கழுவேற்றமும் சைவமும்--------------------------விவாத மேடை ---சிந்தனைக் களம்

அன்புள்ள ஜெ



சமணர் கழுவேற்றம் குறித்த பதிவுகளையும் , அதுசார்ந்து _ எழுதிய நூலைப்பற்றிய குறிப்பையும் வாசித்தேன். அந்நூலை வரவழைத்துப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதை அறிமுகம்செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.



பெரியபுராணத்திலேயே இந்தச் செய்தி உள்ளது. ஆகவேதான் இது இத்தனைப் பிரச்சாரம் கண்டது. மரபான சைவனுக்கு பெரியபுராணம் ஒரு பெரிய மூலநூல். அதை அவன் பொய்யெனச் சொல்லமாட்டான்



உங்கள் குறிப்பு என்னையும் கொஞ்சம் அசைத்துவிட்டது



கணேஷ் நமச்சிவாயம்



அன்புள்ள கணேஷ்,



பொதுவாக இத்தகைய செய்திகள் எப்படி உருவாகின்றன, வளர்கின்றன என்று பார்த்தால் இதைப்புரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் மதப்போர் புதிது அல்ல. இது நடந்துகொண்டேதான் உள்ளது. இதை முழுமையாகத் தவிர்ப்பது முடியாது. மகாபாரதத்திலேயே சார்வாகனை வைதிகர்கள் எரித்துக்கொலைசெய்த நிகழ்வு உண்டு. கபிலர் கல்லால் அடித்துக்கொல்லப்பட்டார் என்று செய்தி உண்டு



ஆனால் இங்குள்ள சமயப்போர்கள் தொண்ணூறுவிழுக்காடு தீவிரமான கருத்துப்பூசல்களாகவே இருந்துள்ளன. அந்தப்பூசல்களை நாம் நீலகேசியில் காணலாம். மணிமேகலையில் காணலாம். இறுதியாக ராமலிங்க வள்ளலார் சார்ந்த அருட்பா மருட்பா விவாதம் வரை அதைக்காணலாம்.



ஆனால் இந்தவிவாதங்கள் பொதுவாக வன்முறையாக மாறவில்லை.[ நூறாண்டுகளுக்குப்பின் ராமலிங்கவள்ளலாரைக் கொல்ல ஆறுமுகநாவலர் சதிசெய்தார் என்றெல்லாம் எழுதினாலும் எழுதுவார்கள்] அதை நாம் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காண்கிறோம். கோவலன் எல்லா மத ஆலயங்களிலும் வழிபடுகிறான். மணிமேகலையில் பல்வேறு மதத்தரப்பினர் இயல்பாக ஓரிடத்தில்கூடி விவாதிக்கிறார்கள்.



அதேபோல அரிதாக இங்கே மன்னர்கள் தீவிர மதநம்பிக்கையால் மாற்றுமத ஆலயங்களை இடித்துள்ளனர். கர்நாடக வீரசைவ அரசர்கள் குஜராத்தில் இடித்த வைணவ ஆலயங்கள் சிலவற்றைக் கண்டிருக்கிறேன். ராஜேந்திரசோழன் கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் ஆலயங்களை இடித்தது வரலாறு. ஆனால் பொதுவாக அவ்வாறு நிகழ்ந்ததில்லை. மிகப்பெரும்பாலான அரசர்கள் எல்லா மதங்களையும் அரசின் நலம் கருதி பேணுபவர்களாகவே இருந்தனர்.



