வியன்கானல் வெண்தேர் துலங்கு நீர் - முத்தொள்ளாயிரம் 25

குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை பெறுகென்றாள் அன்னை – அதுபோய்
விளைந்தவா இன்று வியன்கானல் வெண்தேர்த்
துலங்குநீர் மாமருட்டி அற்று. 25 முத்தொள்ளாயிரம், சோழன் 3
பொருள்:

மழலைப் பருவத்தில் சோழ மன்னனைத் திரு மணம் புரிக என்றாள் தாய்.

ஆனால், அது நீங்கி இன்று அகன்ற கடற்கரைச் சோலைக் கானல் நீரென தெளிந்த நீர் போன்று பெரிதும் மயக்கும் தன்மையாக விளைந்தது.

சிறுவயதில் பெற்றோர் குழந்தைக்கு உணவூட்ட விளையாட்டாகக் கூறியதை வளர்ந்து பருவ மங்கையான பின்பும் தலைவி நம்பி வந்தாள். வளர்ந்த பின் அவள் நம்பிக்கை கானல் நீர் ஆனது.

இங்கு ‘வியன்கானல் வெண்தேர் துலங்கு நீர்’ என்பது கடற்கரையில் துலங்கித் தெரியும் கானல் நீரைக் குறிக்கும்.

அவ்வாறாக அக்காதல் நோய் என்னை மருட்டி வருத்துகின்றது என்று இப்பாடல் தலைவி கூற்றுரைக்கின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Dec-17, 12:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே