தைமகளே வருக தமிழ்ப் பொங்கல் தருக கவிஞர் இரா இரவி
தைமகளே வருக ! தமிழ்ப் பொங்கல் தருக !
கவிஞர் இரா .இரவி !
தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சிப் பொங்கட்டும்
தரணியெங்கும் தமிழர் புகழ் ஓங்கட்டும் !
திக்கெட்டும் நல்ல தமிழ் நாடெங்கும் பரவட்டும்
தித்திக்கும் தமிழின் சுவை உலகம் அறியட்டும் !
உலகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில்
ஒப்பற்ற தமிழ் இருக்கை உடன் உருவாகட்டும் !
உலகத் தமிழர்கள் யாவரும் ஒன்றிணையட்டும்
உலகம் யாவும் தமிழ் மொழி ஒலிக்கட்டும் !
இன்னல் இல்லாத இன்ப வாழ்வு வசமாகட்டும்
இனியவை வாழ்வில் என்றும் மலரட்டும் !
மீனவர் வாழ்வில் வசந்தம் விரைந்து வரட்டும்
மண்ணில் உழவர்கள் வாழ்வு சிறக்கட்டும் !
உழைக்கும் மக்கள் வாழ்வு விடியட்டும்
உணர்வு தமிழ் உணர்வு எங்கும் பெருகட்டும் !
உலகில் எங்கு வாழ்ந்த போதும் தமிழர்களின்
உள்ளத்தில் தமிழ்ப் பற்று நிலைக்கட்டும் !
உலகின் முதல் மொழியான தமிழ் சிறக்க
உலகத் தமிழர் யாவரும் உதவட்டும் !
தமிழர்களின் குழந்தைகளுக்கு யாவரும்
தமிழில் பெயர் சூட்டி மகிழட்டும் !
தமிழர்களின் குழந்தைகளுக்கு யாவரும்
தமிழ் கற்பிக்க முன்வரட்டும் !
மழலைகளின் உதடுகள் தாய் மொழி
மறக்காமல் நாளும் பேசட்டும் !
தைமகளே வருக ! தமிழ்ப் பொங்கல் தருக !
தமிழர்களின் வாழ்வில் இன்ப ஒளி தருக !