என்னத்த நானு கேட்க

வாக்கப்பட்டு வந்த நாளு
நெஞ்சுக்குள்ள இன்னும் இருக்கு
ஏராளமா வெக்கத்தையும்
தாராளமா நகையையும்
பூட்டித்தான் அனுப்புனாக...

ராத்திரிக்கு தோழிங்க
கேலி செஞ்சி உள்ளே அனுப்ப
கைகாலு நடுங்கிடுச்சு...
ஆசையா பக்கத்துல வந்து
அள்ளி அணைச்சு கொஞ்சினாக!
வெளையாட்டு சேதி பேசி
வெக்கத்த வெரட்டினாக!

அதிகாலை கதவைத் தட்டி
குளிச்சிட்டு வாரச் சொல்லி
விவரமா விரட்டுனா நாத்தனா?
திரும்பி வந்து பாக்கையில
நகை மரமா நிக்கிறா!
அம்புட்டும் என்னோடது...

என்னத்த நா கேட்க?
வெக்கத்த அவரு எடுத்துகிட்டாரு!
நகையை இவ புடுங்கிக்கிட்டா!
மனசை தேத்திக்கிட்டு
மறுவீடு போயி வந்தேன்

அவசரமா கிளம்பினதில
அலமாரியில வச்சதை மறந்துவிட்டேன்னு
அம்மாவைச் சமாளிச்சேன்
முத்தானை சேலையை முழுசா
இழுத்துவிட்டு
அப்பாகிட்டே தப்பிச்சேன்.
நாலைஞ்சு வருசம் முடிஞ்சு நாத்தனார
பொண்ணு பாக்க வந்தாக

புதுத்தாலி கட்டிகிட்டு
மொத்த நகையும் போட்டுகிட்டு
கையை கையை ஆட்டிப்புட்டு
கார்லே போனா... மகராசி
மூனு நாளுல வந்து நின்னா
மஞ்சக்கயிறு மட்டும் கழுத்துல...

என்னாடின்னு?
மாமியா பதைக்க...
நாத்தனா எல்லாத்தையும்
போட்டுகிட்டாங்கம்மான்னு
மூக்கைச் சிந்தி போடுறா?

எழுதியவர் : kalavisu (25-Dec-17, 11:11 am)
சேர்த்தது : kalavisu
பார்வை : 266

மேலே