நாகைசூடாமணி விகாரம் போன்ற பௌத்த நிலையங்கள் சோழர்காலத்தில்தான் அரச ஆதரவுடன் தழைத்திருந்தன. தமிழ்நாட்டில் இன்றுள்ள மேல்சித்தமூர் ஆலயம், உளுந்தூர்பேட்டை அப்பாண்டநாதர் ஆலயம் போன்ற பல ஆலயங்கள் வைணவர்களான நாயக்க அரசர்களால் கட்டப்பட்டவை. பௌத்தபள்ளியின் நிலத்தை வைணவர்கள் ஓர் ஓடைவெட்டுவதற்காக எடுத்துக்கொண்டபோது சமானமான நிலத்தை அவர்கள் பௌத்தபள்ளிக்கு அளிக்கவேண்டும் என்று நாயக்க அரசர்கள் ஆணையிட்ட செய்திகள் செப்பேடுகளில் உள்ளன. இது எவராலும் மறுக்கமுடியாத வரலாறு



தமிழ்நாட்டில் கொடிய மதமோதல்கள் நிகழ்ந்தமைக்கான சான்றுகள் ஏதுமில்லை. ஆனால் மதப்பூசல் இருந்துகொண்டுமிருந்தது. அப்படியென்றால் இந்தக் கழுவேற்றக்கதைகளின் அடிப்படை எது? முதன்மையாக நாம் பார்க்கவேண்டியது பக்தி இயக்கத்தின் சூழலை. பக்தி இயக்கத்தின் அடிப்படை உணர்வுநிலைகள் இரண்டு. ஒன்று அறிவார்ந்த தத்துவநோக்கை நிராகரித்து உணர்ச்சிகரமான பக்தியை முன்வைப்பது. இரண்டு வெவ்வேறு சாதிகளின் நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் ஏற்று சைவ-வைணவப் பெருமதத்திற்குள் கொண்டுசெல்வது.



அவ்வாறு பக்தியை நிறுவுவதற்காகவே ஆழ்வார், நாயன்மார்களின் கதைகள் புனைவாக்கம் செய்யப்பட்டன. அவை உண்மையில் வெவ்வேறு இடங்களில் காலங்களில் வாழ்ந்தவர்களின் வரலாறுகள். ஆனால் அவை புனைவாக மிகைப்படுத்தப்பட்டன. இன்று எம்ஜிஆர் அல்லது கிருபானந்தவாரியார் வரலாற்றைக்கூட நாம் அவ்வாறு மிகையாக்கிக்கொள்கிறோம். கருணாநிதி பற்றி ஒரு பக்திப்புராணத்தை நம் கண்முன் தி ஹிந்து கட்டமைத்துக்கொண்டிருக்கிறது. இது நம் பொதுமனநிலை.



அதோடு சைவ பக்திப்புராணங்களில் எல்லாம் கிறிஸ்தவத்தின் வலுவான சாயல் உண்டு. இதை நான் பலமுறை எழுதியிருக்கிறேன். கிறித்தவம் அப்போது இங்கே வலுவாக இருப்பு அறிவித்துவிட்டது. கிறித்தவப்புனிதர்கள் அடைந்த துன்பங்கள், கடவுள் அவர்களுக்கு உதவிசெய்தது போன்றகதைகளை ஒட்டியே சைவநாயன்மார்களின் கதைகள் கட்டமைக்கப்பட்டன. அவற்றுக்கு இந்தியமரபில் பெரிய முன்தொடர்ச்சி ஏதுமில்லை.



உதாரணமாக, இந்தியாவில் இரு பெருமதங்கள் தோன்றி இந்தியாவையே ஆட்கொண்டிருக்கின்றன. அவர்களை இந்துமன்னர்கள் சித்திரவதை செய்ததாகவோ கொன்றதாகவோ எந்தக்கதையும் இல்லை. பௌத்த சமண மதங்களில் அப்படி ‘தியாகியாக’ ஆன புனிதர்கள் எவருமில்லை. அந்த ‘டெம்ப்ளேட்’ நமக்கு மேற்கிலிருந்து வந்தது.



சைவமதம் பக்தி இயக்கத்தின் மையப்போக்காக ஆனபோதுதான் இக்கதைகள் அனைத்துக்கும் ஒருவகை ‘ஆதாரத்தன்மை’ வந்தது. வெள்ளெலும்பை பெண்ணாக்கியதையும் கற்பாறை தெப்பமானதையும் ஒருவர் நம்பினால் சமணர் கழுவேற்றத்தையும் நம்பலாம். நாம் பேசிக்கொண்டிருப்பது அவர்களிடமல்ல. வரலாற்று ஆர்வமுடையவர்களிடம்



இதன்பொருள் இங்கே மதப்பூசல் இல்லை என்றல்ல. மதம் சார்ந்த கொலைகள் நடைபெறவில்லை என்றும் அல்ல. ஆனால் ஓர் உறுதியான மையத்தில் தொகுக்கப்பட்டதும், இறுதியான நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல்படுவதும், அரசமதமாக ஆனதுமான மதத்திற்கும் பிறமதங்களுக்குமான போரே பேரழிவுத்தன்மை கொள்ளமுடியும். இந்தியப்பெருநிலம் எப்போதுமே அப்படி இருந்ததில்லை என்றுமட்டுமே நாம் சொல்லமுடியும்.

.



இங்கே அரசு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் கொண்டது அல்ல. அதன் அதிகாரம் பலநூறு அதிகார அமைப்புகளின் கூட்டாக உருவாகி வந்தது. சாதிக்குழுகக்ள், சிற்றூர்கள், குறுநில அரசுகள் தன்னிச்சையான அதிகாரமும் ஆட்சியும் கொண்டிருந்தன.அரசன் ஒரு சமரச ஆட்சியையே அளித்துவந்தான். ஆகவே அரசமதம் என்பது இங்கே இருக்கவில்லை. அரசனின் மதம் அவனுடையது, அதை அவன் நாடெங்கும் மூர்க்கமாக நிலைநாட்டமுடியாது. அத்தனை சோழ, பாண்டிய சைவ அரசர்களும் வைணவ ஆலயங்களை பேணினர், புதிதாகக் கட்டினர். அத்தனை நாயக்க வைணவ அரசர்களும் சைவ ஆலயங்களைக் கட்டினர். வேறுவழியில்லை.



அத்துடன் இங்கிருந்த மதநம்பிக்கை என்பது முழுமையான விசுவாசம் அல்ல. இங்கிருந்தது எப்போதும் மூன்றடுக்கு மதநம்பிக்கை. முதலடுக்கில் தத்துவார்த்தமான ஏற்பாக ஒருமதம். அது சைவமோ வைணவமோ பௌத்தமோ சமணமோ ஆகலாம். இரண்டாவது அடுக்கில் பொதுவான தெய்வவழிபாடுகள். மூன்றாவது அடுக்கில் குடித்தெய்வ, குலத்தெய்வ வழிபாடுகள். ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் இவை ஒரே நபரால் கடைப்பிடிக்கப்பட்டன – இன்றும் இதே மனநிலைதான் திகழ்கிறது. கண்ணனை பாடிய வேதாந்தியான பாரதியின் குலதெய்வம் தேசமுத்துமாரி. ஆகவே மதம் ஒற்றைப்படையான ஆதிக்கமாக இருக்கவில்லை. அதனாலேயே வன்முறைப்பூசலாக அது மாறவில்லை. எப்படியாவது மதப்போரைக் கண்டுபிடிக்கவேண்டும், அல்லது உண்டுபண்ணியாவது ஆகவேண்டும் எனத் துடிப்பவர்கள் எவர் என நாம் அறிவோம்



ஜெ
-----------
சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை
அன்புள்ள ஜெ
நீங்கள் அடிக்கடி கூறும் உதாரணம் தான் . ஐந்து நட்சத்ர உணவு விடுதியில் ரசம் என்ற பெயரில் வழங்கப்படும் வஸ்து .அது போலத்தான் காலனிய கால கட்டத்தில் அவர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்ட சமய நெறிகளும் .ஆனால் அந்த ஆய்வாளர்களை அப்படியே புறக்கணிக்கவோ , முழுமையாக குற்றம் சொல்லவோ முடியாது தான் .அதற்கான தகுதியை இந்தியர்கள் இன்னும் அடையவில்லை .கடந்த 300 வருடங்களில் அவர்கள் அளவிற்கு கடுமையாக இத்துறையில் உழைத்தவர்கள் நம்மிடையே அதிகம் இல்லை .மேலை நாட்டு ஆய்வாளர்களில் பலருக்கு மத , காலனிய ஆதிக்க நோக்கங்கள் இருந்தது .ஆனால் ஒரு சில ஆய்வாளர்கள் இத்தகைய நோக்கங்கள் இல்லாமல் ஆய்வு செய்துள்ளனர் . நீங்கள் சுட்டி காட்டியது போல அவர்கள் தங்கள் வசம் இருந்த அளவு கோல்களால் ஹிந்து மதத்தை புரிந்து கொள்ள முயன்றார்கள் .இன்று நம்மவர்களும் அதே அளவு கோல்கலை கையில் வைத்துக் கொண்டு திரிவது தான் வருத்தத்திற்கு உரியது
பி.கு : பிக்ஷுவின் பெயர் அநகாரிக தர்ம பாலர் .ஒரே இடத்தில் தங்காதவர் என்று பொருள் என எண்ணுகிறேன். பிழை திருத்தம் மென்பொருள் / ஊக மென்பொருள் உங்கள் கட்டுரையில் அநாகரிக தர்ம பாலர் என்று மாற்றி விட்டது என்று எண்ணுகிறேன் .
நன்றி
அனீஷ் க்ருஷ்ணன் நாயர்



அன்புள்ள ஜெயமோகன்,

தினமும் பத்திரிகைகளில் வரும் புராதனச் சிலைத் திருட்டுச் செய்திகள் பெரும் ஆயாசத்தை அளிக்கின்றன. இவற்றில் கடந்த இருநாட்களாக பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கும் செய்தி, பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நிகழ்ந்திருக்கும் சிலை திருட்டு, இதை சிலைத் திருட்டு என்று சொல்வதை விட, திட்டமிட்ட கலாசார அழிப்பு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

திருச்சி அருகேயுள்ள எங்கள் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர், உங்கள் கோவிலில் பாதுகாப்புக் குறைபாடு உள்ளது என்று சொல்லி எங்கள் ஊரின் லக்ஷ்மிநாராயணப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவித் தாயார் ஐம்பொன் விக்ரஹங்களை எவ்வித அறிவிப்புமின்றி ஒருநாள் வந்து அறநிலையத்துறையினர் எடுத்துச் சென்றுவிட்டனர். இது போல எடுத்துச் செல்லப்படும் விக்ரஹங்கள் அனைத்தும் ஒரு கோடவுனில் பூட்டி வைக்கப்படுகிறது. அவ்வாறாக பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலிலுள்ள, 39 ஆண்டுகளாக எவ்வித பூஜைகளும் அற்று, பூட்டிக் கிடந்த கிடங்கிலிருந்து 7 புராதன விக்ரஹங்கள் திருடி போயுள்ளன, இது தவிர, 900 ஆண்டுகள் பழைமையான மாணிக்கவாசகர் சிலைக்குப் பதிலாக புதிதாக செய்யப்பட்ட சிலை ஒன்று மாற்றாக வைக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிடங்கிலிருந்து திருடு போகும் இவற்றிற்கு யார் பொறுப்பேற்பது? அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருக்கும் கோவில்களுக்கு தக்க பாதுகாப்பை ஏற்படுத்துவது யார் பொறுப்பு? இதற்கெல்லாம் என்ன தீர்வு? கற்சிற்பங்களைக் காயப்படுத்துவதும், கல்வெட்டுகளை அழிப்பதும், உலோக சிற்பங்களைக் களவு கொடுப்பதுமே அறநிலையத்துறையின் பணியாகவல்லவா இருக்கிறது?

அன்புடன்,

பாஷ்யம்.

எழுதியவர் : (27-Dec-17, 7:43 am)
பார்வை : 97

மேலே