காக்கிப்பை வரவு

காக்கிப்பை வரவு
--------------------------------
கடல்தாண்டிப் போனவரும் காகிதம் போட்டுக்
== கணக்காகத் திங்களொரு காலம் போச்சு
உடல்தாண்டி இங்கிருக்கு உசிருன் கூட்டில்
== உரசித்தான் வாழ்ந்திருக்கு ஒயிலே என்று
மடல்வாழை அடுக்காக மடல்தோ ருந்தான்
== மல்லிகைப்பூக் கவிதைவரி மையில் வார்ப்பார்
படித்ததனைத் துணையாகப் பக்கம் வைத்துப்
== படுக்கையிலே புரண்டகனா பலநூ ராச்சு

தலையில்நீர்க் கோர்த்திருக்கத் தடுமன் காணத்
== தாங்காமல் மருந்தொன்று தரவே கேட்டார்
விலைகொடுத்த பலமருந்தும் வீணாய்ப் போக
== விருந்தான தமிழ்மருந்தை வேகம் கேட்டார்
தலைவாழை இலையினிலே சாதம் ஏற்பீர்
== தக்காளி சீரகமும் திப்பிலி சேர்த்து
மலைப்பூடு மிளகோடு மணக்கும் ரசத்தை
== மத்தியான உணவோடும் மாலையும் கொண்டு

காத்தவரா யன்சாமிக் கடவுள் பேரில்
== கால்காசு முடிந்துவைக்கக் கடிதம் போட்டேன்
பார்த்தாரோ பதிலதனைப் பயன்பெற் றாரோ
== பகற்பொழுது வேலைக்குப் போய்வா றாரோ
வேர்த்திருக்கேன் நானுமிங்கே விவரம் தேடி
== வேதனைகள் உள்ளத்தே வேர்விட் டோடி
காத்திருப்புத் தொடர்கிறதே கவலை பூத்தே
== காக்கிப்பை தபால்காரர் கால்த்தடம் பார்த்தே !

... மீ.மணிகண்டன்
#மணிமீ

எழுதியவர் : மீ.மணிகண்டன் (23-Dec-17, 4:11 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 518

மேலே