இளம்வாசகர்கள்
துணையெழுத்து வெளியான நாட்களில் அது குறித்து விக்னேஷ் என்ற இளைஞர் இணையத்தில் எழுதியுள்ள பதிவு. சமீபத்தில் இதை ஒரு பொறியியல் கல்லூரி மாணவி இந்த பதிவிலிருந்து என்னை தேடி வாசிக்க துவங்கியதாக கூறி விக்னேஷிற்கு நன்றி தெரிவித்திருந்தார். இளம்வாசகர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதற்குச் சாட்சியமாக இதை மீள்பிரசுரம் செய்கிறேன்
S.ராமகிருஷ்ணன்
Posted by Vignesh
----------------------
தமிழகத்தில் முன்னணியில் நிற்கும் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் அண்மையில் எழுதி வெளியிட்ட நாவல் “இடக்கை”. இந்த நாவல் பற்றிய விமர்சனம் “புத்தகம் பேசுது” ஏப்ரல் இதழில் வெளிவந்துள்ளது.
அந்த நாவலில் சமுதாயத்தில் மிகக் கீழ் ஜாதியாக தள்ளப்பட்டுள்ள “தூமகேது” என்ற பெயர் கொண்ட பாத்திரமும் மன்னன் அவுரங்கசீப்பின் அந்தரங்கப்பணிப் பெண்களில் ஒருத்தியான அஜ்யா என்ற பெயர் கொண்ட அரவாணி பாத்திரமும் மனதில் நிற்பவைகளாக நாவல் படைக்கப்பட்டுள்ளன, புத்தக அறிமுகத்தில் அஜ்யா பற்றி அதிகம் எழுத இயலவில்லை. ஆகவே அதை தனிக்கட்டுரையாக எழுதியிருக்கிறேன்
தமிழில் அரவாணிகளை மையக்கதாபாத்திரமாக கொண்ட நாவல்கள் குறைவு. வரலாற்றில் திருநங்கைகள் நடத்தப்பட்ட விதம் பற்றி இதுவரை எந்த நாவலும் எழுதப்பட்டதில்லை. அவ்வகையில் இடக்கை முதல்முயற்சி. இதன் மையக்கதாபாத்திரங்களில் ஒன்றான அஜ்யா பேகம் ஒரு திருநங்கை. அவளை மிகச்சிறந்த கதாபாத்திரமாக எஸ். ராமகிருஷ்ணன் உருவாக்கிச் சாதனை செய்திருக்கிறார்.
மாமன்னன் ஒளரங்கசீப் மாண்ட பிறகு, அவசர அவசரமாக அஜ்யா பேகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்படுகிறாள்.
மன்னனின் நம்பிக்கைக்கு பாத்திரமான அவள், ஏன் சிறையில் அடைக்கப்பட வேண்டும்? ஒளரங்கசீப்பின் மகன் இளவரசன் முகமது ஆஜம் அவளைக் கடுமையாக வெறுத்தான். அவள் ஓர் அடிமைப்பெண். அவள் மீது என் தந்தை வைத்திருந்த நம்பிக்கையைக் கூட என் மீது வைத்திருக்கவில்லையே என்கிற கோபம். அவள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு இது மட்டுமல்ல காரணம். ஒளரங்கசீப் கடைசியில் எழுதி வைத்த உயிலும் அதற்குக் காரணமாக இருந்தது. அந்த உயிலில் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற மர்மம் கதையை சுவாரஸ்யமாக முன்னெடுத்துப் போகிறது.
அஜ்யா ரகசியத்தை வெளிக்கொணர சிறையில் அடைக்கப்படுகிறாள். அடி, உதை சொல்லொனா சித்திரவதைகளுக்கு ஆளாகிறாள்
ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் போட்டியில் மன்னர் போன்ற மேலிடத்து உறவில் இருந்தவர்களுக்கு இப்படிப்பட்ட துயரங்கள் வரத்தான் செய்யும். எல்லோர் மீதும் சந்தேகம், எல்லோர் மீதும் பகை. ஒளரங்க சீப்பும் அப்படி ஆட்சிக்கு வந்தவர்தான். மேலிடத்தில் மன்னனிடத்தில் நெருக்கமாக இருந்தக் காரணத்தால், மேலிடத்து அதிகாரம், தலைமை மாறுகிறபோது, நெருக்கமாக இருந்த நபர்களுக்கு இப்படிப்பட்ட தொல்லைகள் வந்துதான் தீரும். அஜ்யா பேகமும் இதைத் தெரிந்துதான் வைத்திருந்தாள்.
அஜ்யாவை போல வரலாற்றில் நிறைய திருநங்கைகள் அரசனுக்கு நெருக்கமாக இருந்து அவருக்காக உயிர்விட்டிருக்கிறார்கள். ஆனால் அஜ்யா போல எவரும் மனசாட்சியை கேள்விகேட்பவர்களாக உருவாக்கபடவில்லை
தனக்குக் கிடைத்த சிறைதண்டனை பற்றி அஜ்யா பேகம், வாழ்க்கையில் அடிபட்டு ஒரு முதிர்ந்த பக்குவமடைந்த நபரைப் போல்தான் சிந்திக்கிறாள்.
“மாமன்னரின் அந்தரங்கப் பணியாளராக இருப்பது சாவோடு தோழமைக் கொள்ளுவது போலத்தான்”.
