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்கவும் அவரும் தன் பேச்சுத் திறமையினை அவனுக்கு நிரூபித்துக் கொண்டிருந்தார்...
ஆனால் அவருக்குத் தெரியவில்லை,வேறு வழியில்லாமல்தான் அவரது பேச்சுக்களிற்கு அவன் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறான் என்பது...
அறையை விட்டு கோபமாக வெளியே வந்த துளசியோ,அவன் மேலிருந்த கோபம் அத்தனையையும் காய்கறிகளில் காட்டி,அவற்றை எல்லாம் நறுக்கித் தள்ளி தன் கோபத்தை சற்றுக் குறைத்துக் கொண்டாள்...
கலைவாணி வழமையிலேயே விரைவாக சமையலை முடித்துக் கொள்பவர்,அன்று துளசியும் உதவிக்கு இருந்ததால் மிக விரைவாகவே மதிய உணவினைத் தயார் செய்து முடித்திருந்தார்....காலை உணவினை அவர்கள் இருவரும் அங்கேயே முடித்துவிட்டு வந்திருந்ததால்...மதிய உணவினை தன் கைப்பக்குவத்தில் அமர்க்களப்படுத்தியிருந்தார்....
கலைவாணி மேசையில் உணவு வகைகளை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருக்க,துளசி அவர்களிருவரையும் சாப்பிட அழைப்பதற்காய் வெளியே வந்தாள்...வந்தவள் அரவிந்தனின் நிலையைக் கண்டு அதுவரை நேரமும் இருந்த கோபம் பறந்தோட,நன்றாகவே சிரித்துக் கொண்டாள்...
அவன் யோகேஸ்வரனிடம் நன்றாக மாட்டிக் கொண்டு முழிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு,அவர்களை உணவருந்துவதற்காய் அழைக்க வந்ததே மறந்து போனது...
யோகேஸ்வரன் சொன்னதெற்கெல்லாம் தலைவிதியே என்று ஆமா போட்டுக் கொண்டிருந்தவன்,எதேட்சையாக திரும்பிப் பார்க்க...சமையலறை வாசலில் நின்று கொண்டு சிரிப்பை அடக்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருந்த துளசியைக் கண்டு கொண்டான்...
அவளும் அந்த நேரத்தில் அவனையே பார்க்க...அவனது கண்களில் கோபமும்,அவளது கண்களில் புன்னகையுமென்று..அங்கே பார்வை யுத்தமொன்று சத்தமின்றியே உருவானது...
"என்ன இப்படியொரு நிலைமையில மாட்டி விட்டிட்டு உனக்கு சிரிப்பு கேட்குதா..??இரு இரு உன்னை இரவு கவனிச்சுக்குறேன்..."என்று அவனது விழிகள் பொருமிக் கொள்ள...அதற்குப் பதிலாய் அவளது விழிகளும் இதழ்களும் நக்கலாக அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டன...
அதே சிரிப்போடே அவர்களிருவரின் அருகிலும் சென்றவள்,ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தவாறே...
"அப்பா...சாப்பாடு ரெடி...வாங்க சாப்பிடலாம்..."
"வாங்க மாப்பிள்ளை....இன்னைக்கு நாம இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்..."
"அது சரி....உங்க கூட சேர்ந்து சாப்பிடத்தான் உங்க மகளை கல்யாணம் பண்ணியிருக்கன் பாருங்க...."என்று மனதில் மட்டுமே தன் ஆசை மனைவியோடு அமர்ந்து உண்ண முடியாத தனது நிலைமையை எண்ணிப் பொருமிக் கொண்டான்....அதை வெளியில் வேறு சொல்லி அதற்கும் அவளிடம் பதில் முறைப்பினைப் பெற்றுக் கொள்ள அவனென்ன முட்டாளா என்ன....??அதனால் சமத்துப் பிள்ளையாய் இதுவரை நேரமும் செய்து கொண்டிருந்த வேலையை செவ்வனே செய்தான் அவன்...
"சரிங்க மாமா...."
அதைக் கண்டு மேலும் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவள்,அவர்களிருவரையும் சாப்பிட அழைத்துச் சென்றாள்....
கலைவாணியின் சமையல் வாசத்தில் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஒரு கைபார்த்தவன்,அனைத்து வகை உணவுகளையும் வயிறார உண்டு முடித்தான்...சாப்பிட்டு முடித்து எழுந்தவன்,கலைவாணியைப் பாராட்டவும் மறக்கவில்லை...
உணவருந்தியதுமே உறங்கப்போவதாகக் கூறி யோகேஸ்வரனிடமிருந்து தப்பி அறைக்குள்ளே புகுந்து கொண்டவன்,துளசியின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினான்...ஆனால் அவளோ இரவு நேரம் வரையும் அவன் கண்களில் அகப்படாமல் அவனோடு கண்ணாம்மூச்சி ஆடிக் கொண்டிருந்தாள்...
"இரவு தூங்குறதுக்கு அறைக்குள்ள வந்துதானே ஆகனும் மேடம்...அப்ப பார்த்துக்கிறேன்..."என்று முணுமுணுத்துக் கொண்டவன்,சாப்பிட்ட மயக்கத்தில் அப்படியே உறங்கியும் போனான்...ஆனால் அவன் உறங்கியதுமே அறைக்குள் வந்து அவன் தூங்கும் அழகை ரசித்துவிட்டுச் சென்ற துளசியை அவன் அறிந்திருக்கவில்லை...
அவர்களிருவரின் காதல் விளையாட்டினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காலமும் தன் வேலையைத் தொடர,இராத்திரிப் பொழுதும் இனிதே மலர்ந்தது....
தொடரும்....