நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-06

....நெஞ்சோடு கலந்திடு....

அத்தியாயம் : 06

அன்று போனவன்தான்,ஆறு மாதங்கள் கழித்து விடுமுறையின் போதுதான் ஊருக்கு மீண்டும் வந்திருந்தான்...வந்தவன் என்னைப் பார்க்காமல் எப்படி இருப்பான்??ஆனால் இந்த முறை அவன் என்னோடு கண்ணாம்மூச்சி விளையாடவில்லை...நேரடியாகவே என்னிடம் வந்து பேசினான்....

மாலை வகுப்புக்கள் முடிந்து பேரூந்தில் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்...இடை வழியில் ஏறிக் கொண்டவன்...என்னுடனேயே இறங்கிக் கொண்டான்...வீடு வரை நடந்தே செல்ல வேண்டுமென்பதால் இருவரும் செல்ல வேண்டிய பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினோம்...

இருவருமே சிறுவயதிலிருந்தே நண்பர்கள் என்ற காரணத்தினால் மற்றவர்களின் துளைக்கும் பார்வைகளுக்கு உள்ளாக வேண்டிய கொடுமை இருக்கவில்லை...சிறுவயதிலிருந்தே அந்த ஊர் மக்களிற்கும் நாம் இருவருமே அறிமுகம் என்பதால் சகஜமாகவே அவனோடு நடந்து செல்ல முடிந்தது...

இல்லையென்றால் அண்ணனும் தங்கையும் ஒன்றாகச் சென்றாலே விநோதமாகப் பார்க்கும் இந்த உலகத்தில் ஒரு ஆணோடு நட்பாக கதைத்தால் கூட அது தவறான கண்ணோட்டத்தில்தானே பார்க்கப்படுகின்றது...இதில் காதல் என்றால் சொல்லத் தேவையில்லை,இலவசமாகவே அவர்கள் வாய்களிற்கெல்லாம் அவல் கிடைத்தது போல்...

ஆணைப்பற்றி ஏனோ சமூகம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை,ஆனால் பெண்....அவளுக்கு உடனேயே நம் சமூகம் ஒழுக்கம் தவறியவள் என்ற முத்திரையையும் குத்திவிடுகின்றது...சமூகத்தைப் பற்றி கருத்தில் கொள்ளாமல் விட்டாலோ,அவள் மொத்தமாகவே விமர்சனத்திற்குள்ளாகி விடுகிறாள்...

இதைப்பற்றிய ஆராய்ச்சியிலேயே என் மனம் மூழ்கியிருக்க...அவனே பேச்சை முதலில் ஆரம்பித்தான்...

"எப்படியிருக்க நித்தியா...??.."

"ம்ம்.."என்று மட்டுமே முணுமுணுத்து வைத்தேன்...அதற்கு மட்டுமல்ல அவன் அடுத்தடுத்து கேட்ட அனைத்துக் கேள்விகளுக்குமே "ம்ம்" மட்டுமேதான் சொல்லிக் கொண்டே வந்தேன்...அழுகை தொண்டையை அடைத்துக் கொண்டிருந்ததில் வார்த்தைகள் வெளிவராமல் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது...

"உன்னோட படிப்பெல்லாம் எப்படிப் போகுது...??...உன்னோட தேர்வுகளும் நெருங்கிட்டு வருதில்ல...??..."

"ம்ம்..."

எங்கே அவனைப் பார்த்தால் அழுகை வெடித்துக் கிளம்பிவிடுமோ என்ற பயத்திலேயே அவன் மேல் பார்வையைச் செலுத்தாது தலையைக் குனிந்தபடியேதான் நடந்து கொண்டிருந்தேன்...ஆனால் கொஞ்ச நேரமாய் அவனிடமிருந்து எந்தச் சத்தமுமே இல்லாமல் இருக்கவும் அவன் பக்கமாய் பார்வையைத் திருப்பினேன்....

அருகே அவன் இருக்கவில்லை...ஓர்வித பதட்டம் எனக்குள் தொற்றிக் கொள்ள பின்னால் திரும்பிப் பார்த்தேன்...அவன் என்னிலிருந்து சிறிது தூரம் தள்ளி நின்றிருந்தான்...என்னையே யோசனையோடு நோக்கிக் கொண்டிருந்தவனின் விழிகளில் தெரிந்த வேதனையில் என் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் அதன் வசத்தினை இழக்க ஆரம்பித்தது...

அவனது வலிகளனைத்தையும் போக்க எனக்கு ஓர் விநாடி போதும்...ஆனால் என் கனவுகளை அடையாமல் காதலின் கதவுகளைத் திறந்து அவன் காதலை ஏற்றுக் கொள்ளவும் என் உள்ளம் இடமளிக்கவில்லை...

அவனது வேதனை என்னைத் தாக்கினாலும்,அது எதையுமே வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவன் அருகே சென்றேன்...

"என்ன,இங்கேயே நின்னுட்ட வருண்...??..."

"உனக்குத்தான் என் கூட பேசவே பிடிக்கலையே நித்தியா...பேச மட்டும்தான் பிடிக்கலையா...??இல்லை என்னையே பிடிக்கலையா..??..."

இதை அவன் என்னிடம் கேட்கும் போதே அவனது குரலிருந்த வலியினை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது...ஆனால் அதற்கான பதிலைத்தான் என்னால் அவனிடத்தில் சொல்ல முடியவில்லை...

மனதிற்குள் மட்டும் அழுதபடி வெளியில் மௌனமாகவே நின்றேன்...

"ஏதாவது பேசு நித்தியா....இப்படி மௌனமாவே இருந்து எதுக்குடி என்னை கொல்லுற...??..."

"இப்ப என்னால எதுவுமே சொல்ல முடியாது வருண்...உன்னோட காதலையும் என்னால ஏத்துக்க முடியாது...இப்போதைக்கு இதுதான் என்னோட முடிவு...அதில எந்த மாற்றமுமே இல்லை..."

"என்னை நீ எப்ப வேணும்னாலும் பார்க்க வரலாம்....என்னோட நல்ல நண்பனா மட்டுமே....உன்னோட காதலுக்கான பதிலுக்காக என்னைத் தேடி வந்தன்னா....அதுக்கான என்னோட பதில் இப்போதைக்கு மௌனம் மட்டுமேதான்..."

எங்கிருந்துதான் எனக்கு அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை....ஒரே மூச்சாக அவனிடத்தில் அனைத்தையும் சொல்லி முடித்த நான்...அவனது பதிலிற்காக காத்திருக்காமல் அங்கிருந்து கிளம்பினேன்....

அவனது பார்வை என்னைத் துளைப்பதை அறிந்தும்,அவனை நான் திரும்பிப் பார்க்கவில்லை...



தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (19-Dec-17, 9:18 pm)
பார்வை : 415

மேலே