“ஆனால் சாவு என்ன செய்துவிடும்? வாழ்வின் சிரமங்களை விடவா சாவு கொடுமையானது! எத்தனை அவமானங்களை, வலி,வேதனைகளைக் கடந்ததாகிவிட்டது. இனி என்ன நடந்துவிடப் போகிறது”?
ஒளரங்கசீப் விஷயத்தில் அஜ்யா அவரை விளையாட்டுச் சிறுவனைப் போல நினைத்தாலும், மறு நிமிடமே அவர் செய்த குற்றங்கள், மன்னிக்க முடியாத குற்றங்கள் அவளது நினைவுக்கு வந்து போகின்றன
ஒளரங்கசீப்பின் மகன் உத்தரவால் சாவை எதிர்நோக்கி சிறையில் அடைக்கப்பட்ட
அஜ்யாபேகத்தின் கடந்தகால நினைவு அலைகள் எப்படி எழுவதும் விழுவதுமாக இருந்தன என்பது சுவாரஸ்யமான ஆனால் சோகமும் தோய்ந்த செய்தி
எத்தனையோ இரவுகள், பகல்கள் உறங்காமல் மாமன்னின் கால்களைப் பிடித்து விடுகிறாள் அஜ்யா பேகம், எத்தனையோ முறை பேரரசர் அவளோடு ஒன்றாக உணவருந்த செய்திருக்கிறார். சகோதரி என அழைத்து பரிசுகள் வழங்கியிருக்கிறார்.
அஜ்யா விட பேரரசர் வயதில் மூத்தவர், பிடிவாதமான கிழவர் என்றுகூட நினைப்பதுண்டு.. சில நேரங்களில் “அஜ்யா” எனக் கூப்பிடுவார். சில நேரங்களில் “மகளே” என்று கூட அழைத்தார்.
மன்னர் தனிமையில் சில நேரங்களில் கண்ணீர்விட்டு அழுவதுண்டு. அதை அஜ்யா கவனித்ததுண்டு. ஆனால் அந்த கண்ணீரைத் துடைக்க துணிவு இருந்ததில்லை. திருநங்கைக்கு அந்த உரிமை கிடையாதே.
ஒளரங்கசீப்பிற்கும் அஜ்யாவிற்குமான உரையாடல் உணர்வுபூர்வமானது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துத் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
“மாமன்னரே, இந்க உலகில் யாருக்கும் கிடைக்காத இடம் எனக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் மனத்தின் மூலையில் இந்த ஏழை அடிமைக்கு ஓர் இடம் தந்ததைவிட வேறு என்ன பரிசு கிடைத்துவிடப் போகிறது? எனக்கென யாரும் இல்லை. இந்க உலகம் என்னை பரிகாசம் செய்தது. அவமானப்படுத்தியது. உங்கள் நிழலுக்கு வந்த பிறகுதான் நான் சந்தோஷங்கொள்ளத் துவங்கினேன்”.
“அஜ்யா உனக்கு எதன் மீதும் ஆசையில்லையா”?
“இருந்தது. அந்த வயதைக் கடந்துவிட்டேன். இப்போது எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டுமே உள்ளது.”
“சொல் உடனே நிறைவேற்றிவைக்கிறேன்”.
“உங்கள் கைப்பட எனக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதித்தர வேண்டும். ஆயிரம் ஆயிரம் உத்தரவுகளை, ஆணைகளை, கொடைகளை எழுதிய உங்கள் கைகள் என் பெயரை ஒருமுறை எழுத வேண்டும். அந்தக் கடிதத்தை என் உயிர் உள்ளவரை பாதுகாத்து வைத்துக்கொள்வேன். “
அஜ்யா கடிதம் என்ன? என் உயிலில் உன்னைப்பற்றி எழுதிவிடுகிறேன். நீ இல்லாமல் என் இறுதிக் காரியம் நடக்காது. என் கைப்பட குரான் எழுதிக் கிடைத்த வருவாயை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அதில்தான் என் சவத்துணி வாங்கப்பட வேண்டும். என் பெயர் உலகில் வாழும் காலம் வரை நீயும் இருப்பாய். இப்போதே அந்த ஆணையை எழுதிவிடுகிறேன்”.
அவ்வாறே சிப்பந்தியை அழைத்து இந்த விஷயம் பதிவு செய்ய ஏற்பாடாகிவிட்டது.
அஜ்யா கண்ணீர்மல்க நன்றி சொன்னாள். நெஞ்சம் நெகிழ மாமன்னர் சொன்ன வார்த்தைகள்,
“அஜ்யா இந்த உலகம் பெண்களின் அன்பால்தான் உயிர்ப்புடன் உள்ளது. அந்த அன்பை உணராத ஆண்களில் நானும் ஒருவன்”.
நாவலை படித்து முடித்தபிறகு அஜ்யாவின் துயரம் நம்மை வெகுவாக பாதிக்கிறது. அவளுக்காக நாம் வருந்துகிறோம். மறக்கமுடியாத கதாபாத்திரமாக அவள் மனதில் தங்கிவிடுகிறாள்.
ஔரங்கசீப்பின் உயிலில் ஒரு சொல்லாக மட்டும் இடம் பெற்றுள்ளார் அஜ்யா, அந்த வரலாற்றுக் குறிப்பை வைத்துக் கொண்டு மகத்தான நாவல் ஒன்றை எஸ் ராமகிருஷ்ணன் படைத்திருப்பது அவரது சாதனை. அவ்வகையில் இடக்கை தமிழின் மகத்தான நாவல்கள் வரிசையில் இணைந்திருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மனம் நிரம்பிய பாராட்டுகள்
••
.